கதக் நடனக் கலைஞரும் பத்ம விபூஷண் விருது பெற்றவருமான பண்டிட் பிர்ஜு மகராஜ் தனது 83 வயதில் காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் திங்களன்று காலமானார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய தகவல்களை கொண்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது மரணம் குறித்த செய்தி வெளியானவுடன், சமூக ஊடகங்களில் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இது குறித்து இந்திய பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில்,
இந்திய நடனக் கலைக்கு உலகளவில் அங்கீகாரம் வழங்கிய பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு கலை உலகிற்கு பேரிழப்பு. அவரது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில்,
ஈடுஇணையற்ற நடனக் கலைஞரான பட்டிட் பிர்ஜு மகாராஷ் மறைந்தார். ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே என்று பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தான் நடித்த விஸ்வரூபம் படத்தில் கதக் நடனத்தை ஆட, பிர்ஜு மகாராஜ்ஜிடம் நடனம் பயின்றார். அந்த படத்தில் வரும் ‘உன்னை காணாது’ பாடலுக்கு சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய விருதை பிர்ஜு மகாராஜ் பெற்றார். அதேபோல் பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்திற்காகவும் தேசிய விருதை பெற்றார்.
பிர்ஜு மகாராஜ்ஜிக்கு பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, காளிதாஸ் சம்மான் ஆகிய விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.