பலருக்கும் இவரை நடிகராகவே தெரியும். ஆனால், கமல் ஹாசனையே இயக்கிய இயக்குநர் என்பது பலருக்கும் தெரியாது.
காலமான பிரதாப் போத்தன் வித்யாசமான நடிகர் மட்டுமின்றி, வித்யாசமான படங்களையும் இயக்கியுள்ளார். தாய் மொழி மலையாளமாக இருந்தாலும், அவர் முதன் முதலில் இயக்கியது ஒரு தமிழ்ப் படம்தான்.
தேசிய விருது
மீண்டும் ஒரு காதல் கதை என்கிற தனது முதல் படத்தை இயக்கி, நடித்து அதற்காக சிறந்த அறிமுக இயக்குநர் என்கிற பிரிவில் தேசிய விருதையும் கைப்பற்றியவர். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தான் நடிகை ராதிகாவை காதலித்து, பின்னர் திருமணம் முடித்து இறுதியாக விவாகரத்தும் ஆனது. ஊட்டியில் பள்ளிப் படிப்பு, சென்னையில் கல்லூரி படிப்பு என்று படித்தவர் அப்போதே ஆங்கிலப் புலமை பெற்ற இயக்குநராக விளங்கினார்.
வித்தியாசமான படங்கள்
நடிகராக மூடு பனி, வருமையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் உள்பட பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நடிகர் மம்மூட்டி நடித்திருந்த CBI 5. இயக்குநராக மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் போன்ற வித்யாசமான படங்களையும் இயக்கியுள்ளார்.
வெற்றி விழா
நடிகர் சிவாஜி தயாரிப்பில் கமல் மற்றும் பிரபு நடித்திருந்த வெற்றி விழா திரைப்படத்தை இயக்கி மிகப் பெரிய ஹிட் கொடுத்தார். தி பார்ன் ஐடெண்டிட்டி நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம் அது. தமிழில் அவர் இயக்கிய மூன்றாவது படம். அதன் பிறகு அவர் இயக்கிய சீவலப்பேரி பாண்டி கதையையும் கமலிடம்தான் சொன்னார். ஆனால் கால் ஷீட் பிரச்சனை காரணமாக நெப்போலியன் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. அதுவும் உண்மையாக வாழ்ந்த நபர்களை வைத்து உருவாக்கப்பட்ட படம். நடிகர்கள் கமல் மற்றும் பிரபு இணைந்து நடித்த முதல் படம் வெற்றி விழா என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபு தேவா – ராஜு சுந்தரம் இப்போது நடன இயக்குநர்களாக உச்சத்தில் இருக்கும் பிரபு தேவா மற்றும் ராஜு சுந்தரம் அதில் கோரியோகிராஃபர்களாக பணியாற்றியுள்ளனர். அந்தப் படத்தில் வானம் என்ன மேலிருக்கு பாடலில் கமல் மற்றும் பிரபு ஆடியிருப்பார்கள். இருவருமே நல்ல டான்ஸர்கள். அதில் கமலுக்கு பிரபு தேவாவும், பிரபுவிற்கு ராஜு சுந்தரமும்தான் நடனம் கற்றுக் கொடுத்தார்களாம்.
நன்றி : amil.filmibeat.com