அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அந்நாட்டின் புதிய சுகாதாரத் துறை அமைச்சராக கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரல் சேவியர் பெக்கெராவை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தொற்று நோய் நிபுணர் டொக்டர் ரோசெல் வலென்ஸ்கி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கான (சிடிசி) புதிய இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பெயர் தெரிவிக்க விரும்பாத இரு உயர் அதிகாரிகள், மேற்கண்ட இருவரின் நியமனம் குறித்து ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர். இவர்களில் சேவியர் பெக்கெரா நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது என்றும், சிடிசி இயக்குநர் நியமனத்துக்கு செனட் சபை ஒப்புதல் தேவையில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேற்கண்ட இருவர் நியமனம் தொடர்பான முறையான அறிவிப்பு, செவ்வாய்க்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மேலும் பல நியமனங்கள் குறித்தும் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி வகித்தார். அப்போது ஒபாமாகேர் என அறியப்படும் சுகாதார பராமரிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்ட செயல்பாடுகளில் தீவிரமாகப் பணியாற்றியவர் வழக்குரைஞர் சேவியர் பெக்கெரா. தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அந்த சட்டத்தை மாற்றியமைக்க முயன்றபோது, அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியவர்.
கடந்த மாதம் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பிரதிநிதி வாக்குகளைப் பெற்று புதிய அதிபராகத் தேர்வாகியுள்ளார். புதிய அதிபர் பதவியேற்பு விழா, வருகிற ஜனவரி மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே புதிய அரசில் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை ஜோ பைடன் அறிவித்து வருகிறார்.