எமது அன்றாட வாழ்வில் கலந்த சினிமா பற்றி அரிய தகவல்கள் பற்றிக் காண்போம்.
முதல் தமிழ்த் திரைப்படம்
1916 இல் வெளிவந்த “கீசகவதம்” எனும் மெளனத் திரைப்படமே தமிழில் வெளியான முதல் திரைப்படமாகும். 35 நாட்களில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதனை நடராஜ முதலியார் இயக்கியிருந்தார். இவரே தமிழ்த் திரையுலகின் முதல் இயக்குனரும் ஆவார்.
தமிழில் வெளியான முதற் பேசும் படம்.
1931 வெளியான “குறத்திப் பாட்டும் டான்சும்” எனும் நான்கு ரீல்கள் கொண்ட குறும்படமே தமிழல் வெளியான முதல் பேசும் படமாகும்.
தமிழில் வெளியான முதல் பேசும் முழுநீளப் படம்
முதன் முதலில் தமிழில் வெளியான முழுநீளத் திரைப்படம் “காளிதாஸ்” ஆகும். 1931இல் இதனை எச்.எம்.ரெட்டி இயக்கியிருந்தார். இதில் பி.ஜி. வெங்கடேசன், டி.பி. ராஜலட்சுமி உட்பட பலர் நடித்து இருந்தனர்.
தமிழில் முதன்முதலில் வெளியான முழுநீள வண்ணப் படம்
தமிழில் வெளியான முதல் வண்ணப்படம் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” எனும் திரைப்படமாகும். இது 1956 இல் வெளியானது. இதில் எம்.ஜி.ஆர் , பானுமதி போன்றோர் நடித்திருந்தனர். இயக்குனர். ரி.ஆர். சுந்தரம் ஆவார்.
தமிழில் வெளியான முதல் இரட்டைவேடப் படம்
1940 வெளியான “உத்தம புத்திரன்” எனும் திரைப்படமே தமிழில் வெளியான முதல் இரட்டைவேடப் படமாகும். இதில் பி.யு. சின்னப்பா என்பவர் இரட்டை வேடமிட்டு நடித்திருந்தமை குறிப்பிடற்குரியது. ரி.ஆர். சுந்தரம் இப்படத்தை இயக்கி இருந்தார்.
பாடல்கள் அதிகம் கொண்ட முதல் தமிழ் திரைப்படம்
தமிழில் வெளியான அதிக பாடல்கள் கொண்ட முதல் திரைப்படம் 1934 இல் வெளியான “ஶ்ரீ கிருஷ்ண லீலா” ஆகும். இதில் மொத்தம் 62 பாடல்கள் உள்ளன. இயக்கனர் பி.வி.ராவ்.
அதிக நாட்கள் ஓடிய முதற் தமிழ்த் திரைப்படம்
1944 இல் வெளியான “ஹரிதாஸ்” எனும் தமிழ்த் திரைப்படமே முதன் முதலில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமாகும். சுமார் 110 வாரங்கள் இத்திரைப்படம் ஓடியமை குறிப்பிடத்தக்கது. சென்னை பிராட்வே திரயரங்கில் இத்திரைப்படம் ஓடியமையும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் சுந்தர ராவ் நட்கர்ணி படத்தை இயக்கி இருந்தார். தியாக ராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் அப்போது 10 இலட்சம் ரூபா வசூல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
1999 இல் வெளி வந்த “சுயம்வரம்” எனும் திரைப்படம் ஒரு நாளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் 23 மணித்தியாலங்களும் 58 நிமிடங்களுக்குள்ளும் எடுக்கப்பட்டதாகும். இத்திரப்படம் சாதனைப் பதிவேடான கின்னஸ் புத்தகத்தில் சாதனைத் திரைப்படமாகப் பதிவு செய்யப்பட்டமை தமிழ் சினிமாக்குக் கிடைத்த வெற்றியே ஆகும்.
வெளி நாட்டில் படப்பிடிப்பு இடம்பெற்ற முதற் தமிழ்த் திரைப்படம்.
1937 இல் லண்டனில் படமாக்கப்பட்ட “நவயுவன்” எனும் திரைப்படமே வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். இதில் வி.வி.சடகோபன், சேசகிரி பாகவதர், பி.ஆர்.ஶ்ரீபதி உட்பட பலர் நடித்து இருந்தனர். மிஷெல் ஒமலெவ் இதனை இயக்கி இருந்தார்.
வெளிநாட்டு திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்
1959 பி.ஆர். பந்துலு இயக்கி சிவாஜி நடிப்பில் வெளியான “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படமே இது. கெயிரோ ஆபிரிக்க ஆசியத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
தமிழில் வெளி வந்த முதல் 70 mm மூவி.
1986 வெளி வந்த “மாவீரன்” திரைப்படம் தமிழில் வெளிவந்த முதல் 70 mm திரைப்படமாகும். இதில் ரஜினி, அம்பிகா போன்றோர் நடித்திருந்தனர். இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.
தமிழில் வெளியான மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் திரைப்படம்.
1943 வெளியான “ஹரிச்சந்திரா” கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.
தென்னிந்திய முதல் திரையரங்கு.
1900 – மவுண்ட் தெருவில் வார்வித் மேஜர் (ஆங்கிலேயர்) என்பவரால் “எலக்ரிக் திரையரங்கம்” எனும் பெயரில் அமைக்கப்பட்ட திரையரங்கே தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு ஆகும்.
இந்தியர் ஒருவரால் அமைக்கப்பட்ட முதற் திரையரங்கு.
1914 சென்னையில் வெங்கையா என்பவரால் “கெயிட்டி” எனும் பெயரில் அமைக்கப்பட்ட திரையரங்கே இந்தியர் ஒருவரால் அமைக்கப்பட்ட முதல் திரையரங்காகும். இவ்வரங்கம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
ஒரே காட்சியில் இருவர் தோன்றும் முதல் தமிழத் திரைப்படம்
“துருவா” – இது 1935 இல் வெளிவந்தது. இதில் சிவபாக்கியம் – ராணி வேடத்திலும் கை ரேகை பார்க்கும் குறத்தியாகவும் நடித்திருந்தார்.
ஒரே திரையரங்கில் ஒரு ஆண்டுக்க மேல் ஓடிய முதல் தமிழ்த் திரைப்படம்.
1937 – “சிந்தாமணி”. இத்திரைப்படத்தை இயக்குனர் ஒய்.வி.ராவ் இயக்கி இருந்தார். தியாக ராஜ பாகவதர், சேர்களத்தூர் சாமா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழில் வெளியான முதல் திரைப்பட இதழ்.
சினிமா உலகம் – 1935 – இதன் ஆசிரியர் பி.எல் செட்டியார்.
தென்னிந்திய முதல் “சினிமா ஸ்கோப்” படம்.
“ராஜ ராஜசோழன்” எனும் திரைப்படமாகும். 1973 இல் வெளிவந்த இத்திரைப்படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கி இருந்தார். சிவாஜி, எஸ்.வரலட்சுமி, முத்துராமன் உட்பட பலர் நடித்திருந்தனர். 100 நாட்கள் தொடர்ந்து இத்திரைப்டம் ஓடியமையும் குறிப்பிடத்தக்கது.
ஆபிரிக்க மொழியான சூலுவில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
பிரியசகி (2005) – மாதவன், சதா உட்பட பலர் நடிப்பில் இத்திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஏ.வி.மெய்யப்பனின் (ஏ.வி.எம்) முதற் திரைப்படம்.
1935 இல் வெளியான “அல்லி அர்சுனா”
நன்றி : in4net.com