செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை | மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் | வடக்கு ஆளுநர்

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை | மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் | வடக்கு ஆளுநர்

2 minutes read

அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்க பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் சமூகப் பராமரிப்பு நிலையத் திறப்பு விழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் அருகில் நடைபெற்றது.

நிலையத்தின் பெயர்ப் பலகையை ஆளுநர் திரை நீக்கம் செய்துவைத்து, நாடா வெட்டி அலுவலகத்தை திறந்துவைத்தார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ‘மகளிர் மாண்பகம்’ இணையத்தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,

பொதுமக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியதாக அரச சேவை அமையவேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அதை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றார். அத்துடன் தற்போதைய அரசாங்கம் இலத்திரனியல்மயப்படுத்தலை (Digitalization) தனது கொள்கையினுள் ஒன்றாக அறிவித்துச் செயற்படுத்துகிறது.

நவீனமயப்படுத்தினாலும், சேவைகளை மக்களுக்கு வழங்கப்போவது இலத்திரனியல் சாதனங்கள் அல்ல. அலுவலர்கள்தான் மக்களுக்கான சேவைகளைச் செய்யப்போகிறார்கள். எனவே, அலுவலர்கள் மக்களுக்கான சேவையை விருப்பத்துடன் செய்யவேண்டும். இவ்வளவு ஆளணியை வைத்துக்கொண்டு எங்களால் அவ்வாறான சேவையைச் செய்ய முடியும். சேவை செய்வதற்கான விருப்பமே இங்கு முக்கியம்.

அதேவேளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் தனது உரையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பகுதியில் அதிகளவான காணிகளை வன உயிரிகள் திணைக்களம் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என்ற விடயத்தை முதலில் குறிப்பிட்டிருந்தார்.

வன உயிரிகள் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் என்பனவற்றின் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகின்றேன்.

அவர் இரண்டாவதாக, பருதித்தித்துறையில் இருந்து இந்தப் பிரதேசத்துக்கான வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீதியின் மோசமான நிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் நான் உரிய தரப்புக்களுடன் பேச்சு நடந்தியுள்ளேன். அந்த வீதி நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருவதால்தான் புனரமைப்பு தாமதமடைகிறது. விரைவில் அந்த வீதியும் மறுசீரமைக்கப்படும்.

உங்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்போது நீங்கள் சேவைகளை திறம்பட – விரிவாக்கிச் செய்யவேண்டும். சுற்றறிக்கைகளுக்கு அமைவாக உங்களால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல்போகும்போது, மக்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றலாம் என்று சிந்தியுங்கள்.

அதை விடுத்து, ஏழை மக்களுக்கு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று சொல்லித் திருப்பி அனுப்பாதீர்கள்.

இன்று வெளிநாடுகளிலிருந்து உதவுவதற்கு பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்களில் பலர் இங்கு தேவையில்லாமலும் பணம் கொடுக்கின்றனர். அதை ஒழுங்குமுறைப்படுத்தினாலே, இங்கு வறுமையின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு உதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் செய்யலாம்.

அதேபோல அரசாங்கம் சமூக நிவாரணங்களை, தேவைப்படும் மக்களுக்கு வழங்குகிறது. அந்த நிவாரணங்கள் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

இத்தகைய நிவாரணங்கள் வழங்கப்படுவது உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருமானத்தை அதிகரிப்பதற்காகவே.

எனவே அந்த நிவாரணத்தைப் பெற்று உங்களின் வருமானத்தை உயர்த்தவேண்டுமே தவிர, அந்த நிவாரணங்களில் தங்கி வாழக்கூடாது என்றார்.

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் செல்வி அகல்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலர் பொ.வாகீசன், யாழ். மாவட்டச் செயலக மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், பிரதி பிரதம செயலர் – பொறியியல் எந்திரி ந.சுதாகரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவகெங்கா, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களப் பணிப்பாளர் சுஜீவா சிவதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More