புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா புதிய பாடம் | சிறுகதை | இராமியா

புதிய பாடம் | சிறுகதை | இராமியா

5 minutes read

“மத்தியானம் மொத பீரியட்லே நம்ம ‘தாத்தா’கிட்டே அறுபட வேண்டியிருக்குடா” என்று அலுத்துக் கொண்டான் ஒரு மாணவன். அவன் தாத்தா என்று கூறியது அந்தப் பாட வேளைக்கு வகுப்பெடுக்கும் பொருளாதார ஆசிரியரைத் தான்.
“அதான் கிளாஸைக் கட் பண்ணலாம்னு சொன்னேன். கேட்டியா?” என்று கேட்ட இன்னொரு மாணவனிடம் “கட் பண்ணிடலாம். ஆனா அட்டெண்டென்ஸ்..?” என்று கேள்விக்குறியுடன் நிறுத்திக் கொண்டான் முதலாமவன். அப்பொழுது ரவி என்ற மாணவன் வகுப்பிற்குள் நுழைவதைப் பார்த்த முதலாமவன் “இதோ நம்ம ‘அறிவாளி’ (ரவிக்கு அவனுடைய நண்பர்கள் வைத்த செல்லப் பெயர்) வர்ரான். டேய் ரவி இன்னைக்கு நம்ம தாத்தாவை மடக்கித் திணற அடிக்கிற மாதிரி கேள்வி கேக்கணும். எத்தனை நாள் தான் அவர் எங்களை அறுக்கிறது? ஒரு நாளாவது நாம அவரை அறுக்கணும்” என்று தன் உள்ளார்ந்த ஆசையை வெளியிட்டான்.

ரவி சிரித்துக் கொண்டே தன் இடத்தில் சென்று அமர்ந்துவிட்டான். வழக்கம் போலவே ஆசிரியர் சரியான நேரத்திற்கு வந்துவிட்டார். அட்டெண்டென்ஸ் எடுத்து முடித்தவுடன் பாடம் எடுக்கத் தொடங்கினார். கரும்பலகையில் ‘நுகர்வோர் உபரி’ என்று எழுதிவிட்டு அதைப் பற்றி விளக்க ஆரம்பித்தார். “நுகர்வோர் உபரி என்ற கருத்தினை நுகர்ச்சியியலில் அறிமுகப்படுத்தியவர் ஆல்பிரட் மார்ஷல் ஆவார். நுகர்வோர் உபரி என்ற இக்கருத்து இன்றியமையாததாகவும், மலிவானதாகவும் அமைந்த பொருட்களுக்குத்தான் வரையறுக்கப்படுகிறது…”

ரவி குறுக்கிட்டான். “முக்கியமில்லாத பொருளுக்கு இக்கருத்து ஏன் சார் வரையறுக்கப்படறதில்லே?”

“குறுக்கே இந்த மாதிரி அனாவசியக் கேள்விகளைக் கேட்டுத் தொந்தரவு பண்ணக் கூடாது. பாடத்தைக் கவனி” ஆசிரியரின் பதிலைக் கேட்டு ரவி அமர்ந்தான். ஆனால் அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் மேலும் ஏதாவது கேட்கும்படி சீண்டிவிட்டுக் கொண்டே இருந்தார்கள்.

“உதாரணமாக அஞ்சல் அட்டை, தீப்பெட்டி, உப்பு காகிதம் போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தாமல் போவதைவிட அதிக விலை கொடுத்தேனும் வாங்குவதை முக்கியமானதாகக் கருதுகிறோம்…” ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் ரவி குறுக்கிட்டான். “உதாரணமாக் கொடுத்த பொருள்லே அரிசி, பருப்பு, சமையல் எண்ணெயைச் சேர்த்துக்கலாமா சார்?”

“அவையெல்லாம் விலையுயர்ந்த பொருட்கள். அதனாலே இந்தக் கருத்துக்கு ஒத்து வராது.”

