சுமேரியர் முதலில் இயற்கையையே வழிபட்டனர். நிலம் நீர் காற்று என இயற்கையைப் போற்றிய அவர்கள் காலம் செல்லச் செல்ல உருவ வழிபாட்டிலும் ஈடுபட்டனர். கிரீன் கொடஸ் என அழைத்த இயற்கைக் கடவுளை மாரிஅம்மன் எனவும் சிலர் மொழி மாற்றம் செய்துள்ளனர். மாரி என்றால் தமிழில் மழை என்பது அனைவரும் அறிந்ததே.
மழை பெய்யும் காலம் மெசொபோத்தேமியாவில் வருடம் ஒருமுறைதான். அந்த ஒரு முறை மட்டும் அவர்கள் மழையை நம்பிப் பயிர் செய்தனர். மற்றைய நாட்களில் ஆற்று நீரைப் பயன்படுத்தினர். மழையால் வரும் விளைச்சலை அறுவடை செய்தபின் வருடத்தில் ஒருமுறை கிரீன் கொடசுக்கு விழா எடுத்தனர். ஒவ்வொரு ஊர்களிலும் வேறு வேறு பெயர்களில் கடவுளின் பெயரை வைத்தனர். An, Enlil, Enki, Ninhursag, Nanna, Utu, and Inanna. அதில் பிரபல்யமான தெய்வமாக இனானா என்னும் தெய்வமே இருந்திருக்கிறது
பெண் தெய்வம்
பாமர மக்கள் பல கடவுளை வழிபட்டாலும் அறிவிற்சிறந்தோர் பலவற்றை அறிந்து அனுபவத்தில் உணர்ந்து சிந்தனைத் தெளிவுடன் ஒன்றே கடவுள் என்று அறிந்தனர். சங்கங்கள் கூடி வாதிட்டனர். உயிர் மெய்த் தத்துவத்தையும் அவர்கள் அறிந்து கொண்டதனால் சமய நெறி வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரு இனம் உன்னத வளர்ச்சி பெற்றால்த்தான் ஒரு கடவுள் நிலைப்பாடு தோன்றியிருக்கும். சைவமும் தமிழும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது. உயிர் இருந்து உடலற்ற நிலையும்இ உடலிருந்து உயிரற்ற நிலையும் எப்பயனும் அற்றது. இரண்டும் சேர்வதே முழுமை நிலை என உணர்ந்த சுமேரியரின் வழிபாடு காலப்போக்கில் இலிங்க வழிபாடானது.
அதன் பின்னர் தான் சுமேரிய மொழியும் இலக்கண வளத்தைப் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். உயிர் எழுத்துக்கள் எவ்வாறு மெய் எழுத்தில்லாது இயங்காதோ அதுபோலத்தான் உயிரும் உடலின்றி இயக்கம் இல்லை எனக் கண்டுணர்ந்தனர் சுமேரியர். இந்த ஒரு கடவுள் நிலைப்பாட்டையே பாபிலோனியர் சுமேரியரிடம் இருந்து உள்வாங்கி தம்மதம் எனக் கூறி ஆபிரகாம் மதமாக வளற்ச்சியுற வைத்தனர். ஆபிரகாம் மதப்பிரிவில் யூத மதம் கிறித்தவமதம் இஸ்லாம் என்பன அடங்கும். இத்தனையும் சங்கங்கள் வளர்த்ததனால் ஏற்ப்பட்ட வளர்ச்சி என ஆய்வாளர் கூறுகின்றனர். முதல் முதலில் பரிசுத்த வேதாகமம் கூட சுமேரு மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் அதன் பின்பே கீபுரு மொழியில் மாற்றப்பட்டதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
உலகத்தில் பல்லின மக்கள் நாடோடிகளாக அலைந்த காலங்களிலெல்லாம் அவர்களிடம் பேச்சு வழக்கில் பல்லாயிரம் ஆண்டுகள் அம்மொழி இருந்திருக்கிறது. ஆனால் மனித குலத்தின் பாரிய திருப்புமுனையாக அமைந்தது சுமேரிய இனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட விவசாய முறை எனில் அதைவிட அதன் பின்னரான உலகின் முன்னேற்றத்துக்கு பாரிய நகர்வாக உந்தித் தள்ளியது அவர்கள் கண்டு பிடித்த எழுத்துவடிவமே என்கின்றனர் ஆய்வாளர்கள். இவ்விரண்டும் உலகின் முதல் நாகரிக மாந்தரான சுமேரியரின் வழி வந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
பைபிளில் கூறப்படும் நோவா கப்பலின் கதை கூட சுமேரியரின் கதைதான் என டேவிட் நைமன் என்னும் பல்கலைக்கழக விரிவுரையாளரின் கூற்று. கதைகள் காப்பியங்கள் என்பன அதீத கற்பனை நிறைந்ததாகவே காணப்படுவது இயல்பு. கிறித்துவுக்கு முன் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாக கடவுள் வழிபாடு இருந்திருக்கிறது. அந்த 3000 ஆண்டுகளில் மற்றைய இனங்கள் கடவுளை வழிபடவில்லையா?
