செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திரும்பிப் போ | சிறுகதை | கிருத்திகா

திரும்பிப் போ | சிறுகதை | கிருத்திகா

12 minutes read

”நீ சீக்கிரமா ஊருக்கே திரும்பிப் போயிடு! நீ இங்கேயே தங்கினா எனக்கு அவமானமா இருக்கும்”. அகிலன் அழுத்தமாகச் சொன்னதைக் கண்டு நடுங்கினாள் மதிமொழி.

விருதுகள் பல பெற்ற சிங்கப்பூர் விமானச் சேவையில் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பயணிப்பதில் மதிமொழிக்கு எப்பொழுதுமே ஒரு லயிப்பு உண்டு. அந்த உற்சாகத்தில் திளைத்திருந்த மதிமொழியின் முகம், அகிலனின் இரகசிய ஆணையில் துணுக்குற்றது. ஆசிரியரால் கண்டிக்கப்படும் சிறுபிள்ளையின் முகத்தைப் போல வாடியது.

பெற்றோர் திடீரென எடுத்திருக்கும் முடிவு அகிலனை இந்த அளவிற்கு மாற்றிவிடும் என மதிமொழி எதிர்பார்க்கவில்லை. தன் உயரத்திற்கு அவன் வளர்ந்துவிட்டாலும், தன்னை விட அகிலன் ஐந்து வயது சிறியவன் என்பதை அவன் மறந்துவிட்டானோ என்றுகூட அவளுக்குத் தோன்றியது.

மின்தூக்கியைவிட்டு கடைசியாக வெளியேறி பெட்டிகளை உருட்டிக்கொண்டு அப்பா அவர்களுக்கு அருகில் வருவதற்குள், ”பாட்டீ….” என்று கூவிக்கொண்டே அகிலன் வீட்டினுள் நுழைந்தான். தேவைக்கும் அதிகமான விசையுடன் அகிலன் தள்ளிவிட்ட அவனுடைய நான்கு சக்கர பயணப் பெட்டியோ சோபாவிலும் நாற்காலியிலும் இடித்துக்கொண்டு தாறுமாறாக ஓடியது. தரையிறங்கும் விமானத்தைப் போல அதிவேகத்தில் ஓடிய பெட்டி, வரவேற்பறையை அடுத்திருந்த படுக்கையறையின் வாசலில் மெதுவாகி சிறிது சுழன்று தானாக நின்றது. மதிமொழியின் மனமும் அப்படித்தான் அலைக்கழிக்கப்பட்டது.

”இனிமே சிங்கப்பூரை விட்டு ஒரு வாரத்துக்கு மேல நான் எங்கேயும் போக மாட்டேன், பாட்டி” என்று அகிலன் பாட்டியிடம் முறையிட ஆரம்பித்தான், ”என்னப்பா ஆச்சு?” என்று அவர் பதிலுக்கு வினவவும் தனக்கு ஆதரவு கிடைத்த தெம்பில், அகிலன் தன்னிச்சையாக குமுறத் தொடங்கினான்.

”பாட்டி, அங்க ஒண்ணுமே இல்லை. எனக்கு கூட விளையாட யாரும் இல்லை. வீட்டுக்குப் பக்கத்துல ஒரு நூலகம் கிடையாது. ’மெக் டொனால்ட்ஸ்’ கிடையாது. அவ்வளவு ஏன், என்னோட ’ஸ்கேட் போர்டை’ ஓட்ட, ஒரு நடைபாதை கூட கிடையாது. சலிச்சுப் போச்சு. எப்படா திரும்பி வருவோம்னு இருந்தது.”

