செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மண்ணின் மைந்தன் நா சோதிநாதன் அவர்களின் வாழ்வும் சிறப்பும் | வரலாற்றுப் பதிவு

மண்ணின் மைந்தன் நா சோதிநாதன் அவர்களின் வாழ்வும் சிறப்பும் | வரலாற்றுப் பதிவு

9 minutes read

கிளி மக்கள் அமைப்பினால் 2020ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருது கடந்த தைமாதம் 16ம் நாள் 2022 அன்று வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வுக்காக கிளி  பீப்பிள் அமைப்பு தயாரித்து வழங்கிய அவரது மாண்புறும் வரலாற்றுத் தொகுப்பு. 

திரு நா சோதிநாதன், முன்னாள் அதிபர், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்

திரு சோதிநாதன் அவர்கள், யாழ்ப்பாணாம், சண்டிலிப்பாய், ஆலங்குழாயைச் சேர்ந்த நாகலிங்கம் பொன்னம்மா தம்பதிகளுக்கு 2ஆவது மகனாக ஏப்பிரல் மாதம் 25ம் திகதி 1938ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அண்ணா ராமநாதன் தங்கை விமலா. தந்தையார் மலாயன் ரயில்வேயில் உத்தியோகத்தராக‌ வேலை செய்த காரணத்தால் தனது குழந்தைப்பருவத்தை சிங்கப்பூரில் கழித்தார். இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் சிங்கப்பூரை ஆக்கிரமித்திருந்த அசாதாரண சூழ்நிலையால், பாதுகாப்புத் தேடி இவர் குடும்பத்தினருடன் 1946 ஆம் ஆண்டு மீண்டும் சண்டிலிப்பாய்க்கு வந்து சேர்ந்தார்.

அதே ஆண்டு, தனது ஆரம்பக் கல்வியை யா/சண்டிலிப்பாய் வடக்கு அ த க பாடசலையில் ஆரம்பித்து, பின் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாய் இருந்த யா/ சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இணைந்து தன் உயர்கல்வியினைத் தொடர்ந்தார். அந்தகாலத்தில் யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த அதிபர்களில் ஒருவராக இன்றும் நினைவு கூறப்படும் திரு ஒரேற்றர் சுப்பிரமணிய‌த்தின் கீழ் கல்வி கற்றதோடு மட்டுமல்லாது, அவரின் விருப்பத்திற்குரிய மாணவனாகவும் திகழ்ந்தார். பாடசாலைக்காலங்களில் உதைபந்தாட்ட அணியிலும், சாரணியத்திலும் ஈடுபட்டு கல்லூரிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார்.

கல்லூரி கற்கை முடிவுற, அப்போதைய பிரதமர் டட்லி செனநாயக்கவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி, நீர்ப்பசனம் மற்றும் மின்சக்க்தி வளத்துறை அமைச்சின் செயலாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராகவும் இருந்த திரு ஸ்ரீகாந்தா அவர்கள், இரணைமடு கட்டுமானத்துடன் இணைத்து படித்த வாலிபர்களுக்காக மேட்டுநில குடியேற்றங்களை உருவாக்க விரும்பினார். அதன் முதலாவது தொகுதி படித்த வாலிபர்களுடன் இணைந்து 1958ஆம் ஆண்டு கிளிநொச்சி வந்து, காடு வெட்டி, கோழிப்பண்ணை அமைத்து கனகபுரம் படித்த வாலிபர் குடியேற்றத் திட்டத்தினை உருவாக்கும் முதன்மையானவர்களில் ஒருவரானார். அப்போது கிளிநொச்சிப் பிரதேசம் பெரும்பாலும் காடாகவே இருந்தது. அன்றிலிருந்தே பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டு, கிளிநொச்சி பிரதேசத்தை உருவாக்கும் பல பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்தக்காலப் பகுதியில் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் அதிபராகவிருந்து ஓய்வு பெற்ற பின்னர், கிளிநொச்சி கருணா நிலையத்தின் நிர்வாகியாக இருந்த‌ ஹட்சின்ஸ் அம்மையாருக்கு நிர்வாக உதவியாளராக இணைந்திருந்த அவரது மாணவி கிறிஸ் ரீனா பாய்க்கியத்தை (சின்னக்குட்டி சின்னத்தம்பி) காதலித்து 1966 ஏப்பிரல் 25ம் திகதி திருமணம் செய்துகொண்டார். அவர்களின் இல்லறம் என்னும் நல்லறத்தில் கலாநிதி, தயாநிதி, கபிலன் எனும் மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள்.

