⭕️இன்று யுவன் மற்றும் நா. முத்துக்குமார் குமார் பற்றிய கருத்துக்கள் அதிகமாக வர ஆரம்பித்திருக்கிறது…. யுவன் வெளித் தெரிய காரணம் நா. முத்துக்குமாரின் வரிகளா?இல்லை நா. முத்துக்குமார் வெளித் தெரிய காரணம் யுவனின் இசையா என்று…
அதற்கான பதிலை என்பதிவை முழுமையாக வாசித்த பின் நீங்களாக உணர்வீர்கள் என நம்புகிறேன்…
⭕️ யுவன் நா. முத்துக்குமார் பற்றி பேச முதல் நாங்கள் ஆரம்பதில் இருந்து வருவோம்….
⭕️நா. முத்துக்குமார்…
தமிழ்மொழிக்கு ஒரு சாபம் உண்டு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள்; கவிஞர்களை காலம் இளம் வயதிலேயே இழுத்துக்கொள்வது தான் அது. மகாகவி பாரதியின் காலம் வெறும் 39 ஆண்டுகள் தான். எழுத்தாளர் புதுமைப்பித்தன் வெறும் 42 ஆண்டுகள் தான் வாழ்ந்தார். பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வெறும் 29 வயதில் மறைந்து போனார். இளம் வயதிலேயே இவர்கள் காலமாகிப் போனாலும் காலத்தால் மறக்க முடியாத , காலத்தினால் அழிக்க முடியாத மகாசக்தியாக இன்றும் இவர்களது எழுத்துகள் நின்று பேசுகின்றன…
சமகாலத்தில் நான் வெகுவாக ரசித்த கவிஞர் நா.முத்துக்குமாரும் நாற்பத்து ஒரு ஆண்டுகள் தான் இந்த நிலத்தில் வாழ்ந்து போனார். ஆனாலும் அவரின் கவிதைகள் பாடல்கள் உரைநடை என அவருடைய எழுத்துகள் காலத்துக்கும் அவர் தந்து போன பொக்கிஷங்கள். எண்பதுகளின் மத்தியில் பிறந்த அவரது கவிதைகள் எண்பதுகளின் அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டவை.
தந்தை ஒரு படிப்பாளி என்பதால் வீட்டில் புத்தகங்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை..
ஆனாலும் இன்றையவர்களை போல் எல்லாம் கையில் இருந்தும் பயன்படுத்தாமல் காலத்தை கழிக்கவில்லை…
அனைத்தையும் கற்க ஆரம்பித்தார்..
நூல்களில் பிரியம் அதிகரித்தது….
சிறுவயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார்..
இயக்குனராக வேண்டும் என்னும் எண்ணத்தோடு சென்னை கிளம்பியவன். ஆனால் அவனை சூழல் தவிர்க்க முடியாத ஓர் கவிஞனாக உலகிற்க்கு காட்டியது…
சென்னை வந்தவர் பாலுமகேந்திரா திரைப்பட்டரையில் உதவி இயக்குனராக 4 ஆண்டுகள் இருந்தார்..
⭕️ சுஜாதாவை தெரியாதோர் இருக்கமாட்டோம்.அவர் எளிதில் எந்தக் கவிஞனையும் கவிதைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.. ஒருமுறை மேடையில் தூர் என்னும் கவிதையை படிக்கிறார்..
நீங்களும் அதை ஒரு முறை படியுங்கள்…
⭕️தூர்
வேப்பம் பூ மிதக்கும்
எங்கள் வீட்டு கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒரு முறை
விஷேசமாக நடக்கும்.
ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்…
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…
எடுப்போம் நிறையவே
‘சேறுடா சேறுடா’ வென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.
இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.
கடைசி வரை அப்பாவும்
மறந்தேப் போனார்
மனசுக்குள் தூர் எடுக்க…
எத்தனை ஆழமான அழகான கவிதை பாருங்கள்.. இதைப் படித்ததும் அவர் பூரித்துப் போனார்.. “இவ்வளவு எளிமையான கவிதையில் எத்தனை ஆழம்” என்று வியந்தார்…
அப்போது இதை எழுதியவர் யாரென்று வினவ கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுந்து சென்றான்…அவன் வேறு யாருமில்லை அவன் தான் நா. முத்துக்குமார் என்னும் ஆளுமை…
⭕️பாடலாசிரியராக….
சீமானின் வீர நடை படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்..
