செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கொத்தலாவல சட்டமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதனை?

கொத்தலாவல சட்டமூலம் தமிழ் மக்களுக்கு உணர்த்துவது எதனை?

6 minutes read

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நேற்று முன்தினம் உறுதியளித்துள்ளார்.

சேர்.ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. அதற்கு எதிராக நாட்டில் ஆங்காங்கே போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இச்சட்டமூலமானது உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கான வழிகளைத் திறந்து விடுகிறது என்றும் உயர்கல்வியை இராணுவமயப்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

சேர்.ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் எனப்படுவது 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய படைத்துறைப் பள்ளிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட பொ ழுது அது ஒரு மிலிட்டரி அக்கடமி என்றே அழைக்கப்பட்டது. படைதரப்புக்குரிய அதிகாரிகளை பயிற்றுவிக்கும் ஒரு படைத்துறை பள்ளியாக அது தொடங்கப்பட்டது.

இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்ட போரின் வளர்ச்சியோடு கொத்தலாவல மிலிட்டரி அக்கடமியும் வளர்ந்து வந்தது. 2007ஆம் ஆண்டு அது ஒரு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பொழுது அப்பல்கலைக்கழகத்தில் ஒன்பது பீடங்கள் உண்டு. மேலும் இரண்டு இடங்கள் உருவாக்கப்படுகின்றன. 2013 இலிருந்து அப்பல்கலைக்கழகம் படைத்தரப்பு அல்லாத சிவிலியன்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது.

அப்பல்கலைக்கழகத்துக்கென்று ஒரு வைத்தியசாலை உண்டு. இலங்கைத்தீவில் அதுபோன்ற ஒரே வைத்தியசாலை அதுதான். இலங்கைத்தீவின் வேறு எந்த வைத்தியசாலையிலும் இல்லாத வசதி வளங்களுடன் அது கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

அப்பல்கலைக்கழகம் உயர் கல்வி அமைச்சினால் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரவில்லை. பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைத்தீவில் அதுபோன்று உயர் கல்வி அமைச்சின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படாத பல்கலைக் கழகங்களும் உண்டு.

பௌத்த மற்றும் பாளி கற்கைகளுக்கான பல்கலைக்கழகங்கள்,பிக்குக்களுக்கான பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கற்கை நிறுவனங்கள் போன்றன சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சின் கீழ் இயங்குகின்றன. அவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கவில்லை.

தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலும் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு படைத்துறைப் பல்கலைக்கழகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்தான் இயங்கிவருகிறது. உயர் கல்வி அமைச்சின் கீழ் அல்ல. இப்பொழுது உருவாக்கப்படும் சட்ட மூலமானது பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கு என்று ஒரு உயர்மட்ட குழுவை உருவாக்கும் நோக்கத்தை கொண்டது. அந்த உயர்மட்ட குழுவில் படைத்தரப்பைச் சேர்ந்தவர்களே அதிக தொகையில் இருப்பார்கள் என்பதனால் அது உயர்கல்வியை படை மயப்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

அதேசமயம் தனியார் பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பதற்குரிய உயர்மட்டக் குழுவாக அது இயங்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதோடு கல்வித்தகமைகளை தரநிர்ணயம் செய்வதற்கும் உரிய அதிகாரங்கள் அக்குழுவுக்கு இருக்கும்.

இதனாலேயே அந்த உயர்மட்டக் குழுவானது ஏறக்குறைய மற்றொரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவைப் போல செயல்படும் என்று ஜே.வி.பி. சுட்டிக்காட்டுகிறது. அதாவது உயர் கல்வி அமைச்சின் கீழ் வராத அதேசமயம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் மற்றொரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவைப் போன்ற ஒரு கட்டமைப்பு.

தென்னிலங்கையில் உள்ள மதிப்புக்குரிய புத்திஜீவிகளில் ஒருவராகிய பேராசிரியர் ஜயதேவ உயங்கொட கூறுகிறார்… நாட்டின் எந்த ஒரு உயர் கல்வி நிறுவனமும் உயர்கல்வி அமைச்சின் வழிமுறைகளின் கீழேயே வரவேண்டும் என்று.

ஆனால் தரைப்படை உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கூறுகிறார்……. கொத்தலாவல சட்டம் என்பது குறிப்பிட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மட்டும்தான் கட்டுப்படுத்தும் என்று.

