செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பெண்கள் நேற்று இன்று நாளை.. | கவிதை | பிரவீன் குமார் செ

பெண்கள் நேற்று இன்று நாளை.. | கவிதை | பிரவீன் குமார் செ

2 minutes read

பெண்கள் நேற்று…

திருமண ஆசை பூக்கும்
மனமிருந்தும்,
திருமண சேலை உடுத்த
வயதிருந்தும்,
கணவனை வாங்க காசில்லை
அவளுக்கு.

தினமும் வருகிறார்கள்
பெண் பார்க்க.
இரக்கமின்றி இருக்கிறார்கள்
பணம் கேட்க.

“கடவுளை காணத்தான் தட்சணை.
கணவனைக் காணக்கூடவா (வர)தட்சணை?”
பதிலில்லை அவள் கேள்விக்கு!
ஏழையாய் பிறந்ததால்
கோழையாய் நிற்கிறாள்.

இன்றும் வழக்கம்போல்,
வழக்கமான அலங்காரத்தோடும்,
வழக்கமான கனவுகளோடும்,
வந்து நின்றால் தேவதையாக.

பெண் பார்க்க வந்தார்கள்.
கொடுத்ததை தின்றார்கள்.
பேரம் பேசச்சொன்னார்கள்.
இல்லையென்றறிந்ததும்
போய் வரவா என்றார்கள்.
வேறெங்கோ பணம் பறிக்க.

தினமும்,
தவணை முறையில்
இறக்கிறதவள் உயிர்.
நாட்கள் தான் நிறைகிறது
பேரமோ குறையவில்லையென்று
கண்ணீரோடு சுவர் சாய்ந்தாள்
விலை போகாத பூவை போலே.

பெண்கள் இன்று…

அலங்கரித்த மணமேடையில்
சிந்தனையோடு மணமகள்.
புன்னகையோடு மணமகன்.

சிந்தனையின் அர்த்தம் எதுவாயினும்
வாழ்த்த வந்தவர்களுக்கு தெரியாது
அந்த புன்னகையின் அர்த்தம்
கொழுத்த (பண) வேட்டையென்று.

முகூர்த்த நேரமாச்சு
மந்திரம் ஓதினார் ஐயர்.
சட்டென்று புருவம் உயர்ந்தது
மாப்பிள்ளை வீட்டாருக்கு.
அதைக்கண்டு பதட்டம் உயர்ந்தது
பெண் வீட்டாருக்கு.

“பேசிய பணம் வரலையே”
மிடுக்குடன் மாப்பிள்ளையின் அப்பா.
வார்த்தை இல்லை பெண் வீட்டாரிடம்.
அவர்களின் கண்களே பேசியது
கண்ணீரோடு.
ஏழ்மையின் அர்த்தம்
அது சொல்லியது.

திருமணம் நிற்பது உறுதியானது.
“பாவப்பட்ட ஜென்மம் தானே நாம்”
புலம்பினாள் தாய்.
உயிருள்ள பிணமாய்
விரக்தியோடு அப்பா.
ஆனால் இன்னும்
சிந்தனையோடு மணமகள்.

“மானம் போன குடும்பத்திற்கு
தற்கொலை தான் தக்க முடிவு”
தீர்ப்பு கூறி கலைந்தது
திருமணக்கூட்டம்.

மறுநாள் காலை நாளிதழில்.
மாற்றி வந்ததோர் தீர்ப்போன்று.
“வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை
போலீசில் பிடித்துத் தந்தாள்
புதுமணப்பெண்ணென்று.”

பெண்கள் நாளை…

“ஹலோ,
நான் பீட்டர் பேசறேன் திவ்யா”
என தொடங்கியது
தொலைபேசி உரையாடல்.
நிலவு பார்த்த குழந்தை போல
மலர்ந்த முகமானாள் அவள்.

“பீட்டர்
நான் உன்னையே கல்யாணம் செஞ்சிக்க
முடிவு பண்ணிட்டேன்.
1,00,000 ரூபாய் பணம்.
100 பவுன் நகை.
ஒரு வீடு, அவ்வளவுதான்.
ஓகே வா?”
என்றாள் அவள்.
“ஓகே. திவ்யா”
அவன் உள்ளம் துள்ளியது
சந்தோசத்தில்.

மறுநாள் காலை
மணக்கோலத்தில்
திருமணபதிவு மையத்தில்
நண்பர்களோடு நுழைந்தனர்.
பதிவு செய்யும் அதிகாரி
அவளின் அப்பா என்பதால்
உரிமையுடன் கேட்டார்.
“யாரம்மா இது?
எங்கே உன் புருஷன்?”

“அவன் கொடுத்த வரதட்சனைக்கு
இரண்டு வருடம் போதுமென்று
விவாகரத்து செய்துவிட்டேன்.
இவன் கொடுக்கும் பணத்திற்கு
நான்கு வருட ஒப்பந்தத்தோடு
நடக்கிறது எங்கள் புதிய திருமணம்”
என்று கூலாக சொன்னாள்
கலியுகக்கண்ணகி

– பிரவீன் குமார் செ

நன்றி : சுவடுகள்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More