புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை

2 minutes read

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் பதில் சொல்வது? அது போன்றதொரு விடயம்தான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக வேண்டி வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழல்கள் கத்திக்கொண்டு இருப்பார்கள் என முன்னாள் பிரதியமைச்சரும் தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டம் பங்குடாவெளி 14ஆம் வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரை காரியாலயமானது வட்டார வேட்பாளர் சின்னத்தம்பி ரவிச்சந்திரன் தலைமையில் செவ்வாய்கிழமை (29)  பதுளை வீதி இலுப்படிச்சேனையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் நாகலிங்கம் திரவியம், முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் ஜோகநாதன் றொஸ்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்திலே முதன் முதலாக மாகாண சபையைக் கட்டி எழுப்பி அதில் முதல் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்து அதனுடாக பாரிய அபிவிருத்திகளை செய்திருந்தார். அதன் பின்னர்தான் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திகளும் கிழக்கில் இடம்பெற்றன.

பின்னர் நான் மத்திய அரசாங்கத்தில் இருந்துகொண்டு பல வீட்டுத்திட்டங்களையும், வீதிகள், பாலங்கள் என பல அபிவிருத்தித் திட்டங்களையும் செய்திருந்தேன். அதுபோல் வியாழேந்திரன் அவர்கள் மத்திய அரசாங்கத்தில் இருந்தபோது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்துவிட்டுதான் நாங்கள் தற்போது இந்த உள்ளூராட்சி மன்றத்தில் நமது பிரதிநிதிகளை களம் இறக்கியிருக்கின்றோம். எனவே, மக்கள் தற்போது கிடைத்திருக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது. ஏனெனில், பல பிரச்சினைகள் நம் மத்தியில் காணப்படுகின்றன.

ஒரு நபர் வயல் அமைப்பதற்காக பல மக்கள் பாவிக்கின்ற குளத்தை உடைக்கின்றார்கள். மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஒருவரும் சென்று அதனை பார்வையிடவில்லை. இவ்வாறானவர்கள் நமக்கு எதற்கு?

தேர்தல் காலத்தில் மேய்ச்சல் தரைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம் என தெரிவிப்பார்கள். தேர்தலில் வெற்றி பெற்றதும் அந்தப் பக்கமே அவர்கள் போகவில்லை.

இவர்களை நம்பி வாக்களித்ததுதான் மீதமாக உள்ளது. இதற்காகத்தான் நாம் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதனை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான ஓர் அத்திவாரம் தற்போது போடப்பட்டுள்ளது.

மக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும். தவறான பிரசாரங்களை எடுத்துவிடுவார்கள். இதனை நம்பி மக்கள் ஏமாந்துவிடக்கூடாது. தற்போது கிடைத்திருப்பது ஒரு நல்ல வாய்ப்பாகும். இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். இதனை ஏனையோருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தில் விதி போல ஒன்றுள்ளது. அரசாங்கம் மாறி மாறி வருகின்றபோது முன்னைய அரசாங்கத்தில் இருப்பவர்களை பிடித்து கைது செய்வது விதி போன்றுள்ளது. இப்போது இருக்கின்ற அரசாங்கத்தில் இருப்பவர்கள் அடுத்த முறை வருகின்ற அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு அனைவரும் உள்ளே அனுப்பப்படுவார்கள். நானும் உள்ளே இருந்து வந்தவன்தான். இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல்கள்.

இவை எமது மக்களையும் எமது இருப்புக்களையும் ஒருபோதும் பாதிக்கப்போவதில்லை. இதை பற்றி நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், எவ்வகையான தியாகங்களை செய்தவர்கள் என்பதை எனது மக்கள் சிந்திக்க வேண்டும்.

பிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தவர் அவர். அப்போது அவர் நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்துக்கும் யார் பதில் சொல்வது? அது போன்றுதான் தற்போதும் அவருக்கு நடந்துள்ளது. அதற்காக  வெளிநாட்டில் இருக்கின்ற ஊதுகுழல்கள் கத்திக்கொண்டிருப்பார்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து எமது உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். அது கிழக்கு மாகாணத்துக்குரிய ஒரு அத்திவாரமாகும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பது கிழக்கு மாகாண மக்களுக்காக முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அக்கட்சியின் சின்னம்தான் படகு சின்னம். அதன் ஊடாக கிழக்கு மாகாணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.

அம்பாறை மாவட்டத்திலேயே 60 கிராமங்கள் இல்லாமல் போய்விட்டது. மட்டக்களப்பில் தளவாய்க் கிராமமும் இல்லாமல் போய்விட்டது. அதற்கு எல்லாம் துணிந்தவன் முன்வர வேண்டும். நாங்கள் துணிந்துதான் நிற்கின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லை. அவர்களுக்கு தலைவரும் இல்லை, யாரும் இல்லை. தலைமை போட்டிக்கு வழக்கு வைத்து ஆளுக்காள் சண்டையிடுகிறார்கள்.

அரசாங்கத்தின் முகவர்களாக இருந்து செயற்பட்டவர்களை வடக்கு மக்கள் நன்கு அறிந்துவிட்டார்கள். கிழக்கு மாகாண மக்களும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இவை அனைத்தையும் வீசி எறிந்துவிட்டு கிராமத்து மக்கள் எமது போராளிகள், எமது வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More