மனித இனத்தின் நாகரிக வளர்ச்சிகள் எல்லாம் ஆற்றங்கரை ஓரமாகவே தோன்றின என்பது நீங்கள் அறிந்ததுதான். அத்தோடு உலகின் முக்கிய நாகரிகத் தளங்கள் என ஆய்வாளர் கூறும் மூன்று இடங்களிலும் ஒவ்வொரு இடங்களிலும் மூன்று வேறுபட்ட தானியங்கள் முதன்மை வகிக்கின்றன.
ஆனால் மற்றைய இனங்களின் நாகரிக வளர்ச்சிக்கும் சுமேரியரின் வளர்ச்சிக்கும் பாரிய வேறுபாடும் கால இடைவெளியும் காணப்படுகிறது. காலத்தால் முந்தியதும் மற்றயவற்றோடு ஒப்பிடும்போது உந்தித் தள்ளப்பட்ட பாரிய வளர்ச்சியைக் கண்டது என எல்லோராலும் பிரமிப்புடன் பார்க்கப்படும் சுமேரிய நாகரிகம் கி.மு கிட்டத்தட்டப் பத்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதுமையையும் சீனாவில் கி.மு ஆறாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையுடன் அரிசியும் மாயன்களுடையது கி.மு இரண்டாயிரம் வருடப் பழைமையுடன் சோளமும் பிரதான தானியங்களாக அடையாளப் படுத்தப் படுகின்றன. அதில் தற்போது உலகில் அதிகப்படியாகப் பயன்படுத்தப் படுவது சோளம் என்றும் கூறப்படுகின்றது.
ஐநூறு ஆண்டுகள் பிற்பட்டு எகிப்திய இனமும் சுமேரியரிடம் கடன்வாங்கித் தமது நாகரிகத்தை வளர்த்தனர். அங்கும் கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்ததால் அருகிலிருந்த சுமேரியரின் விவசாய உத்திகளையே அவர்கள் பின்பற்றினர். ஆனால் அவர்கள் தம் இனத்துள் தாமே பெருகியதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக எகிப்திய இளவரசிகளைத் தந்தை தமையன் கூட திருமணம் செய்தார்கள் என அவர்கள் வரலாறு கூறுகிறது.
ஆனால் சுமேரியப் பெண்களை பல இடங்களில் இருந்தோர் விரும்பி மணந்தார்கள் என்றும் பரிசாக முறையுடன் அனுப்பப் பட்டார்கள் என்றும் சுமேரியரின் களிமண் தட்டுக்களில் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.
முக்கியமாக கூடிவாழும் ஒரு வலுவான குடும்ப அமைப்பு முறையும் பண்பாட்டு முறைமையும் அப்போதே ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. திருமண ஒப்பந்த முறையும் நடைமுறையில் இருந்திருக்கிறது.
இங்குள்ள படத்தில் காணப்படுபவர்கள் அதிக காலம் ஒன்றாய் வாழ்ந்த கணவனும் மனைவியும் என்று குறிப்பிடப்படுகின்றனர்.
இணையர்
நாகரிகத்தின் முகடாக மெசொபொத்தேமியா இருந்ததனால் பண்பாடுகள் பழக்கங்கள் எல்லாம் கூட ஒழுங்காக வரையறுக்கப்பட்டு ஒரு உன்னத நிலையை சுமேரிய இனம் அடைந்தது. பெண்களுக்கான சுதந்திரமும் உயர்ந்த இடமும் தந்தை மகளுக்கான இடைவெளிகள் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதரர்களுக்கான பிணைப்பும் நன்றாக அனைவருக்கும் ஊட்டப்பட்டதாகவும் தெரிகிறது.
தொடரும் …
நிவேதா உதயராஜன் | வரலாற்று ஆய்வாளர் | லண்டனிலிருந்து
இத்தொடரின் முன்னைய பகுதிகள்…
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-introduction/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-histry-1/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-2-2/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-3/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamils-history-4/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history-5/
http://www.vanakkamlondon.com/sumerian-history6/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-7/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-8/
http://www.vanakkamlondon.com/sumeriyar-tamil-history-9/
http://www.vanakkamlondon.com/sumeriar-tamil-history10/
(சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திரு சிவகனேஷன் அவர்களுடைய வழிகாட்டலுடன் திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…