நட்சத்திரம் போல சினிமா வானில் ஜொலிப்பார் என நினைத்த நடிகை ஷோபா எரி நட்சத்திரமாக தன் வாழ்வில் வெறும் 17 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அப்போது ஆட்டிப் படைத்தது.
16 வயதில் இயக்குநர் பாலு மகேந்திராவை திருமணம் செய்து கொண்ட ஷோபா, 17 வயதில் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதே புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
1962ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி கேரளாவில் பிறந்தவர் நடிகை ஷோபா. அவருக்கு பெற்றோர்கள் மகாலக்ஷ்மி மேனன் எனப் பெயரிட்டனர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்தபோது ஷோபா என அவருக்கு பெயர் சூட்டப்பட்டது. 17 வருட உலக வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை செய்தவர் ஷோபா.
3 வயதில் பிரபல நடிகர் பிரேம் நசிர் நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான மலையாள படமான ஜீவித யாத்ரா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகை ஷோபா அறிமுகம் ஆனார். அப்போது அவருக்கு வெறும் 3 வயது தான். தொடர்ந்து ஏகப்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி உள்ளார் ஷோபா.
அதே நேரத்தில் மலையாளத்தில் அறிமுகமான அதே நேரத்தில் தமிழிலும் நாணல் எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் நடிகை ஷோபா. தட்டுங்கள் திறக்கப்படும், இரு கோடுகள், புன்னகை உள்ளிட்ட சில தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே, 1971ம் ஆண்டு மலையாள படத்திற்காக மாநில விருதை வென்றவர் இவர்.
மறக்க முடியாத படங்கள் கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1978ம் ஆண்டு வெளியான நிழல் நிஜமாகிறது படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஷோபா. ரஜினி உடன் முள்ளும் மலரும், பாலு மகேந்திரா இயக்கத்தில் அழியாத கோலங்கள், மூடு பனி உள்ளிட்ட பல மறக்க முடியாத படங்களில் நடித்துள்ளார் ஷோபா.
தேசிய விருது கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடிப்பது இவருக்கு இயல்பாகவே வந்ததால், தான் இன்னமும் இவரை ரசிகர்கள் தங்கள் வீட்டு பெண்ணை பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். இயக்குநர் துரை இயக்கத்தில் 1979ம் ஆண்டு வெளியான பசி படத்திற்காக தேசிய விருதை தட்டிச் சென்றார் நடிகை ஷோபா. ஏழ்மையே உருவான குப்பம்மா கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதை இன்றைய தலைமுறையினரும் பார்த்து நடிப்பு பாடம் கற்றுக் கொள்ளலாம்.
பாலு மகேந்திராவுடன் திருமணம் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் அழியாத கோலங்கள், மூடு பனி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஷோபாவை 1978ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இயக்குநர் பாலு மகேந்திரா. ஆனால், தன் வாழ்வில் தென்றலாக வந்த ஷோபா நொடிப் பொழுதில் செல்லும் மின்னலாக 1980ம் ஆண்டு மே 1ம் தேதி தற்கொலை செய்து மரணித்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஷோபா பற்றிய படம் 1983ம் ஆண்டு மலையாள இயக்குநர் கே.ஜி. ஜியார்ஜ் இயக்கத்தில் வெளியான லேகாயுதே மரணம் ஒரு ஃபிளாஷ்பேக் படம் நடிகை ஷோபாவின் வாழ்க்கையையும் அவரது தற்கொலை மரணத்தையும் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய விருது, ‘ஊர்வசி’ விருது என 17 வயதில் தென்னிந்திய சினிமா உலகை கலக்கிய நடிகை ஷோபா, நீண்ட காலம் வாழாமல் மறைந்ததை எண்ணி இன்றும் அவரது ரசிகர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
நன்றி : tamil.filmibeat