எண்ணெய் உற்பத்தி நாடுகளின் ஒபெக் பிளஸ் அமைப்பில் எண்ணெய் உற்பத்தியை கணிசமாக குறைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
வியன்னாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில், நாளொன்றுக்கு 2 மில்லியன் பீப்பாய்கள் குறைவாக உற்பத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது எண்ணெய் விலையை மீட்டெடுக்கத் தூண்டுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஒன்று பற்றிய அச்சத்துக்கு மத்தியில் மூன்று மாதத்திற்கு முன் 120 டொலர்களால் இருந்த எண்ணெய் விலை 90 டொலர்கள் வரை வீழ்ச்சி கண்டுள்ளது.
ஒபெக்கின் புதிய முடிவு மூன்று வாரங்களில் விலைவாசிகளில் பாதிப்பை செலுத்தக் கூடும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறுகிய கண்ணோட்டம் கொண்ட முடிவு என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். ஏற்கனவே உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது மேலும் பாதிப்பை உண்டாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒபெக் மற்றும் ரஷ்யா உட்பட அதன் கூட்டணிகளுக்கு இடையே எட்டப்பட்டிருக்கும் இந்த உடன்படிக்கை, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிக்க தயாராகி வரும் நிலையில் ஏற்கனவே இறுக்கமான சந்தை நிலையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.