அவர்கள் இருவரின் கொஞ்சல்களை ஓரக்கண்ணால் ஏக்கத்துடன் பார்த்தும் பார்க்காமலும் மதிமொழி தவித்தாள். நடைபாதையில் தனக்கு முன்னால் நடப்பவர்கள் தானாக விலகி வழி கொடுக்கும்வரை, மணியை அடிக்காமல் அமைதியாகப் பின்தொடரும் மிதிவண்டிக்காரர்கள் பண்பாட்டின் அடையாளம். அவர்களைப் போல, தன் இருப்பை பிறர் அறியாவண்ணம் மென்நடையில் பைகளைச் சுமந்துகொண்டு மதிமொழி தந்தையைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.

அவர்கள் இருவரையும் திரும்பிக் கூடப் பார்க்காத பாட்டி, அகிலனின் அலம்பல்களுக்கு மட்டும்தான் செவிமடுத்தார். ஆனாலும், கடந்த ஓராண்டில் மதிமொழி வளர்ந்துவிட்டதையும் அவளுக்கு அழகு கூடியுள்ளதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்து வந்த மின்தூக்கியில் இவர்களைத் தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த ரேவதி, ”அகிலன், முதல்ல போய்க் குளிச்சுட்டு வா!” என விரட்டினாள். ”சரிம்மா” என்று பாட்டியைத் திரும்பித் திரும்பி பார்த்தபடியே அவன் உள்ளே சென்றான். அவன் பார்வையிலிருந்து மறையும்வரை ரேவதி கண்களை விலக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

பின்னர், தன் அம்மாவை நோக்கி கனிவான குரலில், ”அம்மா, எப்படி இருக்கீங்க? இப்பத்தான் கிளம்பின மாதிரி இருந்தது. அதுக்குள்ள இரண்டு வாரம் ஓடிப் போச்சு. எல்லோரும் உங்களை ரொம்ப விசாரிச்சாங்க, தெரியுமா? நீங்க எப்படி இருக்கீங்க? தினமும் கொஞ்ச தூரமாவது நடந்தீங்களா?” என்று கேள்விகளால் தனது அன்பைக் காட்டினாள்.

’ம், ம்.” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்துவிட்டு, அவர் தன்னுடைய அறைக்குச் சென்றுவிட்டார். சாலை ஓரத்து மரங்கள் கடும் மழையில் சாலையில் விழுந்து யாருக்கேனும் ஆபத்து விளைவித்துவிடுமோ எனப் பயந்து அவற்றைப் பிடுங்குவார்களே! அதைப் போல, ரேவதியின் மேல் வைத்திருந்த பாசம் அத்தனையையும் அவர் அப்படியே வேரோடு பிடுங்கி, அகிலன் மேல் மாற்றி நட்டு வைத்துவிட்டார். அது ரேவதிக்கு வேதனையைத் தந்தாலும், அவருடைய மூத்த வயதைக் கருதி ரேவதியும் அதைப் பற்றி விவாதித்து அவரைப் புண்படுத்துவதில்லை.

பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த திங்கட்கிழமைதான் பள்ளி திறக்கும். ஆனால், அன்று வெள்ளிக்கிழமையாதலால், பிள்ளைகள் வீட்டில் இருக்க, பெற்றோர் இருவரும் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றனர்.

மாலையில் முதலில் வீட்டிற்குத் திரும்பிய ரேவதி, தனது தாயிடம் சென்று தங்களுடைய புதிய திட்டத்தைத் தெரிவித்தாள். ”மதிமொழி நல்லாத்தான் படிக்கிறாம்மா. இருந்தாலும், ஆசிரியையாகவோ கணக்காளராகவோ வேலைக்குப் போக அவளுக்கு விருப்பம் இல்லை. விமானப் பணிப்பெண்ணாக வேலை செய்யத்தான் அவளுக்கு விருப்பம். அவ ஆசைப்படியே செய்யட்டும்னு யோசிக்கிறோம். இதுவரைக்கும்தான் சென்னையில அந்தப் பாட்டி வீட்டில தங்கிப் படிச்சா. பள்ளிப்படிப்புதான் முடிஞ்சுது. இனிமே, இங்கயே சிங்கப்பூர் விமானச் சேவையில் சேர்ந்து பட்டயக்கல்வி படிக்க வைக்கலாம்னு நான்தான் யோசனை சொன்னேன். அவ இங்கேயே இருந்தா, எங்களுக்கும் வசதி. இந்தியாவுக்கும் இங்கேயுமா போய்ட்டு வர அலைச்சல் மிச்சமாகும். வர வர அகிலனும் ஊருக்கு வர மாட்டேங்கறான்”.