அது நாட்டின் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்தாது என்று கூறும் அவர் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து இயங்கும் தரைப்படை படைத்துறைப்பள்ளி கடற்படை படைத்துறைப்பள்ளி வான்படை படைத்துறைப் பள்ளி ஆகிவற்றோடு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி,தேசிய பாதுகாப்புக்கான கல்லூரி, வினியோகம் மற்றும் வளங்களுக்கான கல்லூரி போன்றவையும் குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் என்றும் கூறுகிறார்.

மேலும் 2007இல் மிலிட்டரி அகடமி ஒரு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும் ஒரு பல்கலைக்கழகத்திற்கு அவசியமான செனட் சபை, பீட அவை போன்ற கட்டமைப்புக்கள் உருவாக்கப்படாத ஒரு வெற்றிடத்தை நிரப்பும் நோக்கத்தோடுதான் இச்சட்டமூலம் கொண்டு வரப்படுவதாக ஜெனரல் மிலிந்த பீரிஸ் கூறுகிறார்.

அதாவது கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை ஒரு முழுநிறைவான பல்கலைக்கழகமாக கட்டியெழுப்பும் நோக்கத்தோடு இவ்வாறு ஒரு சட்டமூலம் கொண்டு வரப்படுவதாக அவர் கூறுகிறார்.

ஆனால்,ஜே.வி.பி.யும் உட்பட நாட்டின் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை முதலாவதாக அது கல்வியை தனியார்மயப்படுத்துகிறது. இரண்டாவதாகத் அது கல்வியை இராணுவ மயப்படுத்துகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டில் நிகழ்ந்து வரும் இராணுவ மயமாக்கலின் அடுத்தகட்ட வளர்ச்சியே அது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதில் இருந்து நாட்டின் பெரும்பாலான சிவில் துறைகள் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐந்துக்கும் மேற்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களாக முன்னாள் படைத் தளபதிகளே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாட்டின் எல்லா மாவட்டங்களுக்குமான இணைப்பாளர்களாக முன்னாள் படைத் தளபதிகளே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வைரஸ் தொற்றுச் சூழலானது அரசாங்கத்தின் இராணுவமயப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கான வழிகளை அகலத் திறந்து விட்டுள்ளது.

இதுபோன்ற அனர்த்த சூழ்நிலைகளில் எல்லா நாடுகளிலும் படைத்தரப்பே முன்னுக்கு வரும். இலங்கைத் தீவிலும் அதுவே நடந்தது.

ஆனால் ஏற்கனவே இராணுவ மயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்த அரசாங்கத்துக்கு அது மேலும் வழிகளை இலகுவாக்கிக் கொடுத்ததன் விளைவாக வைரஸ் தொற்றுக்கு எதிரான செயற்பாட்டுக்கு தலைவராக நாட்டின் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டார். வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பே முன்னணியில் நிற்கின்றது.

இவ்வாறு நாட்டை இராணுவ மயப்படுத்துவதன் மூலம் ராஜபக்சக்கள் தங்களையே பலப்படுகிறார்கள். எப்படியென்றால் சிங்கள ஊடகவியலாளர் குசல பெரேரா கூறுவதுபோல படைத் தரப்புக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையிலான உறவு சீமெந்தால் கட்டப்பட்டதை போன்றது.

எனவே படைத் தரப்பை பலப்படுத்தினால் அது அதன் தர்க்கபூர்வ வளர்ச்சியாக ராஜபக்சக்களைப் பலப்படுத்தும். படைத் தரப்பை போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்தால் அல்லது பாதுகாத்தால் அது அதன் தர்க்கபூர்வ விளைவாக படைத்தரப்புக்கு உத்தரவிட்ட ராஜபக்சக்களையே பாதுகாக்கும்.

எனவே படைத் தரப்பை தண்டிக்கப்பட முடியாத ஒரு தரப்பாக மாற்றுவது எப்படி என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நாட்டின் எல்லாத் துறைகளையும் அவர்கள் இராணுவமயப்படுத்தி வருகிறார்கள்.

இதன்மூலம் படைத் தரப்பை குற்றஞ்சாட்டும் நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வந்தால் அதே படைத்தரப்புடன்தான் கைகுலுக்க வேண்டியிருக்கும். ஏனெனில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள்தான் இருக்கிறார்கள். உதாரணமாக அமெரிக்காவினால் பயணத் தடை விதிக்கப்பட்ட இராணுவத் தளபதி வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கிறார்.

