செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

7 minutes read

இந்த பச்சை வயல்கள் நான் சுமக்கும் பசுமையான எண்ணங்கள், அங்கே அவர் சுமப்பது எனது எண்ணச்சுமைகளே, நான் திரும்பிப்பார்க்கும் வாழ்க்கை என்பதனால் திரும்பி நடக்கும் ஒருவர், வந்த சுவடுகள் தேடி பயணப்படுகிறேன். மீண்டும் அந்த வாழ்வைநோக்கி, து ஒரு படம் அல்ல அது தான் நான்…

-வைத்திய நிபுணர் ரி. கோபிசங்கர்

“சின்னவா அண்ணா இண்டைக்கு முட்டாள் வேலைக்கு போட்டான் நீ வாறியா”, எண்டு நான்  கேக்க முதல் அவன் ஓடிப்போய் வெறும் காச்சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு வந்தான். “ இவன் சின்னவன் என்னத்துக்கு பக்கத்து வீட்டு ராசையா அண்ணையை கேளுங்கோவன் “எண்டு மனிசி சொல்ல, அவன் மூஞ்சை சுருங்கிச்சுது. அவரையும் கேக்கிறன் இவனும் வந்து பழகட்டும் எண்டு கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன்.

பிளாஸ்டிக் bagக்குக்குள்ள சாவிகள் மூண்டு, குறுக்கால வாற கொப்புக்களையும் சிவரில முளைக்கிற ஆலமரத்தையும் வெட்டக் கத்தி, சிங்கர் ஒயில் சூப்பிக்குள்ள பெற்றோல், பழைய plugகுகள், மிசினுக்க விட மண்ணெண்ணை போத்தில், இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயிறு, பழைய துணி  எல்லாம் எடுத்து வைச்சிட்டு, கறுத்த நீட்டுக்குழாயை சுத்தி வட்டமாக்கி குறுக்கால கைத்தைக் கட்டி தூக்கி தோளில  பலன்ஸா வைச்சிட்டு சைக்கிளை  உருட்டத் தொடங்க கட கட சத்தத்தோட கரியில கொளுவின மிசினும் உருளத் தொடங்கினது. பள்ளிக்கூட நீலக்காச்சட்டைக்கு மனிசி நெஞ்சு சட்டை பின்னை இறுக்கிக்குத்தி, கவனம் எண்டு சொல்லி அனுப்பி விட்ட சின்னவனோ பின்னாலை மிசினை தள்ளிக் கொண்டு வந்தான் .

போன கிழமையே “ தம்பி திங்கக்கிழமை முப்பத்தொண்டு,  ஞாயிற்றுக்கிழமை காலமை கீரிமலைக்கு போட்டு பதினொரு  மணிக்கு வந்திடுவினம், நேரத்துக்கு  வந்து இறைச்சு விட்டாத்தான் மிச்ச வேலை செய்யலாம்“, எண்டு சொன்னதை ஞாபகமாக்கி, தார் சூடும் சேர்ந்து துரத்த கொஞ்சம் எட்டி நடக்கத் தொடங்கினன். ஊரில செத்தவீடு நடந்தா சந்தோசப்படுற ஆக்களில நாங்களும் இருந்தம்.

வீட்டுக்குப் பின் பக்கமா போய் மூலைச்  சுவரோட சைக்கிளை சாத்தீட்டு சட்டையை கழட்டி சுருட்டி கவனமா வைச்சிட்டு எட்டிப் பாக்க வீட்டு அம்மா வந்தா. “ரெண்டு போத்தில் எண்ணை வேணும்”  எண்டு பேரம் தொடங்க அவ என்ன இப்ப தானே பொங்கலுக்கு இறைச்சனான் எண்டு குறைக்க வெளிக்கிட, இல்லை அம்மா போன மாசம் பெஞ்ச மழையால நீர் முட்ட நிக்குது எண்டு சொல்லி ஒரு மாதிரி காசுக்கு மேல அரைப்போத்தில் மண்ணெண்ணையும் கிடைக்கிற சந்தோசத்தில குழாயை அவிட்டு புட்வால்வ் ஐ மெல்ல கிணத்துக்க இறக்கினன்.  சின்னவன் அவிட்ட குறுக்கு கயிறு ஒண்டு குழாயில கட்டி இருக்க மற்றதை தென்னையை சுத்திக் கட்டினான். இவன் கெட்டிக்காரன் மூத்தவன் மாதிரி இல்லாமல் டக்கெண்டு விசயத்தை பிடிக்கிறான் எண்டு ராசையாண்ணை சொல்ல கொஞ்சம் பெருமையா இருந்திச்சு.

