துபாய்: உலகளவில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக அனைத்து நாடுகளிலும் புயல், மழை வெள்ளம், கடல் நீர்மட்டம் உயர்தல் என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு பெருங்கடல்களில் 600க்கும் மேற்பட்ட பெரிய அலைகள் பதிவாகி உள்ளன.
இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. அமெரிக்க கடற்கரையோர கடல் பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நாசா விஞ்ஞானிகள், தற்போது அது பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்
அதில், ‘2030ம் ஆண்டுகளில் அமெரிக்க கடலோர நகரங்கள் கடுமையான வெள்ளப் பெருக்கத்தால் பாதிக்கப்படலாம்,’ என எச்சரித்துள்ளனர். கடல் அலைகள் பல மடங்கு உயரத்திற்கு எழும். முன்பு எப்போதும் இல்லாத அளவில் கடற்கரையோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
கடல் நீர் நகருக்குள் பாயும். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படும்,’ என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் ஏற்படும் மாற்றமும் ஒரு காரணமாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.சந்திரன் பூமியை ஒருமுறை சுற்றி முடிக்க 29 நாட்கள் ஆகின்றன.
மேலும், அந்த சுற்றுப்பாதையில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் போன்றவைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது என்றும் இவர்கள் கூறியுள்ளனர்.