நித்தியானந்தா உருவாக்கியுள்ள “கைலாசா” தேசத்தின் சர்ச்சை ஒருபுறமிருக்க, சாமானியர்களான எம்மால் புதிய நாடு ஒன்றை உருவாக்க முடியுமா? முடியும்.
சொந்த நாடு ஒன்றை உருவாக்க முதலில் ஒரு ஏக்கராவது காணி இருக்க வேண்டும்.
இல்லைவிட்டால், உலகில் எந்தவொரு நாடும் கட்டுப்படுத்தாத நிலத்தில் ஒரு நாட்டை உருவாக்கலாம். அன்டார்டிகாவில் இதுபோன்று மக்கள் வசிக்காத பல பகுதிகள் உள்ளன. அதேபோன்று, மக்கள் இல்லாத பாலைவனப் பகுதிகளும் உள்ளன.
நிலம் கிடைக்கவில்லை என்றால், தண்ணீரில் ஒரு நாட்டை அமைக்கலாம். அது எந்தவொரு நாட்டின் சர்வதேச கடல் பரப்புக்குக் கட்டுப்படாத பகுதியாக இருக்க வேண்டும். அல்லாவிட்டால், கடலில் ஒரு தீவை செயற்கையாக உருவாக்கி, அதை புதிய நாடாக அறிவிக்கலாம்.
மேலும், ஒருவரிடம் நிறையப் பணம் இருந்தால், எந்த நாட்டிலாவது தீவுகளை விலை கொடுத்து வாங்கலாம். அந்தத் தீவை ஒரு நாடாக அறிவிக்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்குத் தீவை விலைக்குக் கொடுக்கும் நாடும் சம்மதிக்க வேண்டும்.
ஒரு நாடு என்றால் அதற்கு சில பண்புகள் இருக்க வேண்டும். அதாவது, நிரந்தரமாகக் குடியிருக்கும் மக்கள், தெளிவான எல்லைகள், அரசாங்கம், மற்ற நாடுகளுடன் நட்புறவை பராமரிக்கும் திறன் மற்றும் சொந்த முடிவுகளை எடுக்கும் திறன் போன்றவை இருக்க வேண்டும்.
அத்துடன், தேசிய கொடி, தேசிய சின்னம், மொழி மற்றும் நிர்வாக அமைப்பு எனப் பல இருக்க வேண்டும்.
மேலும், புதிய நாட்டில் ஜனநாயக ஆட்சியா அல்லது மன்னராட்சியா என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும். அதன்படி அரசமைப்பு எழுதப்பட வேண்டும். சட்டமன்ற அமைப்பு, நிர்வாக அமைப்பு, சட்ட அமைப்பு, சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் எனப் பல உருவாக்கப்பட வேண்டும்.
நாட்டில் பொருளாதாரத்தை வலுப்படுத்த வருமானம் ஈட்டும் அம்சங்கள் கண்டறியப்பட வேண்டும். அத்தோடு புதிய நாணயம் உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய உலகில் எந்த தேசமும் தனித்து வாழ முடியாது. எனவே, மற்ற நாடுகளின் உதவி தேவை, ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். சர்வதேச அங்கிகாரம் இல்லாவிட்டாலும் உங்கள் நாடு நிலைத்து நிற்கும். எனினும், ஐ.நா சாசனத்தின்கீழ் உங்களுக்குச் சில நன்மைகள் உள்ளன. எல்லைகளின் பாதுகாப்பும் இறையாண்மையின் பாதுகாப்பும் கிடைக்கும்.
எனவே, சர்வதேச அங்கிகாரம் பெறவும் வர்த்தக உறவுகளை அதிகரிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளில் சேர வேண்டும்.
நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் சேர விரும்பினால், உறுப்பினராக சேர்க்கக் கோரி பொதுச் செயலாளருக்குக் கடிதம் எழுத வேண்டும். அதற்குப் பிறகு, ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து பொதுச் சபைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
பொது சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக முடியும்.
மூலம் : பிபிசி