2
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நிறைய கேள்விகள், சந்தேகங்கள் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து Wuhan Institute of Virology முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளது.
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பெரியளவில் உலகம் முழுக்க சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது, வுஹான் சந்தையிலிருந்து இந்த வைரஸ் வெளியாகியுள்ளது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் சீனாவிலுள்ள Wuhan Institute of Virology ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து வெளியாகியிருக்கலாம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
சீனாவிலுள்ள Wuhan Institute of Virology ஆய்வுகூடம் பயங்கரமான வைரஸ்களைக் கையாளுவதற்கான வசதிகளைக் கொண்டதாக இருக்கிறது. இங்கிருந்து வைரஸ் வெளியாகியிருக்கலாம். அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மூலம் இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம் என்றும்
குற்றஞ்சாட்டப்படுகிறது.
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அமெரிக்காவும் விசாரணைகளை தொடங்கியுள்ளது. Wuhan Institute of Virology ஆய்வு மையத்திலிருந்து வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா வெளிப்படையாக குற்றம்சாட்ட தொடங்கியுள்ளது. சீனா இது தொடர்பான விஷயங்களை மறைக்கிறது. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சீனா வேண்டுமென்றே மறைத்திருந்தால் சீனா மிக மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் தெரிவித்தும் உள்ளார்.
Wuhan Institute of Virology ஆராய்ச்சி கூடத்தின் P4 ஆய்வுகூடம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட ஆய்வு கூடத்திலிருந்துதான் இந்த வைரஸ் பரவியிருக்கும் என்று செய்திகள் பரவிய வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் சீனாவிலுள்ள CGTN TVக்கு வழங்கிய நேர்காணலில் Wuhan Institute of Virologyயின் P4 ஆராய்ச்சி கூடத்தின் பணிப்பாளரான யுவான் சிமிங் ( Yuan Zhiming ) இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்:-
இந்த கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வு கூடத்திலிருந்து கசிந்திருக்க வாய்ப்பே இல்லை. எங்கள் ஆய்வு கூடத்தில் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கவில்லை. அப்படியிருக்கும் போது எங்கள் ஆய்வு கூடத்திலிருந்து இந்த வைரஸ் வெளியாகியிருக்கலாம் என்று கூறுவது தவறு. நாங்கள் கொரோனா குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். பல்வேறு வகையான வைரஸ் ஆராய்ச்சிகளையும் செய்து வருகிறோம். எங்கள் ஆய்வுகூடம் மிகவும் பாதுகாப்பானது. எங்கள் ஆய்வுகூடத்திலிருந்து எந்த விதமான வைரஸ் வெளியேறவும் வாய்ப்பு இல்லை. தேவையில்லாமல் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுக்கு என்ன ஆராய்ச்சிகளை செய்கிறோம் என்று தெரியும். அதை எப்படி செய்கிறோம் என்றும் தெரியும். எங்கள் ஆய்வுகூடம் வுஹானில் இருக்கிறது என்பதாலேயே அதை கொரோனாவுடன் தொடர்புபடுத்த கூடாது. மக்களை தவறாக சிலர் வழி நடத்துகிறார்கள். அமெரிக்காவிலுள்ள சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது. அல்லது ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுகிறது. கொரோனா குறித்தோ அல்லது இந்த ஆய்வுகூடம் குறித்தோ எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நாங்கள் பொதுவான வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையும் சமர்பித்துள்ளோம் என்று P4 ஆய்வு கூடத்தின் பணிப்பாளர் யுவான் சிமிங் ( Yuan Zhiming ) தெரிவித்துள்ளார்.
—