2019 – ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றின் தோற்றம், அது பரவத் தொடங்கிய காலம் குறித்து பல்வேறு கருத்துக்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான உண்மைத் தகவல்களைச் சீனா உலகத்துக்கு மறைத்துவிட்டது என்று அமெரிக்கா நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் பகுதியிலிருந்து பரவியதா இல்லையா என்ற விவாதமே இன்னும் முடிவடையாத நிலையில் கொரோனோ வைரஸ் பரவத்தொடங்கிய காலம் குறித்து ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சீனாவின் பைடுவில் தேடிய இணையதள தேடல்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவில் கொரோனா வைரஸ் உகானில் தோன்றியது டிசம்பரில் அல்ல ஆகஸ்டு மாதத் தொடக்கத்திலேயே தோன்றி பரவத்தொடங்கிவிட்டது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வை நடத்திய ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஜான் புரவுன்ஸ்டீன், “செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் நடந்த ஆராய்ச்சியில் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் உகானில் உள்ள மருத்துவமனைகளுக்கு வியக்கத்தக்க அளவில் கார், பைக் போன்ற வாகனங்கள் வந்து இருந்ததைக் கண்டறிந்தோம். நோய் தொற்று ஏற்படும் காலங்களில் மட்டுமே அதிகளவில் மருத்துவமனைகளுக்கு வாகனங்கள் குவிவது வழக்கம்” என்றார்.
2018 லிருந்து 2019 – ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 67 – 90 % அளவுக்கு அதிகளவு கார்கள் வந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 2019 செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மக்கள் அதிகளவில் மருத்துவமனைக்குப் படையெடுத்த அதே காலகட்டத்தில் சீனாவின் தேடல் இணையதளமான ‘பைடு’வில் மக்கள் ‘இருமல்’, ‘சளி’, ‘வயிற்றுப்போக்கு’ போன்ற வார்த்தைகளை அதிகளவில் தேடியிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரத்தையும் பகிர்ந்திருக்கிறார் பேராசிரியர் ஜான் புரவுன்ஸ்டீன். இருமல், வயிற்றுப்போக்கு ஆகியவை கொரோனா நோயின் அறிகுறிகள். கொரோனோ வைரஸ் தொற்று சீனாவில் பரவத் தொடங்கியது டிசம்பரில் அல்ல அதற்கு முன்பு செப்டம்பர் அல்லது அக்டோபரிலேயே பரவத் தொடங்கிவிட்டது. சீனா உண்மைத் தகவல்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.