“உப்பு, காகிதம், தீப்பெட்டி கூட விலை கம்மியா இல்லியே சார். அதனோட மதிப்பை விட அதிகமாத்தானே விக்குது?”

“ரவி! கிளாஸ்லே ஒழுங்காப் பாடத்தைக் கவனிக்க மாட்டியா? ஏன் தொண தொணன்னு .. சீ! உன்னோட பெரிய நூஸன்ஸாப் போச்சி”

மாணவர்கள் ‘ஹோ’ என்று இரைச்சலிட்டனர். அந்த இரைச்சலையும் மீறி ரவி “அரிசியைக் கம்பேர் பண்றப்போ உப்பு மலிவாத்தான் விக்குது. ஆனா மோட்டார் சைக்கிள், டி,வியைக் கம்பேர் பண்றப்போ அரிசி பருப்பு மலிவாத்தானே விக்குது? அப்ப ஏன் அரிசியையும் பருப்பையும் நுக‌ர்வோர் உபரிக் கருத்துக்கு உதாரணமா எடுத்துக்க மாட்டேங்குறீங்க?” என்று ஆசிரியரை மடக்கினான்.

ஆசிரியர் “நீ வாத்தியாரா வர்ரப்போ இதையெல்லாம் உதாரணமா எடுத்துச் சொல்லலாம். இப்ப நான் சொல்றதைக் கவனி” என்று கூறிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்தார்.

“ஒரு அஞ்சல் அட்டையை வெளியிலே 20 பைசான்னு வாங்குறதுக்கு தயங்குறதில்லே. அதாவது ஒரு அஞ்சல் அட்டைக்கு ஒருவன் 20 பைசா கொடுக்கத் தயாரா இருக்கிறான். அவன் தபலாபிஸில் சென்று 15 பைசா என்று வாங்கும் போது அவனுக்கு 5 பைசா உபரித் திருப்பதி ஏற்படுகிறது. அதே போல ஒரு கிலோ உப்பை ஒருவன் ஒரு ரூபாய்க்கு கூட வாங்கத் தயாராக இருக்கிறான். ஆனால் 60 அல்லது 70 காசுக்கு ஒரு கிலோ உப்பு கிடைக்கிறது. அதாவது நுகர்பவனுக்கு 30 அல்லது 40 பைசா உபரித் திருப்தி ஏற்படுகிறது. இந்த உபரித் திருப்தியைத் தான் பொருளாதாரத்தில் ‘நுகர்வோர் உபரி’ என்கிறோம்.”

மீண்டும் ரவி குறுக்கிட்டான். “ஒருவன் அஞ்சல் அட்டைக்கு 10 பைசாவும் ஒரு கிலோ உப்புக்கு 30 பைசாவும் தரத்தயாராக இருந்தால்?”

“அவனுக்கு அஞ்சல் அட்டையும் கிடைக்காது. உப்பும் கிடைக்காது” என்று கூறிவிட்டுப் பாடத்தைத் தொடர எத்தனித்தார். ஆனால் ரவி விடுவதாக இல்லை.

“அதுக்கு ‘நுகர்வோர் குறைபாடு’ ன்னு சொல்றதா சார்?”

வகுப்பறையில் மீண்டும் இரைச்சல் எழுந்தது. “விடாதே மச்சி, நல்லாக் கேளு” என்று யாரோ ஒரு மாணவன் மூலையில் இருந்து குரல் கொடுத்தான். ஆசிரியர் பொறுமை இழந்தார். ரவியின் கேள்விக்குப் பதில் அளிக்க முடியவில்லை. தான் மாணவனாக இருந்த காலத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ளவில்லை என்றும் மாணவர்களுக்கு ஒழுக்கம் படிப்பைவிட முக்கியமானது என்றும் அறிவுரை கூறினார். வகுப்பறையில் நடந்து கொள்ளும் விதம் கூடத் தெரியாத இவர்கள் வளர்ந்த பின் நாட்டின் நிலைமை எப்படி இருக்கப் போகிறதோ என்று தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். கூடவே மனதின் ஓரத்தில் ‘நுகர்வோர் உபரிக்கு அரிசி, பருப்பை ஏன் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது? ஒரு கிலோ உப்புக்கு ஒருவன் 30 பைசா மட்டுமே தரத் தயாராக இருந்தால் அதற்கு என்ன பெயர் சொல்வது? நுகர்வோர் குறைபாடு என்று சொல்வதா?’ என்று ஒரு குட்டிச்சாத்தான் வேலை செய்து கொண்டிருந்தது.