கனகபுரம் குடியேற்றம் மெல்ல விருத்தியாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து யா/ பரந்தன் அ.த.க. பாடசாலையில் 15.7.1964 அன்று ஆங்கில ஆசிரியராக‌ தனது முதல் நியமனத்தைப் பெற்று ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். ஆசிரியப்பணியின் அடுத்த கட்டமாக, 1966ஆம் ஆண்டு, நல்லூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இணைந்து பயிற்சிபெற்று 1968ஆம் ஜனவரி 1ம் திகதி பயிற்சிபெற்ற ஆசிரியராக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நு/பொகவந்தலாவ‌ ஹொலி றோசரி த.க. பாடசாலைக்கு நியமனம் பெற்றார். அதே ஆண்டு ஜூன் மாதம் இடமாற்றம் பெற்று, மீண்டும் கிளிநொச்சி மண்ணுக்கு திரும்பி வந்து முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராக இணைந்து, பின் 1973ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு ஆசிரியராக மாற்றலாகி வந்தார்.

அப்போது கிளிநொச்சிக்கு உயர்தரம்வரை கற்கக்கூடிய ஒரு முதன்மை பாடசாலை வேண்டும் என்று தீர்மானித்து, அப்போது அதிபராக இருந்த திரு சண்முகநாதனுடன் இணைந்து MP ஆக இருந்த திரு குமாரசூரியருடனும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, A9 வீதிக்கு கிழக்காக இருக்கும் இடத்தை தெரிவு செய்து 50 ஏக்கர் நிலத்தைப் பெற முன்னின்றார். அதுவே இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயமாக உயர்ந்து நிற்கிறது.

ஆசிரியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது 1971ஆம் ஆண்டு அகில‌ இலங்கைத் தமிழாசிரியர் சங்கத்துடன் இணைந்து தொழிற்சங்க செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி, அதன் பிரச்சாரச் செயலாளராக உயர்ந்தார். அப்போது தமிழாசிரியர்களுக்கென இரண்டு தொழிற்சங்கள் தொழிற்பட்டுவந்தன. ஒற்றுமையே பலம் என்பதை உணர்ந்து, அப்போது அகில இலங்கை அரசினர் பாடசாலை தமிழாசிரியர் சங்க‌த்தின் செயலாளராக இருந்த திரு பாலசுப்பிரமணியதுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, இரண்டு சங்கங்களையும் இணைக்க வலியுறுத்தினார். அதன் பலனாக, 19.1.1974 ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், மண்டபம் நிறைய திரண்டிருந்த தமிழாசிரியர்கள் மத்தியில் இரண்டு சங்கங்களும் இணைந்து, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் எனும் தனிப்பெரும் தொழிற்சங்கத்தை உருவாக்கியதோடு, திரு டி எஸ் கே வணசிங்க தலைவராக இருக்க, திரு பாலசுப்பிரமணியம் பொதுச் செயலாளராக இருக்க, இவர் நிர்வாகச் செயலாளாரக இருந்து தொழிற்சங்க நடவைக்கைகளை நல்லமுறையில் நிர்வகித்து வந்தார். அத்துடன், பல்வேறு நாடுகளின் ஆசிரியர் சங்கங்களுடன் இணைந்து கருத்தரங்குகளில் பங்குபெற்றி, தொழிற்சங்க‌ நடவடிக்கைகளை மேம்படுத்தினர். தொடர்ச்சியாக 27 வருடகாலம், தொழிற்சங்க வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்து, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின், நிதிச்செயலாளர், மூத்த உதவித் தலைவர், தலைவர் என முக்கிய பதவிகள் வகித்திருந்தார்.