எளிமையான சொற்களை கோர்த்து பாடல்களை ஆக்கி படிப்பறிவி ல்லாதவன் வாயிலும் முணு முணுக்க வைத்தவன்.
⭕️நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
என்று காதலும் காமமும் இணைந்த தேடலை மிக மென்மையாக தன் பாடல்களில் சொன்னவர் நா.முத்துக்குமார். “எனக்குப் பிடித்த பாடல், அது உனக்கும் பிடிக்குமே” என்று எழுதியவர் எல்லோருக்கும் பிடித்த பாடலாக இருந்தார்.
⭕️உன்னாலே எந்நாளும்
என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே
என்று எல்லோருக்கும் புரியும் வகையில் தன் பாடல்களில் எளிமையாய் வலிமை செய்தார் நா.முத்துக்குமார்.
நா. முத்துக்குமார் பாடல்கள் எல்லாமே சிறப்பானவை என்றாலும் சில பாடல்களை குறிப்பிடுகிறேன்..வாய்ப்புக் கிடைத்தால் கேட்டுப் பாருங்கள் வரிகளில் எங்கேயே அழைத்துச் செல்லுவார்..
1.அழகு..அழகு..(சைவம்):
நா.முத்துக்குமாருக்கு இரண்டாவது தேசிய விருதை பெற்றுத்தந்த பாடல்.ஒரு சிறு குழந்தை,எளிமையான வரிகளோடு ஒரு பாடல் பாடினால் எப்படி இருக்குமோ,அதுபோல் பாடல் வரிகளை தேடிப்பிடித்து எழுதியதாக ஒரு பேட்டியில் நா.முத்துக்குமார் தெரிவித்திருந்தார்.
2.அவனப்பத்தி நான் பாடப்போறேன்(அவன் இவன்):
பாலாவின் அனைத்து திரைப்படங்களிலும் சிறந்த பாடல்களை கொடுத்த நா.முத்துக்குமார்,அவன் இவன் திரைப்படத்தின் அதிக சிரத்தை எடுத்து எழுதிய பாடல் ‘அவனப்பத்தி பாடப்போறேன்’.இளைஞர்களுக்கும் பிடித்த தத்துவ பாடல் என்ற சிறப்பும் இந்த பாடலுக்கு உண்டு.
3.தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..(கேடி பில்லா கில்லாடி ரங்கா):
தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்த நா.முத்துக்குமார்,தன் தந்தைக்கு கொடுத்த ஒரு பரிசு என்றே இந்த பாடலை கூறலாம்.தாய் குறித்த பல பாடல்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில்,தந்தை சிறப்புகளை கூறி முத்திரை பதித்த பாடல் இது..
4.வெயிலோடு விளையாடி(வெயில்):
வெயிலோடு விளையாடி.. பாடலை கேட்டாலே,நம்மை அறியாமல் குழந்தை பருவத்திற்குள் சென்றுவிடுவோம்.ஒரு மனிதன் தன் குழந்தை பருவத்தை எவ்வளவு நேசித்திருந்தால் இவ்வளவு ஒரு அழகான வரிகளை படைக்க முடியும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம்.
⭕️யுவன் முத்துக்குமார் கூட்டணி..
இத்தனை வருடங்களில் அவர் இசையமைத்த பாடல்கள், கேட்பவரின் மனதை உலுக்கி உணர்வுகளை எழுப்பிவிட்டு, பரவசப்படுத்தி, காதலிக்கச் செய்து விடுகின்றன. அதிலும் நா முத்துக்குமாரின் வரிகளை இசையாக மீட்டி யுவன் நமக்கு தரும்போது அந்த பாடல்களின் ஒவ்வொரு எழுத்தும் நம் மனதில் ஆழப்பதிந்து விடும் அளவுக்கு மனப்பாடமாகிவிடுகின்றன.
⭕️ 2001 இல் பாலாவின் இயக்கத்தில் வந்த நந்தா படத்தில் யுவனும் நா. முத்துக்குமாரும் இணைந்தனர்..