விலைவாசிகள் மக்களின் ரத்தத்தைச் சுண்ட வற்றடித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் ‘நுகர்வோர் உபரி’ என்று கற்பனைச் சுகத்தில் மிதக்கவிட்டுக் கொடூரமாகக் கேலி செய்யும் கல்விமுறைக்கான காரணம் விளங்காமல் தவித்தார். அப்பொழுது ஆசிரியருடைய நண்பர் ஒருவர் “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சொல்லிக் கொண்டே வகுப்பறைக்குள் நுழைந்து அவருடைய காதில் ரகசியமாக ஏதோ கூறினார். உடனே ஆசிரியருடைய முகம் அதிர்ச்சியில் விகாரமடைந்தது. மாணவர்களைப் பார்த்து வகுப்பு முடிந்துவிட்டது என்று கூறிவிட்டு நண்பருடன் வெளியேறினார். நிலைமையைப் புரிந்து கொள்ளாத மாணவர்கள் ‘ஹோ’ வென இரைச்சலிட்டனர்.

விஷயம் இதுதான். ஆசிரியருடைய மனைவிக்குத் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். நண்பர் வந்திருந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஆசிரியரும் ஏறி அந்த மருத்துவ மனையை நோக்கிச் சென்றனர். நண்பர் ஆசிரியருக்கு ஆறுதலும் தைரிய‌மும் அளித்துக் கொண்டே சென்றார். கூடவே பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்கத் தயாராக இருக்கும்படியும் இது போன்ற சில அனுபவங்களில் இருந்து இவ்வாறு சொல்வதாகவும் கூறினார். மருத்துவமனையை அடைந்தவுடன் அவசர அவசரமாக உள்ளே சென்று விசாரித்தார். அங்கிருந்த நிலவரம் இதுதான். ஆசிரியரின் மனைவிக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். மொத்தம் ஆறாயிரம் ரூபாய் செலவாகும். உடனடியாக இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். ஆசிரியருக்கு விழி பிதுங்கியது. “கொஞ்சம் கொறைச்சுக்க முடியுமா? பாருங்க சார். என்னாலே அவ்வளவு கொடுக்க முடியாது சார்.” ஆசிரியர் கெஞ்சினார்.

“நாம ஒண்ணும் கம்பெல் பண்ணலே சார். முடியாதுன்னா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போங்க” என்று பதில் வந்தது. நண்பரோ ஆசிரியருடைய காதில் மெதுவாகக் கிசுகிசுத்தார்.தான் பத்தாயிரம் செலவாகும் என்று எதிர்பார்த்ததாகவும், இப்பொழுது ஆறாயிரம் மட்டுமே செலவாகிறது என்றால் அது குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கூறினார். ஆனால் ஆசிரியரால் மகிழ்ச்சியடைய முடியவில்லை. “என்ன சார் சொல்றீங்க?” என்ற குரல் கேட்டு ஆசிரியரின் சிந்தனை கலைந்தது. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார். நண்பர் மீண்டும் ஒரு முறை நுகர்வோர் உபரி என்ற பழைய பாடத்தை எடுத்தார். ஆனால் ஆசிரியரின் மனதில் மாணவன் ரவி தெரிந்தோ தெரியாமலோ எடுத்த நுகர்வோர் குறைபாடு என்ற புதிய பாடம் தான் அடிக்கடி இடறிக் கொண்டிருந்தது.

– இராமியா

(இச்சிறுகதை 28.2.1988 நாளிட்ட தீக்கதிர் வண்ணக்கதிரில் வெளியானது)

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More