அவள் தொடர்வதற்குள் கோபப்பட்ட அவர், ”ஏன்? அதுக்கு நேரடியா என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லிடேன்? முதியோர் இல்லத்துக்கா சிங்கப்பூரிலே பஞ்சம். நான் போயிக்கறேன்.”

”ஏம்மா?”

”பின்ன? ஏதோ விடுமுறைக்கு இங்க வருவா. கொஞ்ச நாள்ல திரும்பி ஊருக்குப் போயிடுவா. அப்படித்தானே இத்தனைக் காலமா இருந்தது. இது என்ன திடீர்க் கூத்து?” அவர் ஆத்திரமாக வீசிய வார்த்தைகள் வில்-அம்பு போட்டியில் 2013-ல் மியான்மரில் வென்ற சிங்கப்பூர் வீராங்கனை ’சான் ஜிங் ருவின்’ அம்புகளின் வேகத்தை விட அதிவேகமாகப் பாய்ந்து ரேவதியின் இதயத்தைக் கிழித்தது.

தன்னுடைய அறையில் கணினித்திரையில் விளையாடிக்கொண்டிருந்த அகிலன், பாட்டியுடைய உரத்த குரலால் திகைத்துப் போய்த் தனது குறியைத் தவறவிட்டான். ”டொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய கணினி, ”அகிலன், நீ எல்லா காய்களையும் இழந்துவிட்டாய். புதிய ஆட்டம் துவங்க விருப்பமா?” என்று கேட்டு, அவனுடைய உத்தரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தது.

”ஏம்மா, இப்படி நினைக்கிறீங்க? மதிமொழி இப்ப வளர்ந்துட்டா. சமத்தா இருப்பா. ஏதோ சின்ன வயசில அவ அடம்பிடிச்சா. அது நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆயிடுச்சே! அதை இன்னமுமா நினைச்சுட்டு இருக்கீங்க? தயவுசெய்து அதை மறந்துரலாமே!”

அவள் மெதுவாகப் பேசினாலும், அவளைத் தொடர்ந்து பாட்டி சத்தமாகப் பேசியதால், அவரவர் அறைகளுக்கு உள்ளேயிருந்த அகிலன், மதிமொழி இருவருக்குமே பாட்டியின் குரல் தெளிவாகக் கேட்டது.

”எதை மறக்கச் சொல்றே? அவ சிங்கப்பூரில பொறக்கலை. இந்த மண்ணுல வளரலையே! அதை மறக்கச் சொல்றயா? அவளை மாதிரி எத்தனை பேரு சிங்கப்பூருக்குத் தினமும் வந்துட்டே தானே இருக்காங்க? நம்மைச் சுத்தி என்ன நடக்குத்துன்னு நானும் பார்த்துட்டுதானே இருக்கேன்! எங்க பார்த்தாலும் கூட்ட நெரிசல். அவளோட அப்பன் எங்கிருந்தோ சிங்கப்பூருக்கு வேலை கேட்டு வந்து குடியேறினவன் தானே? அதை மறக்கச் சொல்றயா? அவன்தான் உன்னைத் திருமணம் செஞ்சுகிட்டான். அதனால, ஏதோ ஒரு மூலையில இந்த வீட்டில இருந்துட்டுப் போகட்டும், தொலையுதுன்னு பார்த்தேன். இதென்ன புதுசா – இந்தப் பொண்ணும் இங்க இருக்கணும்கிற?” என்று தனது மறுப்பை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