ஆசிரியர் தொழிற்சங்கவாதியாக, 1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சம்பள மீளாய்வுக்குழுவுக்கு தலைமையேற்று, இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஐந்து தரங்களைக் கொண்ட‌ ஆசிரியர் தரம் (Teacher’s Grade) எனும் வரைவிலான சம்பளமுறையையும், ஆசிரியர்களுக்கான ஆரம்ப நியமன அடிப்படைச் சம்பளமுறையையும் முதன்முதலாக பிரேரித்திருந்தார். இதை இவரது தொழிற்சங்க தொழிற்பாட்டின் முக்கியமான ஒரு மைல்கல்லாகக் கருதலாம்.

கல்வி சார்ந்த தொழிற்சங்கப் பணியோடு மட்டும் நின்றுவிடாது, பல்வேறு சமுகப் பணிகளிலும் இவர் அக்கறை காட்டிவந்தார். விவசாய‌ பூமியாக இருந்த கிளிநொச்சி மண்ணின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அறிவு பூர்வமான செயற்பாடுகள் அவசியம் என்று கூறி, 70களின் பிற்பகுதியில் பகுத்தறிவுப் பாசறை எனும் முயற்சியினூடாக பல்வேறு அறிவு பூர்வமான செய்ற்திட்டங்களை செய்தார். தொடர்ந்து, 80 களின் தொடக்கத்தில் கல்வி, பாலர்கல்வி, சத்துணவு, விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு இயங்கிய‌, காந்தீயம் எனும் அமைப்பின் தலைவராகி கிளிநொச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பாலர்பள்ளிகளை ஆரம்பித்து, பல நல்ல திட்டங்களை செயற்படுத்தினார்.

சமுகப்பணிகளினூடே, இவர் ஈடுபட்ட சமயப்பணிகள் சிலவற்றையும் பார்ப்போம்.

யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு ஸ்ரீகாந்தா அவர்கள், அருட்திரு யோக சுவாமியின் தீவிர தொண்டனாக இருந்ததோடு மட்டுமல்லாது, இவரையும் ஆன்மிக‌ பணியில் தொண்டாற்ற தூண்டினார். அந்த வகையில் 1959 ம் ஆண்டு, யோகசுவாமிகளின் ஆலோசனைப்படி, கனகாம்பிகை அம்பாள் ஆலயத்திற்கு நிலையம் எடுத்ததைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இவரது ஆன்மிக‌ பணி ஆரம்பமானது எனலாம். அருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய நிர்மாணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வந்ததுடன், அதன் தர்மகர்த்தா சபையின் தலைவராக பலவருடங்கள் இருந்ததுடன், இன்றும் அறங்காவலராக இருந்து தனது தொண்டினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இவரது திருமணம்கூட அருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்திலேயே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

