நாட்டில் நாளாந்தம் சுமார் 2300 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக்கூடியதல்ல.
நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கை 100 ஐ விட குறைவடையும் வரை சுகாதார கட்டமைப்பின் நெருக்கடி குறைவடையாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நேற்று புதன்கிழமை 2314 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். நாளாந்தம் இவ்வாறு சுமார் 2300 தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற நிலைமையானது எம்மால் ஈடுகொடுக்கக்கூடியதல்ல.
இந்த எண்ணிக்கை எம்மால் ஈடுகொடுக்கக்கூடியதை விட அதிகமாகும். இதனை மேலும் கீழ் மட்டத்திற்கு கொண்டு வரவேண்டும்.
ஒரு தொற்றாளர் கூட நாட்டினுள் இனங்காணப்படாமல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மாத்திரமே தொற்றுறுதி செய்யப்பட்ட காலம் ஆரம்பத்தில் இலங்கையில் காணப்பட்டது.
தற்போதுள்ள நிலைமையை அந்த கட்டத்திற்கு கொண்டு செல்வது எந்தளவிற்கு வெற்றியளிக்கும் என்பது எமக்கு தெரியாது.
எனினும் அதன் பின்னர் நாளாந்தம் சுமார் 100 தொற்றாளர்களே இனங்காணப்பட்ட காலம் காணப்பட்டது. அந்த நிலைமைக்கு மீண்டும் சென்றால் மாத்திரமே எம்மால் வழமைக்கு திரும்ப முடியும்.
இந்த நிலைமையானது கொவிட் கட்டுப்படுத்தலில் எவ்வித பாதக தாக்கத்தையும் செலுத்தாது என்றார்.