தன் கணவனைப் பற்றி அம்மாவின் எண்ணம் மாறாதிருப்பது கண்டு ரேவதி வருந்தினாள். சிங்கப்பூருக்கு வளம் சேர்க்க வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்யும் எண்ணற்ற மனிதர்களைத் தங்களிடமிருந்து பிரித்துப் பார்த்து, வெளிநாட்டவர் மீதான கடும் வெறுப்பை(xenophobia) உமிழும் சிலரில் ஒருவராக அவரும் திகழ்ந்து வருகிறார். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர்களையும்கூட ஏற்றுக்கொள்ளாத நிலைதான்.

”அம்மா, இதையே எத்தனை காலத்துக்கும்மா சொல்லிட்டே இருக்கப் போறோம்? உங்க தாத்தாவும் தமிழ்நாட்டிலேர்ந்து சிங்கப்பூர் வந்தவர் தானே அம்மா? காலம் மாறிட்டே இருக்குது. வெளிநாட்டுக்காரங்க சிங்கப்பூருக்கு வந்து உழைக்கறாங்க. யாருக்காக? நம்ம நன்மைக்காகவும்தானே உழைக்கறாங்க? நாமும் அவங்களை ஏத்துக்கத்தான் வேணும். இதை ஏன் ஒரு பெரிய பிரச்சனையா நாம எடுத்துக்கணும்? காலத்துக்கு ஏத்த மாதிரியும் தேவைக்கு ஏத்த மாதிரியும் ஒவ்வொருவரும் மாறவேண்டி இருக்கு. தயவுசெஞ்சு புரிஞ்சுக்கோங்க!”

”ஆமா. இப்படி எதையாவது பேசி என் வாயை அடைச்சிடு. நான் ஏன் ஊர்க்காரங்களை ஏத்துக்கணும்? உன் கல்யாணப் பேச்சை எடுத்தப்பவே சொன்னேன். இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு!”

அறைக் கதவைச் சாத்தியிருக்கும் தைரியத்தில் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, முழுவதும் மூடியிராத கதவின் மெல்லிய இடைவெளியில் அவர்கள் உரையாடல் வெளியே கசிந்தது.

ரேவதி அம்மாவிடம் பதிலுக்குப் பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அம்மா அதீத கோபத்தில் பேசினால், அவள் ஓயும்வரை காத்திருப்பதே சிறப்பு என்று அவள் தன்னுடைய அப்பாவிடமிருந்து சிறு வயதிலேயே கற்றிருந்தாள்.

தன்னை நேசிக்க ஒருவன் தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருவான் என்றோ, அவனுக்கு தாயில்லா பெண் குழந்தை ஒன்று இருக்கும் என்றோ, அவன்மேல் தனக்கும் அன்பு ஏற்படும் என்றோ ரேவதிக்கும் ஆரம்பத்தில் எப்படித் தெரியும்?

”அப்போ எங்க அண்ணன் வீடு நம்ம வீட்டுக்குப் பக்கத்திலதான் இருந்துச்சு. அவரோட மகன் சிங்கப்பூரோட கலாசாரம் தெரிஞ்சவன். நீ பொறந்ததிலேர்ந்து உன்னைத்தான் கட்டிக்கப் போறோம்னு கனவு கண்டவன். ஆனா, நீயோ உன்னோட விருப்பம்தான் பெருசுன்னு பார்த்த!”

அண்ணன் வீட்டில் சம்பந்தம் வைக்க முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் இப்படிப் பேசுகிறார் என்று ரேவதிக்குத் தெரியும். கல்யாணமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும், மரியாதைக்காகக் கூட ரேவதியின் தாயார் ஒருநாள்கூட மாப்பிள்ளையிடம் நின்று பேசுவதில்லை. சிங்கப்பூரில் பிறக்காததை அவனுடைய குற்றமாகவே அவர் கருதினார். பிறகு அவனுடைய மகளான மதிமொழியை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வார்?

