யாழிலுள்ள வேட்புமனுத் தாக்கலின்போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 22 கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வேட்பு மனு நிராகரிப்பில் அரசியல் காரணங்கள் இருப்பதாக சில தரப்பினர் குற்றம் சாட்டியமை தொடர்பில் கேட்டபோதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிலரது குற்றச்சாட்டை பார்க்கிறபோது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களிற்கு நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்ததுபோல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என்பது வெற்றுக் கதைகள் மட்டும் தான். ஆகவே வெறும் கதைகளை யாரும் கதைக்க தேவையில்லை. எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.
தாங்கள் தவறுகளை இழைத்துவிட்டு எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிற இந்த மாதிரியான கூற்றுக்களுக்கு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
இங்குள்ள ஒரு சபை கூட நிராகரிக்கப்படாமல் 17 சபைகளிலும் சரியாக செய்து தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பதென்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை.
அதனாலேயே தேவையில்லாத விமர்சனங்களை செய்கின்றனர். எது எப்படியாயினும் எங்களுடைய வெற்றி உறுதியானது என தெரிவித்தார்.