இல்லாத விடயத்தை
இருக்குது என்றால்
இவரு உரையில் ஊழல்
சொல்லாத விடயத்தை
சொன்னதாய்ச் சொன்னால்
சொன்னவர் சொல்லில் ஊழல்
பொல்லாத பொய்யும்
புரட்டும் சொன்னால்
உள்ளது நம்பிக்கை ஊழல்
எல்லோரும் பணத்தை
எடுத்தல் மட்டுமே
சொல்லுவார் ஊழல் என்று
——
தானும் செய்யாது
தருபவரையும் தடுத்தல்
தகுதியில் செய்யும் ஊழல்
காணும் அனைத்திலும்
காழ்ப்புடன் எழுதல்
கற்பனையில் செய்யும் ஊழல்
மானம் மரியாதை
மதிப்பைக் கெடுத்தல்
மனிதம் அழிக்கும் ஊழல்
வீணாய் தர்க்கித்து
விவாதம் புரிதல்
விவேகத்தில் செய்யும் ஊழல்
—–
கூட்டம் சேர்த்து
குறிவைத்து ஒருவரைக்
குதறுதல் ஒரு வகை ஊழல்
கேட்டதையெல்லாம்
போட்டுப் பேசுதல்
கூட்டத்தில் செய்யும் ஊழல்
ஓட்டு எடுக்க
காட்டிக் கொடுத்தலும்
ஒருவகை சமூக ஊழல்
பார்ட்டி கொடுத்து
பகத்துக்கு இழுத்தல்
பார்த்தால் அதுவும் ஊழல்
——
ஊழலுக்கெதிராய்
ஓயாது பேசல்
உண்மையில் மிகவும் மேலாம்.
ஆனால் அவ்வாறு
அதனைக் கூறு முன்
ஆராய்ந்து பார்த்தல் நன்று
வீணாய் சர்ச்சையை
விளாசி விட்டு
விக்கட் இழப்பதை விடவும்
தான் என்ன செய்வேன்
தனக்கென்ன முடியும்
என்பதை உரைத்தலே நன்று
நன்றி : Mohamed Nizous | tamilcnn.lk