நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் பிரபுதேவா, தற்போது அரைடஜன் படங்களை கைவசம் வைத்துள்ளாராம்.பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்தடுத்து நடிக்க உள்ள 4 புதிய படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ‘பிளாஷ்பேக்’, ‘மை டியர் பூதம்’, பெயரிடப்படாத 2 படங்களில் பிரபுதேவா நடிக்கிறார். இந்த நான்கு படங்களையும் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
இவற்றுள் பிளாஷ்பேக் படத்தை டான் சாண்டி இயக்குகிறார். இவர் மகாபலிபுரம், கொரில்லா போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் சற்குணத்திடம் பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி ‘மஞ்ச பை’ படம் மூலம் இயக்குனராக முத்திரை பதித்த ராகவன், இயக்கும் ‘மை டியர் பூதம்’ படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கிறார்.
இதுதவிர குலேபகாவலி இயக்குனர் கல்யாணுடன் ஒரு படத்திலும், அறிமுக இயக்குனர் அமல் கே.ஜோபி இயக்கும் புதிய படத்திலும் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகி உள்ளார்.