60 களின் முற்பகுதியில் வெற்றிவேலு விதானாயாரின் குடும்பப் பராமரிப்பில் இருந்த‌ கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலை, பொதுக்கோயிலாக மாற்றி ஒரு தர்ம கர்த்தா சபையிடம் கையளித்த‌போது, அதன் செயலாளராக‌ பணிகளை ஏற்று, கிளிநொச்சியில் உள்ள தனவந்தர்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியோடு சுற்றுப்பிரகாரங்கள் அமைத்து 1973ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் நடாத்தி, கிளிநொச்சியின் முதன்மை கோயிலாக அதை உருவாக்கக் காரணமாக இருந்தார். அதுமட்டுமல்லாது சக ஆசிரியத் தொண்டர்களின் உதவியோடு ஞாயிறு காலைகளில் அறநெறிப் பாடசாலையையும், வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனைகளையும் நடத்தி சமயப் பண்புகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாது, 1952 இல் ஆரம்பிக்கப்பட்ட பழம்பெரும் அறநெறிசார்ந்த அமைப்பான‌ திருநெறிக்கழகதில் இணைந்து பல்வேறு சமயப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி, இன்றும் அதன் தலைவராக இருந்து தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.  இரணைமடு வாய்க்காலில் ஏழை மக்களும் ஆடி அமாவாசையில் தங்களுக்கு ஏற்றவகையில் பிதிர் கடமைகளைச் செய்ய நீர்ப்பாசனப் பொறியியலாளர்களிடம் பேசி ஏற்பாடு செய்தது இவரது அண்மைக்கால பணியாகும்.

80 களின் ஆரம்பத்தில் கிளிநொச்சி ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் தலைவராக இருந்த காலத்தில், அபகரிக்கப்பட்டிருந்த அதன் காணியை, நீதிமன்றத்தில் வழக்காடி 1983ஆம் ஆண்டில் மீண்டும் ஆலயத்திற்கென பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்க ஒரு விடயம்..

மீண்டும் அவரின் ஆசிரியப்பணிக்கு வருவோம்.

1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற‌ அதிபர்தர போட்டிப்பரீட்சையில் இலங்கையிலேயே முதலாம் இடத்தைப் பெற்று, 1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி, கண்டி வத்தேகம பாரதி வித்தியாலயத்திற்கு அதிபராக பதிவு உயர்வு பெற்றுச் சென்றார், அதன்பின் குண்டசாலை தமிழ் வித்தியாலயம், அம்பிட்டியா புதிய தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் அதிபராக கடமையாற்றினார்.

கண்டி மாவட்டத்தில் வேலை செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரசியல், பொருளாதாரம், புவியல் சார்ந்த துறைகளில் பட்டப்படிப்பை கற்றுத்தேர்ந்து 1978 ஆம் ஆண்டு BA பட்டதாரியானார்.  

1982 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி, கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு மாற்றலாகி வந்து பிரதி அதிபராக இணைந்துகொண்டார். அப்போதைய அரசியல் நெருக்கடிகளால், சிறிது காலத்திலேயே, கிளிநொச்சி தனிமாவட்டமாக மாறமுன்பு, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலத்திற்கு பிரதி அதிபராக மாற்றலாகி சென்றார். இதுவே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக‌ நாவலரால் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட‌ சைவப்பிரகாச வித்தியாசாலை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து, சில பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் முயற்சியால், மீண்டும் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபராக பதவியேற்றுக்கொண்டார். அப்போதைய காலகட்டத்தில் இருந்த‌ கொத்தணிப் பாடசாலைகள் அமைப்பின்படி, 1987ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 16ம் திகதி கிளிநொச்சி கொத்தணி பாடசாலைகளின் அதிபராகவும் தனது மேலதிக கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியில் இவர் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராக இருந்த காலம் மிகவும் முக்கியமானது. கிளிநொச்சி பின் தங்கிய மாவட்டமாக இருந்தபடியாலும், ஆளணி, தளபாடம், இதர வளங்களின்பற்றாக்குறையாலும் யாழ்ப்பாண பாடசாலைகளில் கல்வி கற்றால் மட்டுமே பல்கலைக்கழகம் செல்லலாம் என்றிருந்த நிலையை மாற்றியமைக்க செயற்படுவதே அவரது முதன்மையான முயற்சியாக இருந்தது. அந்த முயற்சிகளின் பலனாக, இவரது மாணவர்கள், இவர் அதிபராக இருந்த காலத்தில் முற்று முழுதாக கிளிநொச்சியிலேயே கல்வி கற்று முதன்முதலாக மருத்துவம், பொறியியல், முகாமைத்துவம், பல் மருத்துவம், விலங்கு மருத்துவம் விவசாயம், விஞ்ஞானம் என் பல்வேறு துறைகளுக்கும் தெரிவானார்கள். அதற்காக‌, முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக 1988ஆம் ஆண்டு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு வருகை தந்தபோது, கிளிநொச்சி மாவட்டத்திற்கு பல்கலைக்கழக அனுமதியில் சகல துறைகளுக்கு அனுமதி வழங்கவும், கிளிநொச்சி மாவட்டத்திற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கோட்டாவை அதிகரிக்கவும், மாணவர் சங்கங்கள் துணையோடு வேண்டுகோள் விடுத்தார். அதன் பலனாக அடுத்த ஆண்டே பல்வேறுதுறைகளுக்கு மாணவர்களுக்கு அனுமதி கிடைத்தது என்பது இங்கு நினைத்துப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சியின் வெளிப்பாடாக‌, கல்விப் பொதுத்தராதர‌ சாதாரணதர பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது 8D யும், உயர்தர பரீட்சையில் முதலாவது 4A இம் இவர் அதிபராக இருந்த காலத்தில் இவரது மாணவர்களால் பெறப்பட்டவை என்பது பெருமைக்குரிய விடயமாகும். அதே போல, 1992ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவால், உயர்தர பரீட்சையில் மாவட்டம்தோறும் முதல் 4 இடங்களைப் பிடித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில், 3 மாணவர்கள் கிளி மத்திய மகா வித்தியாலயத்தில் இருந்து தெரிவானார்கள் என்பது மற்றுமொரு சாதனை.