எப்பிடியும்  பொங்கலுக்கு முதல் ஒருக்கா ( மாரி மழை முடிய நிறைய தண்ணி இருக்கும்), வருசப்பிறப்புக்கு முதல், ( இப்ப சேறு வாரி எடுக்காட்டி வெய்யில் கூடக் கூட தண்ணி வத்திறதோட ஒரு மணமும் வரும்.) மற்றது நல்லூர் திருவிழாவுக்கு எண்டு வருசத்திக்கு மூண்டு தரம் அக்கம் பகத்தில கிணறு இறைப்பினம்.

அதோட அந்திரட்டி, துடக்கு கழிவு, வீடு குடிபுகுதல் எண்டு அப்பப்ப ஏதாவது வரும். சில வேளை பூனை விழுந்தது, கோழி விழுந்தது, சாமாங்கள் விழுந்திச்செண்டு வருவினம். போன வரியம் ஒருக்கா, ஒருபக்கம் இழுத்திருந்த மனிசன் ஒண்டு விழுந்திட்டெண்டு கூப்பிட்டவை. நல்ல வேளை ஊர்பெடியள் எல்லாம் நிண்ட படியா கதிரையை இறக்கி ஆளை வச்சுக்கட்டி தூக்கி எடுத்தது.

முந்தி கிணத்துக்க விழுந்த சாமாங்கள் எடுக்க கைமருந்து மாதிரி வீட்டையே சாமாங்கள் இருந்தது. மிதக்கிறதுகளை வாளியாலயே எடுக்கலாம். வாளி விழுந்தா தான் மான் கொம்பு, இல்லாட்டி பாதாளக்கறண்டி தேவை. ஊர்ப்பக்கம் மம்பட்டியயை கட்டியும் வாளி எடுக்கிறவை. மத்தியான நேரங்களில விழுந்த வாளி தெரியாது, குடையை பிடிச்சுக்கொண்டு தான் விழுந்த இடம் தேடுறது. எல்லாம் பிழைச்சா ஆள் தான் இறங்கிறது.

பெற்றோல் குப்பியை அமத்தி ஓட்டைக்குள்ள அடிச்சிட்டு, சோக்கை இழுத்துப் பிடிச்சுக்கொண்டு, இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயித்தை கட்டி இழுக்க அதிசியமா ரெண்டு அடியோட start ஆகிட்டு. திறந்து இருந்த சோக்கை கொஞ்சம் மூடி மிசினை இறுக்கி தண்ணி வாற குழாயை பொத்திப்பிடிக்க தண்ணி கையைத்தள்ளிக் கொண்டு  பாயத் தொடங்கிச்சு.

“ஓடிற மிசின் காத்திழுக்காமல் பாக்கோணும் இல்லாட்டி திருப்பயும் தண்ணி விட்டு நிரப்பி start பண்ண வேணும் “எண்டு சின்னவனுக்கு சொன்னபடி ராசையா அண்ணையிட்டை மண்ணெண்ணையை போத்திலை குடுத்தன் பாத்து விடச்சொல்லி.  “தம்பி இந்த தண்ணியை கொஞ்சம் வாழைக்கு  வெட்டிவிடும் “ எண்டு வந்தா வீட்டம்மா.  

