சென்னையில் கடந்த 7 நாட்களில் கொரோனா நோய்த்தொற்று சரசாரியாக 2.6 சதவீதம் குறைந்துள்ளது. மொத்தமுள்ள 15 மண்டலங்களில் ஆலந்தூா் மண்டலத்தில் மட்டும் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளால் நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நோய்த் தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை சதவீதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 14 மண்டலங்களில் நோய்த்தொற்று பாதித்தோா் சதவீதம் குறைந்துள்ளது.
இதில், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் 5.2 சதவீதம் தொற்று குறைந்துள்ளது. தொடா்ந்து, தேனாம்பேட்டையில் 4.8 சதவீதமும், திருவொற்றியூரில் 4.5 சதவீதமும், அம்பத்தூரில் 4.4 சதவீதமும், ராயபுரம் மற்றும் மாதவரத்தில் தலா 3.4 சதவீதமும், அடையாறில் 3.3 சதவீதமும், வளசரவாக்கதத்தில் 2.1 சதவீதமும், கோடம்பாக்கத்தில் 2 சதவீதமும், திரு.வி.க.நகா், மணலியில் தலா 1 சதவீதமும், பெருங்குடியில் 0.4 சதவீதமும், சோழிங்கநல்லூரில் 0.3 சதவீதமும், அண்ணா நகரில் 0.8 சதவீதமும் நோய்த்தொற்று குறைந்துள்ளது.