புதுப்பேட்டை படத்தில் ஒரு நாளில் பாடலில்,”எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்துருக்கும்,அத்தனை கண்ட பின்பும் பூமி இங்கு பூப்பூக்கும்” என்ற நா. முத்துக்குமாரின் வரிகளில் யுவனின் குரலில் இப்பாடல் கேக்கும்போது நாம் வாழ்க்கையின் விளிம்பில் இருந்தாலும் நமக்கொரு தெளிவு கிடைக்கும். இன்னும் சொல்ல போனால் யுவனின் சோக பாடல்கள் வெற்றி பெற இவரின் பாடல்கள்,படத்தின் கதையோடு ஒன்றியிருப்பது மட்டுமின்றி நமக்கு ஏற்பட்ட வலிகளை அப்பாடல்கள் நம்கண்முன் நிறுத்துவதும்தான்.மேலும் நா.முத்துக்குமார்-யுவன் கூட்டணி பாடல்கள் மிகவும் பக்கபலம்.
⭕️நல்ல வரிகளுக்கு உயிர் கொடுப்பதில் யுவன் தில்லாலங்கடி. குறிப்பாய் தாயை பிரிந்து வாடும் பல பேருக்கு ராம் படத்தில் வரும் “ஆராரிராரோ” பாடல் ஆகச்சிறந்த ஆறுதல். குறிப்பாக தனிமையில் யுவனின் பாடலை கேட்கும் வேலையில் கண்ணீராகும் கலங்கரை விளக்கம்.
மேலும் யுவனின் காதல் பாடல்கள் காற்றையும் கைது செய்யும். காதலிக்காதவர் கூட யுவனின் காதல் பாடல்களை காதலிப்பார்கள்.”கண் பேசும் வார்த்தைகள்” பாடலை கேட்டு கண் கலங்காதோர் லட்சத்தில் சிலர்.இப்படி தன் குரலாலும் இசையாலும் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்திய யுவனுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. “சோகமும் சுகம் தான்”என்பதை இவரின் இசையால் மட்டுமே உணர முடியும் .ஏதோ ஒரு சொல்லமுடியாத மந்திரம் இவரின் குரலிலும் இவர் அமைக்கும் இசையிலும் உள்ளது அதுவே இவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.காதல் தோல்விக்கு மருந்தே இல்லை,என காதலித்தவர்கள் கண்கலங்கிருக்க யுவனின் சோக பாடல்கள் அவர்களுக்கு மருந்தானது, செவிக்கு விருந்தானது. மேலும் படத்தின் கதைக்காக படம் ஓடாமல் இவரின் பாட்டுக்காகவே ஓடியது.”ஏதோ ஒன்று என்னை தாக்க” என்பதை போல் ஏதோ ஒன்று இவரின் இசையை திரும்ப திரும்ப
இப்படி நாம் இன்று யுவன் துதிபாட காரணம் நா.முத்துக்குமார் என்னும் கவிதை நதியின் வரிகள் மட்டுமே..
கேட்கவைக்கிறது.மேலும் கற்றது தமிழ் படத்தில் வரும் “பறவையே எங்கு இருக்கிறாய்“பாடல் இசைஞானி குரலில், யுவனின் இசையில் நம்மை எங்கோ வேறு ஒரு உலகத்திற்கு எடுத்து செல்லும்… உண்மையில் யுவனின் இசையில் உயிர் உள்ளது…அவ்வுயிர் நம்மை ஆட்டிப்படைக்கிறது…
கற்றது தமிழ், தரமணி, பையா, கேடி பில்லா கில்லாடி ரங்கா என யுவன் ஷங்கர் ராஜாவும் நா. முத்துகுமாரும் இணைந்த கூட்டணி நிகழ்த்திய மேஜிக் ஏராளம். காதல், வெறுமை, அன்பு, பிரிவு, இழப்பு என இப்படி எல்லா மனநிலைக்கும் அவரால் பாடல் எழுத முடியும். நம்மை புன்னகை செய்யவும், அழவைக்கவும் அவரால் முடியும், நம் நினைவுகளை நமக்கு தெரியாமலேயே நமக்குள் கடத்துபவர் நா.முத்துக்குமார்.