கல்வி விருத்தியோடு மட்டும் நின்றுவிடாது, விளையாட்டு மற்றும் கலைத்துறைகளிலும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார். அதற்காக‌ பராமரிப்பின்றி காடாக இருந்த பாடசாலையின் தென்கிழக்கு பகுதி காணித்துண்டை மாணவர்களின் உதவியோடு சிரமதானம் முலம் சுத்தம் செய்து பாடசாலைக்கென ஒரு மைதானத்தை உருவாக்கி, கிளிநொச்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்று நடத்தும் முக்கியமான மைதானமாக அதை மேம்படுத்தினார். அதன் மூலம் விளையாட்டுத் துறையிலும் மாணவர்கள் பல்வேறு சாதனைகளைச் செய்ய தூண்டி, கலைத்துறையிலும் மானவர்களை ஈடுபடுத்தி பல உச்சங்களை தொட வைத்து, பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் வெற்றிகளை குவிக்க வழியமைத்தார். அதுமட்டுமல்லாது, வழமையான கல்வித்திட்டத்திற்கு மாறாக, மாலை கட்டல், சைக்கிள் பழுதுபார்த்தல், விவசாயம் என‌ பல்வேறு தொழிற்கல்விகளையும் மாணவர்களுக்கு சகமாணவர்கள், ஆசிரியர்களைக் கொண்டு பகுதி நேரமாக மாலை நேரங்களில் பயிற்றுவித்தார்.

அந்தக் காலம், பல்வேறு அரசியல், கெடுபிடிகள், இடப்பெயர்வுகள், போராட்டங்கள் என‌ பல‌ நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த காலம். மானவர்களினதும் ஆசிரியர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்த சவாலான காலம். பல்வேறு சவால்களுக்கு மத்தியில், சம்பந்தப்பட்ட அனைத்து சாராரிடமும் பேச்சுவார்த்தை நடாத்தி தன்னாலான அனைத்து வழிகளிலும் பாடசாலைச் சமுகத்தின் பாதுகாப்புக்கு பாடுபட்டார்.

