வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். ஆனால், அவரது வெற்றியை அப்போதைய அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, பைடனின் வெற்றியை உறுதி செய்ய நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தில் நடந்த எலக்டோரல் வாக்குப் எண்ணிக்கையின் போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கேபிடால் கட்டிடத்தில் தனக்கு ஆதரவாக செயல்படும்படி ஆதரவாளர்களை தூண்டியதாக டிரம்ப் மீது, நாடாளுமன்றத்தில் 2வது முறையாக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அவர் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்த முன்னாள் அதிபர் டிரம்ப், `கேபிடால் கட்டிட கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவர்களால் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
ஆதரவாளர்களால் அங்கிருந்த எம்பி.க்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவர்கள் கேபிடால் கட்டிடத்திற்கு உள்ளே சென்றார்கள். அங்கு இருந்த போலீசாருடனும், பாதுகாவலர்களுடனும் கைகுலுக்கி, கட்டிபிடித்து தங்கள் உறவை தெரியப்படுத்தினர். பிறகு வெளியே வந்து விட்டனர்,’ என்று தெரிவித்துள்ளார்.