உங்களுக்கு விருப்பமான பாடல்களில் பாதி அவர் எழுதியதாகத்தான் இருக்கும். ஒரு மரத்தின் அசைவை, நதியின் ஓட்டத்தை, பறவையின் வாழ்வை, வரிகளில் வாழவைத்த முத்துக்குமாருக்கு, முன்னணி கதாநாயகர்களுக்கு ஒப்பான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
⭕️நா.முத்துக்குமார், காதல் கொண்டேன் திரைப்படத்தில் நான்கு பாடல்களை எழுதி இருந்தார், அவர் எழுதிய அணைத்து பாடல்களும் மெஹா ஹிட் ஆனதை தொடர்ந்து நா.முத்துக்குமார் தமிழ் சினிமாவில் முக்கிய பாடலாசிரியராக வலம் வர தொடங்கினர், அதே போன்று நா.முத்துக்குமார் பாடல் வரிகள் யுவன் சங்கர்ராஜாவின் இசையை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்ற அணைத்து பாடல்களையும் நா.முத்துக்குமார் ஒருவரே எழுதி இருந்தார் இந்த படம் மெஹா ஆனது, இந்த படம் வெற்றிக்கு நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும் யுவன் இசையும் முக்கிய பங்காற்றியது. இதனை தொடர்ந்து புதுப்பேட்டை, தீபாவளி, தாமிரபரணி , வேல், யாரடி நீ மோஹினி என தொடர்ந்து நா.முத்துக்குமார் மற்றும் யுவன் சங்கர்ராஜா கூட்டணி வெற்றிகளை பெற்றது.
இதன் பின்பு யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான படங்கள் தொடர் சரிவை சந்தித்து வந்தாலும் அவ்வப்போது நா.முத்துக்குமார் பாடல் வரிகள் யுவனை காப்பாற்றி வந்தது.
ஆனால் 2016ம் ஆண்டு நா முத்துக்குமார் மறைவுக்கு பின் யுவன் சங்கர்ராஜா இசையில் வெளியான படங்கள் சொல்லும்படி ஏதும் இல்லை, மேலும் அடுத்தடுத்து இவர் இசையில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை தழுவ இவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது தற்போது தமிழ் சினிமா உலகில் யுவன் சங்கர்ராஜா இருக்கின்றாரா என பலருக்கும் சந்தேகமா எழும் அளவுக்கு அவர் காணாமல் போய்விட்டார்
⭕️ நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்…
யுவனே சொல்கிறார் கேளுங்கள்..
சமீபத்தில் தனது நெருங்கிய சினிமா நட்பு வட்டாரத்தில் மனம் விட்டு பேசிய யுவன் சங்கர்ராஜா, எனது இசையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நா.முத்துக்குமாரின் வரிகளும் என்பது மறுக்க முடியாதது. தற்போது அவர் மறைந்த பின் என் இசை என்ன செய்வது என்று தெரியாம தனியாக தத்தளித்து கொண்டு இருக்கிறது, நா முத்துக்குமார் மரணம் அடைந்து என்னுடைய சினிமா வாழ்கையவே காலி செய்துவிட்டு நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டார் என புலம்பி தவிக்கிறார் யுவன் சங்கர்ராஜா என கூறப்படுகிறது.
இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்…..
⭕️GV பிரகாஷ் குமார்
ஜிவியும் நா. முத்துக்குமாரும்:
ஜிவி-யும் நா. முத்துக்குமாரும் இணைந்து உருவாக்கிய பாடல்களை பார்ப்போம். தனது முதல் படமான “வெயில்” படத்திலயே நா. முத்துக்குமாருடன் இணைந்து விட்டார் ஜிவி. ஜிவி-யும் நா.மு-வும் இணைந்து “வெயிலோடு விளையாடி”, “உருகுதே மருகுதே” என்ற இரண்டு அட்டகாசமான பாடல்களை தந்தனர். எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இவை. அதை தொடர்ந்து “அங்காடி தெரு” படத்தில் ஜிவி-யும் நாமு-வும் இணைந்தனர். நா. முத்துக்குமார் எழுதிய “கதைகள் பேசும் விழியருகே…” என்ற பாடலில் நம் அனைவரையும் உருக வைத்தார் ஜிவி.
முதலில் இவர்கள் கூட்டணியில் உருவான “மதராசபட்டிணம்” படத்தைப் பார்ப்போம். “பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே யாரும் பார்த்ததில்லையே…” என்ற பாடலும் “வாம்மா துரையம்மா இது வங்க கரையம்மா…” என்ற பாடலும் செம ஹிட்.
நூறு தடவைக்கும் அதிகமாக நாம் இந்தப் பாடலை கேட்டிருப்போம், அப்போதும் நமக்கு இது சலிக்கவில்லை. இந்த இரண்டு பாடல்களை போல மிக அருமையான… நரம்பில் சுர்ரென்று… உணர வைக்கும் இன்னொரு பாடலும் உள்ளது. அது “காற்றிலே… காற்றிலே… ஈரங்கள் கூடுதே… போர்க்களம் நடுவிலும் ரகசியமாக பூவென்று மலர்ந்திடுமே…” என்ற பாடல் தான் அது. நியாயப்படி இந்தப் பாடலுக்காக ஜிவிக்கும் நா.முத்துக்குமாருக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் ஆனால் கிடைக்கவில்லை.
