விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பயங்கரவாதத் தடை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது. திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாதத் தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம். எவ்வாறிருப்பினும் தற்போது சில குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வேறு சட்டமொன்று நாட்டில் இல்லை.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போது நடைமுறையிலுள்ள சட்டமாகும்.
எனவே பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எமது விருப்பம் அல்லது விருப்பமின்மைக்கு அப்பால் குற்றங்களைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுவதாகும்.
அது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கமையவே பயன்படுத்தப்படுகிறது. அதற்காக மாத்திரமே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதே அன்றி இதனை தொடர்ந்தும் நடைமுறையில் வைத்திருப்பதற்கு நாம் எதிர்பார்க்கவில்லை.
எனவே இந்த சட்டத்தை நீக்குவதற்கான முதலாவது சந்தர்ப்பம் கிடைக்கும் போது அப்போதே அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குறிப்பாக தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய குற்றங்களின் போது இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றார்.