இன்றைக்கு 35வருடங்களுக்கு முன்பே தோழமை முறையில், மாணவர்களுக்கு முன்னுரிமை தந்த‌, நவீன நிர்வாக முறையை நடைமுறைப் படுத்திய, ஒரு சிறந்த அதிபராக‌ இன்றும் அவரது மாணவர்களால் மதிக்கப்படுகிறார். அதிகார மொழி எதையும் பயன்படுத்தாமல், “பாதகமில்லை” என்ற வார்த்தையால் வழிதவறிய மாணவர்களையும் நெறிப்படுத்திய ஆளுமை இவருக்கே உரியது. இவருடன் பணியாற்றிய உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் இவரது பணிக்கு உறுதுணையாக இருந்து தோள்கொடுத்தார்கள் என்பதோடு பின்னாளில் சிறப்பான அதிபர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்தார்கள் என்பது பெருமைப்படத்தக்க விடயம். அவர்கள் மட்டுமல்லாது, பல்வேறுநாடுகளில் பல்வேறு பதவிகளில் சிறந்தமுறையில் நிர்வகித்து வரும் இவரது மாணவர்கள், இவரது நிர்வாகத்திறமையின் வழித்தோன்றல்கள் என்று சொல்லலாம்.

ஆசிரியப்பணியின் நிறைவாக‌, 1997 ஆம் ஆண்டு பூநகரி கோட்டத்திற்கு உதவிக் கல்விப் பணிப்பாளாரக பொறுப்பேற்று, பின்பு 1998 ஆம் ஆண்டு தனது 60ஆவது வயதில் அரசபணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்பு அப்போதைய இடப்பெயர்வுகளால், கண்டி மற்றும் கொழும்பில் வசித்துவந்தாலும் பல்வேறு வழிகளில் கிளிநொச்சி மண்ணுக்கு தனது சேவையினை ஆற்றி வந்தார்.

யுத்ததினால் பாதிக்கப்பட்டிருந்த வீட்டினை திருத்தி மீண்டும் கிளிநொச்சியில் குடியேறத்தக்க வகையில் தயார்படுத்திக் கொண்டிருக்கும் போது, 2014 டிசம்பர் மாதம் 14ம் திகதி அவரது பாரியார் நோய்வாய்ப்பட்டு இறந்தது அவருக்கு பேரிழப்பாக இருந்தது. மனைவியின் ஈமக்கிரியைகளை கிளிநொச்சியிலேயே நடத்த முடிவெடுத்து, கிளிநொச்சி வந்து ஈமக்கிரியைகளை செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் வாழ்ந்த நேசித்த, கிளிநொச்சியிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறார்.

இன்றும் தனது 84 ஆவது வயதிலும், பல்வேறு சமுகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருவதோடு, அனைத்துச் சிறுவர்களுக்கும் கல்வியறிவு கிடைக்கவேண்டும் என்றும், எந்தக்குழந்தையும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் கல்விக்கான தனது ஊக்குவிப்பை தொடர்ந்து வழங்கிவருகிறார்.

அத்துடன், பல்வேறு அமைப்புகளுக்காக‌, தனக்கு தெரிந்த கிளிநொச்சியின் ஆரம்பகால நிகழ்வுகளை, பல்வேறு தகவல்களை நாளைய சந்ததிக்காக திரட்டி ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அவற்றை வரலாறாக எழுதி ஆவணப்படுத்த உதவுவருகிறார். அந்த வகையில், கனகபுர வரலாறு, இரணைமடுக் கட்டுமானத்துடன் கூடிய கனகாம்பிகை அம்பாள் ஆலய‌ வரலாறு மற்றும் கந்தசுவாமி கோயில், ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் போன்ற ஆலயங்களின் வரலாற்றையும் தொகுத்து பல்வேறு மலர் வெளியீடுகளில் இணைத்திருக்கிறார். கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் 75ஆம் ஆண்டு மலருக்காக, பாடசாலையின் வரலாற்றினையும் தொகுத்து எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளி  பீப்பிள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More