பாட்டியின் அரவணைப்பிலேயே வளரும் அகிலனிடமும் தன்னுடைய கருத்துகளை அவர் திணித்ததுதான் ரேவதிக்கு வேதனையைத் தரும். அதுவும் பாட்டி அருகில் இருந்துவிட்டால் போதும்; அகிலன் தனக்கே உரிய பாணியில் அரற்றுவான். அவனுடைய நண்பர்களின் தமக்கைகள் ’கே-பாப்’ பாடகர் குழுக்களைப் பற்றியும் கால்பந்து போட்டிகளைப் பற்றியும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சிலாகித்துச் சொல்வான். மதிமொழியுடன் அவற்றைப் பற்றித் தன்னால் ஒன்றுமே விவாதிக்க முடியவில்லை என்று போலியாக வருத்தப்படுவான். அவளுக்கு படிப்பைத் தவிர சமையல் மட்டும்தான் தெரியும் என்றும் சொல்லி அவளை இகழ்வான்.

ரேவதி தன் கணவன் மீது கொண்டிருந்த அன்பும், அவன் அவளிடம் கொண்டிருந்த அன்பின் ஆழமும், ’குடும்பம்’ என்ற வார்த்தைக்கே அர்த்தம் கொடுத்துள்ளது என்பதில் ரேவதிக்கு எள்ளவும் சந்தேகமில்லை.

அவனுடைய நல்ல குணத்தையும் அவனைப் பார்த்த மாத்திரத்தில் உண்டான காதலையும் அவளால் அன்றும் விவரிக்க இயலவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்தபிறகு, இன்றும் அம்மாவிடம் எப்படித் தன் காதலை நியாயப்படுத்துவது என்று அவளுக்குத் தெரியவில்லை. அதனால், திருமணத்திற்குப் பின்னரும் மதிமொழியை அவளுடைய தந்தை வழிப் பாட்டி தாத்தாவுடன் சென்னையில் சில காலம் விட்டு வைக்க முடிவு செய்தனர். அடுத்த ஆண்டே ரேவதிக்கு அகிலன் பிறக்கவும், மதிமொழியை அடுத்த ஆண்டும் சென்னையிலேயே படிக்க வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும், மதிமொழி விடுமுறைக்காக சிங்கப்பூர் வந்தாலும், அவளை நிரந்தரமாக சிங்கப்பூருக்கு அழைத்து வருவது தொடர்ந்து தள்ளிப் போனது.

அன்று வரை அப்பா வழிப் பாட்டி வீட்டில் அவர்களுக்கு ஆதரவாக அக்கா வளர்ந்து வருவதாகவே அகிலன் நினைத்துக்கொண்டிருந்தான். அம்மாவிற்கும் பாட்டிக்கும் இடையே நடந்த விவாதத்தைக் கேட்டபிறகுதான், மதிமொழி தன் அம்மாவிற்குப் பிறந்தவள் அல்ல என்று அவன் தெரிந்துகொண்டான். மதிமொழிக்குச் சாமர்த்தியம் பத்தாது என்று அவளை அவன் பலமுறை கேலி செய்தாலும், அவள் தன்மீது வைத்திருக்கும் மிதமிஞ்சிய பாசத்திற்கு அளவில்லை என அகிலன் நன்கு அறிவான். அதில் சிறு அளவாவது அவனுக்கும் அவளிடம் பாசம் இருக்கக்கூடும் என்பதையே இத்தருணத்தில்தான் அவன் உணர்ந்தான். பாட்டி அவளை வெறுப்பதன் காரணத்தையும் தெரிந்துகொண்டான்.

மதிமொழியின் நிலையை நினைத்துப் பார்க்கவே அவனுக்குப் பாவமாக இருந்தது. முறையாக விளக்கப்பட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தியை, தற்செயலாகக் கேட்டதினால், பதின்ம வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அகிலனின் மனம் வெகுவாகப் பாதிப்படைந்தது.

