ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் பெண் கதாபாத்திரங்கள் சார்ந்த கதைகள் அரிதாகவே வெளிவருகின்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம். இதில் நயன்தாரா, சமந்தா ஆகிய இரண்டு முன்னணி நாயகிகள் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இரண்டு நாயகிகள் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படங்கள் சமகாலத்தில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் கவனம் ஈர்த்த 5 படங்களைப் பற்றி சற்றே நினைவுகூர்வோம்.
பில்லா:
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் ‘பில்லா’. ரஜினி நடித்த ‘பில்லா’ படத்தின் ரீமேக்கான இதில், இரண்டு கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். மேலும், இந்தப் படத்தில் நயன்தாராவும், நமீதாவும் இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
வேலாயுதம்:
இயக்குநர் மோகன் ராஜா இயக்கி விஜய் நடித்த படம், ‘வேலாயுதம்’. ஜெனிலியா, ஹன்சிகா மோட்வானி இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்திருப்பர். ஒருவர் பத்திரிகையாளராகவும், மற்றொருவர் காதலியாகவும், இருவரும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தங்களுக்கென உண்டான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்கள்.
ஆயிரத்தில் ஒருவன்:
கார்த்தி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்தப் படத்தில் ஆன்ட்ரியா, ரீமா சென் இருவரும் இணைந்து நாயகிகளாக நடித்திருப்பார்கள். திரையில் இருவருக்கும் சமமான வாய்ப்பை கொடுத்திருப்பார் இயக்குநர் செல்வராகவன். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
என்ஜிகே :
சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் இருவரும் நடித்த படம் ‘என்ஜிகே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருப்பார். இரண்டு நாயகிகளை வைத்து அவர் எடுத்த இரண்டாவது திரைப்படம். அரசியல் படமான இந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.
காத்து வாக்குல ரெண்டு காதல்:
மேற்கண்ட படங்களின் வரிசையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைத்துறையில் முன்னணி நாயகிகளாக வலம் வரும் நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : இந்து தமிழ் திசை