குடுத்த extra மண்ணெண்ணை காசை பிடிக்க மனிசியும் வேலை வாங்குது எண்டு தெரிஞ்சபடிநானும் சின்னவனை நிமிந்து பாக்க அவனும் பாத்தியை வாழைக்கு திருப்பி விட்டான் . சிலவேளை இறைக்கிற தண்ணீல தான் கழுவாத வீட்டைக்கழுவி குளிக்காத ஆக்கள் குளிப்பினம். கிணத்தையே மீன் தொட்டியாக்கி  மீன் விட்டு வளக்கிற சின்னனுகள் சட்டியோட நிக்கும் மீன்குஞ்சு பிடிக்க.

கொஞ்சம் மிசினைக் கூட்டி விட்டிட்டு தண்ணி வத்த கிணத்துக்க இறங்க ஆயித்தப்படுத்தினன். தென்னையில கட்டின கயித்தை இழுத்துப் பாத்திட்டு கிணத்தை எட்டிப் பாத்தன் . என்ன தான் பழகின கிணறு  எண்டாலும் இறங்க முதல் ஒருக்கா ஆழம் பாக்க வேணும். கிணறுகள் கட்டேக்க கல்லுவைச்சு கட்டிறது ஏற இறங்க வசதியாய். எண்டாலும் பழைய கிணறு எண்டால் கல்லுக்கு பதில் பள்ளம் தான் இருக்கும். பள்ளத்துக்கு கால் வைச்சு பூரான் கடிச்சு பட்ட பாடுகள் நிறைய இருக்கு. உள்ளுக்க இறங்கி் பள்ளம் பாத்து foot valve ஐ மாத்தி வைச்சிட்டு நிமிந்து பாக்க  விளக்கு மாறும் சட்டி ஒண்டும் வந்து விழுந்திச்சு.

விளக்குமாத்தால சிவரைத் தேச்சு தண்ணியை எத்திப் பாசியை கழுவி விட தண்ணி கலங்கலாய் வரும். கடைசீல மக்கி சின்னக்கல்லு எல்லாம் சேந்து வர குழாய்க்குள்ள காத்திழுக்கத் தொடங்க இஞ்சினை நிப்பாட்டி விட்டுட்டு கஞ்சல், விழிந்திருந்த மாபிள்கள் எல்லாம் அள்ளிப்போட்டு வாளியோட மேல அனுப்ப ,சாம்பிராணியும் தணலும் கீழ வந்திச்சுது . தம்பி வடிவாக்காட்டும் எண்டு சொல்லிக்கொண்டு செய்த வேலை திருப்தியா எண்டு அம்மா எட்டிப் பாத்து சந்தோசப்பட திருப்பி மேல ஏறினன். கிணறு இறைக்கிறது இந்தப்பாடெண்டால் அதை வெட்டிக் கட்டிறது எந்தப்பாடு எண்ட யோச்சபடி மேல ஏறினன்.

கிணறு வெட்டிக்கட்டிறதும் ஒரு பெரிய வேலை . கிணத்தை வெட்டேக்க அதுக்கு மட்டும் எண்டு நிலையம்பாக்கிற சாத்திரி மார் சிலர்  இருந்தவை, வளவுக்க இருக்கிற தென்னை மரத்தில தென்னோலை ஒண்டை புடுங்கி ஒலையை கிழிச்சு ஈக்கிலை எடுத்து இரண்டு முழங்கையையும் இடுப்போட அணைச்சுக் கொண்டு ரெண்டு கையாலேம் பிடிச்ச, ஈக்கிலை வண்டி வைச்ச மாதிரி வளைச்சு  வளவின்டை வட கிழக்கு, (ஈசான) மூலைப்பக்கம் நடப்பினம். ஊத்து வர, ஓலை தன்டபாட்டில சுத்த தொடங்கும். ஊத்துக்கு கிட்ட வரேக்க ஓலை கட கட வெண்டு சுத்தும், உள்ளுக்க இருந்து வெளிப்பக்கம் சுத்தினா நல்ல தண்ணி இல்லாட்டி சில நேரம் உவர் தான்.

