செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம்

சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம்

6 minutes read

பிரபுதேவா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்லாமல், புகழ்பெற்ற நடன அமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இவரின் வேகமாக நடனமாடும் திறைமைக்காக, இவர் இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ எனப் புகழப்படுகிறார். ஒரு நடன இயக்குனராக 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நடிகராக 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், இயக்குனராக 12-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வழங்கியுள்ளார். ‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’, (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ (தமிழ்), ‘ரவுடி ராத்தோர்’ (இந்தி) போன்ற திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் படைப்புகளாகும். ஒரு நடன அமைப்பாளராகத் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, நடிகராக மட்டுமல்லாமல், தமிழ் தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றிப்பட இயக்குனராக வளம் வரும் பிரபுதேவாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஏப்ரல் 03, 1973

பிறப்பிடம்: மைசூர், கர்நாடகம் மாநிலம், இந்தியா

பணி: நடன அமைப்பாளர், நடிகர், இயக்குனர்  

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

பிரபுதேவா சுந்தரம் என்னும் பிரபுதேவா அவர்கள், 1973  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 03 ஆம் நாள், இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்திலுள்ள “மைசூரில்” சுந்தரம் மாஸ்டர் என அழைக்கப்படும் ‘முகூர் சுந்தர்’ என்பவருக்கும், மகாதேவம்மாவிற்கும்’ மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சங்குபாணி ஆகும். இவருக்கு ராஜு சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாத் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவருடைய தந்தை முகூர் சுந்தர் தென்னிந்திய திரைப்பட நடன இயக்குனர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, இவர்களுடைய குடும்பம் மைசூரிலிருந்து  சென்னைக்குக் குடிப்பெயர்ந்தது. தன்னுடைய தந்தையின் நடனக் கலையில் அதிக  ஈடுபாடு கொண்ட அவர், ஆரம்பத்தில் இந்தியப் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான பரதநாட்டியத்தைக் கற்கத் தொடங்கினார். நாளடைவில் மேற்கத்திய நடனக்கலையிலும் தேர்ச்சிப்பெற்றவராக வளர்ந்த அவர், 1988 ஆம் ஆண்டு ‘அக்னி நட்சத்திரம்’ என்ற திரைப்படத்தில், தன்னுடைய தந்தையின் நடன அமைப்பில், ஒரு குழு நடனக் கலைஞராக, திரைப்படத்துறையில் முதன் முதலாக கால்பதித்தார்.

நடன இயக்குனராக

‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்தில் ஒரு சிறு நடனக் கலைஞராக தோன்றிய அவர், 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வெற்றிவிழா’ திரைப்படத்தில், நடன இயக்குனராக, தன்னுடைய முதல் படத்திற்கு நடனம் அமைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என மூன்று மொழிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றி, இந்தியாவின் ‘நடனப்புயல்’ எனப் பெயர்பெற்றார். அது மட்டுமல்லாமல், தாம் நடனம் அமைத்து வந்த ஒரு சில பாடல் காட்சிகளில் அவ்வப்போது நடித்தும் வந்தார்.

கதாநாயகனாக

சுமார் 45 திரைப்படங்களுக்கு மேல் நடன இயக்குனராகப் பணியாற்றி வந்த அவர், 1994 ஆம் ஆண்டு பவித்திரன் இயக்கத்தில் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். பின்னர், அதே ஆண்டில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் போற்றப்படும் சங்கர் இயக்கத்தில் ‘காதலன்’ என்ற திரைப்படத்தில் நடித்து, முன்னணி கதாநாயகனாகவும் உயர்ந்தார். ‘காதலன்’ பட வெற்றியைத் தொடர்ந்து, ‘ராசையா’, ‘லவ் பேட்ஸ்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘மின்சார கனவு’, ‘விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘காதலா காதலா’, ‘நினைவிருக்கும் வரை’, ‘டைம்’, ‘வானத்தைப்போல’, ‘ஏழையின் சிரிப்பில்’, ‘பெண்ணின் மனதை தொட்டு’, ‘டபுள்ஸ்’, ,’மனதைத் திருடிவிட்டாய்’, ‘ஒன் டூ த்ரி’, ‘அலாவுதீன்’ போன்ற திரைப்படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார்.

இந்தியாவின் மைக்கல் ஜாக்சன்

வேகமாக நடனமாடும் திறமைக்காக, இந்தியாவின் ‘மைக்கல் ஜாக்சன்’ என அனைவராலும் புகழப்பட்ட அவர், ஒரு நடன அமைப்பாளராக மட்டுமல்லாமல், திரைப்படத்தில் பலவிதமான நடன அசைவுகளைத் தந்து கோலிவுட் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாகத் திகழ்ந்தார். ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களை பைத்தியமாக்கியது எனலாம். சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ‘காதலன்’ திரைப்படத்தில், மெக்சிகோ நாட்டின் கௌபாய் படப் பாணியில் எடுக்கப்பட்ட “முக்காலா முக்காபலா” பாடல் கற்பனைக்கு எட்டாத வகையில் வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலில் இடம்பெற்ற நடனக் காட்சிகள் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.   அதன் பிறகு, ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாடலுக்கு அவர் ஆடிய நடனத்திற்காக ‘தேசிய விருது’ பெற்றார்.