அடுத்ததாக விக்ரமை வைத்து “தெய்வ திருமகள்” படத்தை எடுத்தார் ஏ.எல்.விஜய். யுவனுக்கும் நா.முத்துக்குமாருக்கும் எப்படி “ஆனந்த யாழை” பாடல் அமைந்ததோ அதைப் போல ஜிவி-க்கும் நா.முத்துக்குமாருக்கும் தெய்வ திருமகள் படத்தில் உள்ள “ஆரிரோ ஆராரிரோ… இது தந்தையின் தாலாட்டு” என்ற பாடல் அமைந்தது. ஆனால் இந்தப் பாடலும் தேசிய விருது பெறவில்லை.
அடுத்து மீண்டும் ஏ.எல்.விஜய், ஜிவி, நா. முத்துக்குமார் கூட்டணியில் உருவானது “தலைவா”. இந்தப் படத்தில் “யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது…” என்ற பாடல் ஜிவி, சைந்தவி குரலில் நா.முத்துக்குமார் வரிகளில் உருவாகி பட்டிதொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து ஏ.எல்.விஜய் உருவாக்கிய “சைவம்” படத்தில் “அழகே… அழகே…” பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கும் உத்ரா உன்னிகிருஷ்ணனுக்கும் தேசிய விருது கிடைத்தது.
அடுத்ததாக காக்கா முட்டை படத்தில் நா. முத்துக்குமாரும் ஜிவியும் இணைந்தனர். “செல்…செல்…செல்… சிறகை விரித்து செல்…” என்ற பாடலும் “கறுப்பு கறுப்பு நிறத்தை வெறுத்து…” என்ற பாடலும் ஜிவியும் நா.மு-வும் இணைந்து உருவாக்கியவை.
⭕️ இப்படி நாம் இன்று பிரபலங்களாக காணும் பலர் உருவாக காரணம் நா. மு வின் வரிகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
⭕️நூலாசிரியராக
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)[9]
கிராமம் நகரம் மாநகரம்[10]
பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
என்னை சந்திக்க கனவில் வராதே
சில்க் சிட்டி (நாவல்)
பால காண்டம் (கட்டுரைகள்)
குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
தூசிகள் (கவிதைகள்)
அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)
⭕️பெற்ற விருதுகள்
2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது[11]
2006: வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
2013: தங்க மீன்கள் படத்தில் “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
2014: சைவம் திரைப்படத்தில் “அழகே அழகே” பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது கிடைத்தது.
⭕️நல்ல மனிதனாக..
நண்பர்கள் உதவி கேட்டால், கடன் வாங்கியாவது உதவி செய், என்று தன் அப்பா சொன்னதாக “அணிலாடும் முன்றில்”, தொடரில் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் நா.முத்துக்குமார். ஆம், அப்பாவின் சொல்படியே நடந்தார் நா.முத்துக்குமார்.
சினிமா மேடைகளில் மட்டுமல்ல, இலக்கிய மேடைகளிலும் தன்னை அடிக்கடி இருத்திக் கொண்டார் நா.முத்துக்குமார். எங்களது எல்லா நிகழ்வுகளிலும் பங்கெடுப்பார், பங்கெடுக்க விரும்புவார் நா.முத்துக்குமார்…
முடிப்பு…..
ஒரு கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் இவ்வளவு பேர் கலந்து கொண்ட நிகழ்வு நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலமாகத்தான் இருக்கும். ஏன், எனில் நா.முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் அத்தனை பேரும் அவர் மீதான அன்பில் கலந்துகொண்டவர்களாகவே இருந்தார்கள். ஆம், “அன்பின் விழியில் எல்லாம் அழகே” என்று எழுதிய கவிஞர் அவர். அதற்காக தேசிய விருதும் பெற்றவர் அவர்….
இப்படி நா.முத்துக்குமார் பற்றி பேச இன்னும் விடயங்கள் இருக்கிறது… வரும் வாரங்களில் அவர் பாடல்களில் உள்ள நயங்களை விளக்கலாம் என காத்திருக்கிறேன்…..
⭕️இப்படிக்கு, நா. முத்துக்குமார் வரிகளில் மூழ்கி முத்தெடுக்கும் தெளியாக் கவிப்பித்தன்.
பாலாசயந்தன்