செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் இலங்கைக்குப் பாரிய அச்சுறுத்தல்! – பதறுகின்றார் தயாசிறி

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் இலங்கைக்குப் பாரிய அச்சுறுத்தல்! – பதறுகின்றார் தயாசிறி

1 minutes read

“யுத்தத்தின் போது பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். ஆனால், அது குறித்த விசாரணைகள் உள்ளகப் பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களான புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் நாட்டுக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகலில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இதற்கு முன்னர் 58 பேருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இதனை வழக்கமாகக் கொண்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் பிரித்தானியா தடை விதிப்பது இதுவே முதன்முறையாகும். எவரேனும் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அவை நிரூபிக்கப்பட்டால் அன்றி, குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமைக்காக மாத்திரம் தடை விதிப்பது பொறுத்தமற்றது.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகளின் பின்னர் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. பட்டலந்த ஆணைக்குழுவில் ஆரம்பித்தது இன்று இந்த நிலைமையில் வந்து நிற்கின்றது.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பதாயின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, வெளிநாடுகளின் இவ்வாறு செயற்பாடுகள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். ஆனால், வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரத்தில் அமைதியாகவுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் இது நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமையும். எனவே, இவ்வாறான விடயங்களில் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் தீர்மானங்களை எடுக்குமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.

யுத்தத்தின்போது பலர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். ஆனால், அது குறித்த விசாரணைகள் உள்ளகப் பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

ஆனால், இந்த அரசு அந்தச் செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பில் நான் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பியிருக்கின்றேன்.

இங்கு உண்மைகளைக் கண்டறியும் ஆணைக்குழுவை மூடிவிட்டு, ஜெனிவாவுக்குச் சென்று அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடுகின்றார். தடை விதிக்கப்பட்டுள்ளவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டால் பிரித்தானியா அவற்றை இலங்கைக்கு அறிவிக்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

பட்டலந்த மாத்திரமின்றி நாட்டில் 46 வதை முகாம்கள் காணப்பட்டன. எனவே, இவற்றைத் தவிர்த்து பட்டலந்த குறித்து மாத்திரம் பேச முடியாது. ரணில் விக்கிரமசிங்கவை முடக்குவதற்காகவே பட்டலந்த தொடர்பில் மாத்திரம் பேசப்படுகின்றது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More