ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள தகவல்களை ஆராய்ந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று அரசாங்கத் தலைவர்களிடம் பிரேரணையை சமர்ப்பிக்கத் தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது.
அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் அரசாங்கத்தை தாக்கி முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா ஆற்றிய கடுமையான பேச்சு குறித்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல்களின் போது, சிறிசேனவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு கர்தினால் தமது எதிர்ப்பை வெளியிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கடுமையான உரையைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதனை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தேவாலயங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொல்லப்பட்டதாக இந்திய உளவுத்துறைக்கு 12 தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை தடுக்க தவறியதாக இராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்திருந்தார்.