முதல்ல கிணத்தை ஆழமா வெட்டி ஊத்தைக்கண்டோன்ன ஒரு பொங்கல் போட்டு தான் மிச்ச கட்டிற வேலை செய்யிறது. கிண்டத் தொடங்க முதல்ல கல்லும் மண்ணும் கலந்து வரும். நிலத்துக்கு ஏத்த மாதிரி பதினைஞ்சு அடி ஆழம் கிட்ட முட்ட வர கல்லுப்பாறை வரத்தொடங்கீடும். தனிப்பாறை கண்டு இன்றும் வெட்டிக்கொண்டு போக ஒரு மூண்டடிக்குள்ள தண்ணி வரும்.

கிணறு வெட்டிறாக்களின்டை வேலை  தண்ணி கண்டோன்ன முடிஞ்சிடும். அச்செழு காரர் தான் அப்ப கூட கிணறு வெட்டிற வேலை செய்யிறவை. பிறகு கிணத்தைக் கட்டிறது மேசன் மார். அடிக்கல்லுப் பாறை மூண்டடிக்கு இருக்கும்  அதுக்கு மேல பாறை விளிம்பில இருந்து உள்ளுக்க மண்ணை வாரி கிணத்தை அகட்டிப் போட்டு பாறைக்கு மேல தான் கல்லு வைச்சு கட்டிறது. கிணத்துக்க கட்டிற பொளிகல்லு நுணாவில் வேம்பிராய் பக்கம் தான் இருக்கும். பாறைக்கு மேல பாரமான பொளிகல்லை வைச்சுக்கட்டிறது கஸ்டம். வெளீல மரம் வைச்சு ஊஞ்சல் மாதிரிக்கட்டி கிணத்துக்க இறக்கி அதில இருந்து தான் கிணத்துக்கு சுத்திச்சுத்தி சிவர் கட்டிறது.

வெள்ளம் வாற இடங்களில மட்டும் நிலத்துக்கு மேல கிணத்தடிக்கட்டை உயத்திக் கட்டுவினம் இல்லாட்டி ரெண்டடி தான். அதோட கிணத்தடியில உடுப்பு தோய்க்கிற  ஒரு கல்லும் ஒரு தொட்டியும் கட்டித்தான் கிணத்தடி வேலை முடிக்கிறது.

கிணத்துக்கு தூண் போட்டு, குறுக்கால மரம் வைச்சு கட்டின கப்பீல வாளியைக் கட்டிறதிலும் முறை இருக்கு. வாளி கட்டேக்க வளையத்தின்டை நடுவில  ரெண்டு முடிச்சுத்தான் போடுறது, இல்லாட்டி தண்ணி அள்ளேக்க வாளி பிரளாது. வாளி பிரண்டாத்தான் தண்ணி கோலும். கப்பீல ஓடிற கயித்தின்டை கைய அப்பிடியே விட தண்ணீல போய் மோதி கொஞ்சம் தண்ணி மட்டும் உள்ள போக,  திருப்பி கொஞ்சம் இழுத்திட்டு ரெண்டு தரம் தண்ணீல குத்தீட்டு கையை விட, வாளி தண்ணிக்கு மேல ஒயில் மாதிரி இருந்த படையையும் (அப்பவும் சுன்னாகம் Company இருந்ததோ?) மிதக்கிற பூவரசு இலையையும் தாண்டி உள்ள போகும் . உள்ள போன வாளியை ரெண்டு இழுவையில வெளீல இழுத்திட்டு, ஒரு கையால வாளியை கவிட்டுப்பிடிக்க புழுதி பிரண்ட மற்றகையால கோலிப்பிடிச்சபடி குடிக்கிற தண்ணி, நுவரேலியா lion pub beer இலும் பாக்க ஜில் எண்டு இருக்கும். (புழுதிக்கையும் கிணத்துத்தண்ணியும் secret of my energy).

வைத்திய நிபுணர் டாக்டர் ரி. கோபிசங்கர்
யாழப்பாணம்.

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More