மதிமொழியின் மீதிருந்த அன்பை வெளிப்படுத்தத் தெரியாமல் வெறுப்பின் முகமூடியைப் பூசிக்கொண்டான். அவனுக்கு அவளை மட்டுமல்ல, அச்சமயத்தில் அவனுக்கு யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. அறையை விட்டு வெளியேறினால், யாரையாவது பார்த்துவிட்டால், தான் அழுதுவிடுவது திண்ணம் என்று நினைத்தான். அதனைத் தவிர்த்து அறைக்குள்ளேயே இருந்தான். எதை எதையோ நினைத்துக்கொண்டு குழம்பிய அவன் பசி மயக்கத்தில் தூங்கிப் போனான்.

மாறிவரும் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களுடைய எண்ணங்களை மாற்ற யாரும் முன்வராதவரையில் இத்தகைய மௌனப் போராட்டங்கள் தொடரத்தான் செய்யும்.

***

மிடுக்காக விமானப் பணிப்பெண் சீருடையில் வேலைக்குக் கிளம்பும் மதிமொழியை அழைத்துச் செல்ல, வாகனம் வந்தது. திரவங்களைப் போட்டு படிய வாரப்பட்ட கொண்டை இளவரசியைப் போல அவளுக்கு ஒரு கம்பீரத்தைக் கொடுத்தது. நீல நிற பூப்போட்ட பாவாடையின் பிளவு வழியாக, காலை ஒட்டி இடுப்புவரை அவள் அணிந்திருந்த பழுப்பு நிற காலுறை தெரிய, குதிகால் உயர்ந்த செருப்புகளை அணிந்து லாவகமாக மதிமொழி நடந்தாள். அவள் மிகவும் உயரமாகத் தெரிந்தாள். தயங்கித் தயங்கி ஊரிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் மதிமொழி சிங்கப்பூரில் படிக்க வந்தாள் என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். அவளுடைய வெளித்தோற்றத்தில் அப்படி ஒரு தன்னம்பிக்கை மிளிர்ந்தது.

திடீரென ஒரு நாள், அகிலன் முதலில் ஊகித்த அவமானம் அவர்களைத் தேடி வந்தது.

கைபேசி ஒலிக்க அதனை எடுத்த ரேவதி பதறினாள்.

”என்ன சொல்றீங்க? இந்தப் பொண்ணு, இப்படிச் செஞ்சுட்டாளே! இதோ இப்பவே வரேன்” என்றவள், ”அம்மா, நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்” என்று விரைந்தாள்.

விமான நிலையத்தில் மதிமொழியைக் கைது செய்திருக்கிறார்களாம். அவளைப் பிணையில் விடுவிப்பதற்காக தண்டனைத் தொகையை எடுத்துக்கொண்டு அம்மா செல்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட அகிலனுக்கு அவமானமாக இருந்தது.

இரவு நெடுநேரம் கழித்து, வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர்களுக்கு நடுவில் ஒடுங்கிக்கொண்டு வந்த மதிமொழியைக் கண்டதும், உள்ளே செல்ல எத்தனித்த அகிலனை, ”அகிலா, உட்காரு” என்று சொன்ன ரேவதியின் குரல் தடுத்தது. அவன் மூலையில் இருந்த ஒரு சோபாவிர்குச் சென்று அமர்ந்து, தனது பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

நடுவில் இருந்த சோபாவில் அமர்ந்த மதிமொழியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ”என்னம்மா நடந்தது?” என்று கேட்ட தந்தையை நோக்கி, கண்களில் நீர் திரையிட, மதிமொழி நடந்ததை விளக்கினாள். விருப்பம் இல்லாவிட்டாலும், அவள் பேசியதை அகிலனும் செவிமடுக்க வேண்டியதாகி விட்டது.

