வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15ம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 6 அமெரிக்க கடற்படையின் கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.
ஈரானின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்காவின் கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரானின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியிலிருக்கும் அமெரிக்காவின் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரானின் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி எச்சரித்துள்ளார்.
இது குறித்து சலமி கூறியதாவது:-
எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், மிக மோசமாக எதிர்வினையை அமெரிக்கா சந்திக்க நேரிடும். அவர்களுக்கு ( அமெரிக்கா ) எங்களின் வலிமைப் பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து அவர்கள் பாடம் கற்றிருப்பார்கள் என கருதுகிறோம் என்றார்.
அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018ம் ஆண்டு முதல் மீண்டும் போர் சூழல் வந்த நிலையில், January மாதம் ஈரானின் முக்கிய தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொன்றது.
அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயமடைந்தனர். கடந்த 78 வருடங்களில் அமெரிக்க ராணுவம் மீது ஈரான் நேரடியாக நடத்திய தாக்குதல் இதுவாகும்.
தற்போது அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய உலக நாடுகள் கொரோனா வைரஸால் பரவியதால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிற நிலையில், இவ்விரு நாடுகளும் மீண்டும் போர்ச் சூழலை நோக்கி நகர்வது ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது.
-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-