திரைப்பட இயக்குனராக

தமிழ் திரைப்படத்துறையில் ஒரு நடன அமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் வளம்வந்துக் கொண்டிருந்த அவர், ‘நுவ்வு ஒஸ்தானன்டே நேனொத்தடனா’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்குனராக தன்னுடிய பெயரைப் பதிவு செய்தார். 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் அவருக்கு, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுத்தந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே தமிழில் ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ என்ற படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியிடப்பட்ட திரைப்படம் வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘பௌர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘வில்லு’ (தமிழ்), ‘வாண்டட்’ (இந்தி), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘வெடி’ (தமிழ்) போன்ற திரைப்படங்களை இயக்கிய அவருக்கு, 2012 ஆம் ஆண்டு அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘ரவுடி ராத்தோர்’ திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்று இந்திய சினிமாவில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் எனப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக சொல்லப்போனால், இந்தியத் திரையுலகில் ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி, அதிலும் வெற்றிக் கண்டார். தற்போது இவர் இயக்கதில் நடிக்கப் பல முன்னணி இந்தி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘இந்து’, ‘காதலன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘காதலா காதலா’, ‘மனதைத் திருடிவிட்டாய்’, ‘லவ் பேட்ஸ்’, ‘மின்சாரக் கனவு’, ‘விஐபி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’, ‘காதலா காதலா’, ‘ஜேம்ஸ்பாண்ட்’, ‘டபுள்ஸ்’, ‘சுயம்வரம்’, ‘டைம்’, ‘ஏழையின் சிரிப்பிலே’, ‘சந்தோஷம்’, ‘தோட்டிகாம்’ (தெலுங்கு), ‘அக்னி வர்ஷா’ (தெலுங்கு), ‘எங்கள் அண்ணா’, ‘சுக்காலோ சந்டுரு’ (தெலுங்கு), ‘ஸ்டைல்’ (தெலுங்கு), ‘வானத்தைப்போல’, ‘ஏ.பி.சி.டி’.

அவர் இயக்கிய திரைப்படங்கள்

‘நுவ்வஸ்தானன்டே நோனொத்தன்டானா’ (தெலுங்கு), ‘பெளர்ணமி’ (தெலுங்கு), ‘போக்கிரி’ (தமிழ்), ‘சங்கர் தாதா சிந்தாபாத்’ (தெலுங்கு), ‘வில்லு’ (தமிழ்), ‘வாண்டட்’ (இந்தி), ‘டெட் அண்டு அலைவ்’ (தமிழ்), ‘எங்கேயும் காதல்’ (தமிழ்), ‘வெடி’ (தமிழ்), ‘ரவுடி ராத்தோர்’ (இந்தி).

இல்லற வாழ்க்கை

பிரபுதேவா அவர்கள், ரமலத் என்ற இஸ்லாமியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர், திருமணத்திற்குப் பிறகு ‘ரமலத்’ என்ற பெயரை ‘லதா’ என்று மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. அவர்களில் மூத்த மகன் 2008 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

சர்ச்சைகள்

2008 ஆம் ஆண்டு ‘வில்லு’ திரைப்படத்தினை இயக்கிக்கொண்டிருக்கும் பொழுது, கதாநாயகியாக நடித்த நயனதாராவுடன் காதல் ஏற்படவே, இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்து, தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அவருக்கு திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் இருப்பதைத் தெரிந்தும், அவருடன் வாழ சம்மதித்த நயன்தாரா, அவரின் பெயரைக் கையில் பச்சைக்குத்திக் கொண்டதுடன், சினிமாவில் நடிப்பதையே நிறுத்தியிருந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேற திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென அவர்களுக்குள் பிளவு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

விருதுகள்

  • 1997 – ‘மின்சார கனவு’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.
  • 2004 – ‘லக்ஸ்ஷயா’ (இந்தி) திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘தேசிய விருது’.
  • 2005 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஃபிலிம்பேர் விருது’.
  • 2005 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த நடன இயக்குனருக்கான ‘ஸ்டார் க்ரீன் விருது’.
  • 2007 – ‘போக்கிரி’ திரைப்படத்திற்காக, சிறந்த இயக்குனருக்கான விஜய் டிவி விருது மற்றும் ‘மாத்ருபூமி விருது’.

ஒரு சிறிய நடன இயக்குனராகத் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் வெற்றிப் பெற்றுள்ளார். நடன அமைப்பாளர், கதாநாயகன், இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட இவர், இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படுவதோடு, தற்பொழுது ‘ரீமேக் கிங்’ எனவும் அழைக்கப்படுகிறார். குறிப்பாக நடனத்தைப் பொறுத்தவரை, இந்திய சினிமா உலகில் பிரபுதேவாவின் நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது.

நன்றி : itstamil.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More