எனவே அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அந்த தளபதியுடன்தான் கைகுலுக்க வேண்டும். அதுமட்டுமல்ல நிலைமாறுகால நீதிச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டிருக்கும் காணாமல் போனவர்களுக்கான் அலுவலகம், இழப்பீட்டு நீதிக்கான அலுவலகம் போன்றவற்றுக்கும் முன்னாள் படைத் தளபதிகள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது நிலைமாறுகால நீதிச் செய்முறைகளுக்குள்ளும் படைத்தரப்பு வந்துவிட்டது.

இவ்வாறு நாட்டின் பெரும்பாலான துறைகளை படைமயப்படுத்தி வரும் ஒரு போக்கின் ஆகப் பிந்திய வளர்ச்சியே கொத்தலாவல சட்டமூலம் ஆகும். இச் சட்டமூலமானது நாட்டின் உயர் கல்வியை இராணுவமயப்படுத்துகிறது தனியார்மயப்படுத்துகிறது என்பவற்றுக்கும் அப்பால் நாட்டின் படைத் தரப்பை தொழிசார் அறிவியல் ஒழுக்கங்களிற்கூடாக உலகத்தரத்துக்கு ஈடு கொடுத்தது கட்டியெழுப்பும் நோக்கிலானது.

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் எனப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் படைக்கட்டமைப்பின் படைத்துறை உயர்நிலைப்பள்ளி ஆகும்.

நாட்டின் உயர் கல்வி அமைச்சின் செயலாளராக இருப்பவர் மேற்படி பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதிப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டவர். நாட்டின் வெளியுறவுச் செயலாளராக இருப்பவரும் மேற்படி பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர்தான்.

சிறிலங்கா படைத்துறை எனப்படுவது பாகிஸ்தானைப் போல நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக எப்பொழுதோ வளர்ச்சி பெற்றுவிட்டது..பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலைப் போல நாட்டின் தலைப்பேறான அனைத்து வளங்களையும் கொட்டி வார்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு அது.போர் வெற்றிகளின் பின் அது சிங்கள பௌத்த மேலாண்மையின் இதயமாக மாறியிருக்கிறது.

ராஜபக்சக்கள் அக்கட்டமைப்பை தமது செல்லப்பிள்ளை போல பராமரிக்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வர முன்பு கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பயிலும் மாணவர்கள் இலங்கை சட்டக் கல்லூரிக்குள் நுழைவதற்கு சில புலமைசார் தடைகள் இருந்தன.

ஆனால் கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் அத்தடைகளை அகற்றி விட்டார். கொத்தலாவல சட்டமூலத்தை ஏற்கனவே 2018இல் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முயற்சித்தார். இப்பொழுது அதை ராஜபக்சக்கள் பூர்த்தி செய்திருக்கிறார்கள்.

நாட்டின் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக எழுச்சி பெற்றிருக்கும் படைத்தரப்பை ஆகக்கூடியபட்சம் துறைசார் நிபுணத்துவ ஒழுக்கமுடையதாக கட்டியெழுப்பும் சிங்கள பௌத்த பெருந்தேசியவாத கனவின் பிரதிபலிப்பே மேற்படி சட்டமூலம் எனலாமா?

சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் அதன் அடிப்படைப் பலங்களை அதிகம் அறிவியல் மையப்படுத்தி வருகிறது. வியத்மக என்ற சிந்தனைக்குழாம் அந்த நோக்கிலானதே. அதன் ஆகப்பிந்திய வளர்ச்சியே கொத்தலாவல சட்டமூலம் எனலாம்.

எனவே தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெரிகிறது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் அதன் அடிப்படைப் பலங்களை மேலும் மேலும் விஞ்ஞானபூர்வமாக உலக தரத்துக்கு ஈடுகொடுத்து அறிவியல் மயப்படுத்த விளைகிறது.

ஆனால் தமிழ் தேசியவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? முகநூல் விவாதங்களிலும் நாடாளுமன்ற விவாதங்களிலும் தங்கள் சக்திகளையும் கவனத்தையம் குவித்து கொண்டிருக்கிறார்களா ? அவர்களில் எத்தனை பேர் தேச நிர்மாணம் என்ற விடயத்தை அறிவியல் பூர்வமாக விளங்கி வைத்திருக்கிறார்கள்? 

நிலாந்தன்அரசியல் ஆய்வாளர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More