”நாளைக்கு ’அன்னையர் தினம்’. அம்மாவுக்காக பரிசு வாங்கணும்னு ஏற்கனவே சொல்லி இருந்தேன் இல்லப்பா? அது வேலை முடிஞ்சு வெளியே வந்தப்புறம்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அலங்காரப் பொருட்கள் நிரம்பிய பெட்டி ஒண்ணை “வரிவிலக்குக் கடையில’ பார்த்து வச்சிருந்தேன். அதை வாங்கறதுக்காக சீருடையிலேயே திரும்பவும் விமான நிலையத்துல ’பாதுகாப்புச் சோதனை’ எல்லையைத் தாண்டி உள்ள போயிட்டேன். வாங்கிட்டுத் திரும்பறப்ப காவல் அதிகாரிகள் என்னைத் தடுத்து நிறுத்திட்டாங்க.” என்றாள்.

அவள் தனக்குப் பரிசு வாங்க நினைத்த மதிமொழியின் நல்ல உள்ளத்தை நினைத்து ரேவதி நெகிழ்ந்தாள்.

”மதிமொழி, நீ தவறா எந்த வேலையையும் செய்யலை. என்றாலும் கூட, உன்னோட செய்கை சட்டப்படிக் குற்றம் என்பதாலதாம்மா, உன்னைக் கைது செஞ்சுருக்காங்க.” என்று தந்தை கூறிய விளக்கத்தில் மதிமொழி அழத் தொடங்கினாள்.

”புரியுது அப்பா. அதான், அங்கேயே என்னோட வேலையை விடறதா என்னோட நிறுவனத்திற்கு எழுதிக் கொடுத்திட்டேன்.” என்றாள்.

பாட்டி வேறு, ”இதெல்லாம் ஊர்லேர்ந்து சிங்கப்பூர் வரலேன்னு, யார் அழுதா? இப்பப் பாரு. நடக்கக்கூடாதது எல்லாம் நடக்குது. இங்க, யாரு நம்ம பேச்சைக் கேக்கறாங்க?” என்று உள்ளிருந்தே குரல் கொடுத்தார்.

”மதிமொழி, சிங்கப்பூர் இவ்வளவு சீரும் சிறப்புமா இருக்கறதுக்கு இங்கே கடைப்பிடிக்கப் படற சட்டங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாமும் அதுக்கு உடன்படத்தான் வேண்டும்”

”தெரியும்மா. சோதனைக்குட்பட்ட பகுதியில் இருந்து அப்பொழுதுதான் வெளியேறிய நான், சீருடையில் மீண்டும் உள்ளே செல்வது தவறு என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.” என்று மதிமொழி கொடுத்த பதில்தான் அகிலனுக்கு அவள் மேல் வெறுப்பை அதிகரித்தது. தன்னைப்போல் இவளும் சிங்கப்பூரில் பிறந்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்குமா! சிங்கப்பூரின் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்கவா இவள் வந்தாள் என்று எண்ணிக் குமைந்தான்.

எப்பொழுது வெளிநாடு போய்விட்டுத் திரும்பினாலும் பெட்டிகளை எல்லாம் எடுத்துக்கொண்ட பிறகும் பாட்டி இடத்தைவிட்டு நகர மாட்டார். ”இரு. அவசரப்படாதே! பயணப் பைகள் சரியா இருக்கான்னு எண்ணிக்கறேன். ‘சுங்கச் சோதனைச் சாவடியை’ விட்டு வெளியேறிட்டா, மீண்டும் உள்ள வரமுடியாதில்லை!” என்று சொல்வார். அகிலனும் தள்ளுவண்டியைச் சுற்றி வந்து, பாட்டியுடன் சேர்ந்து பலமுறை பெட்டிகளை எண்ணி இருக்கிறான். ஒரு பயணியாக தங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த சின்ன விசயம்கூட ஒரு விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி எடுத்து வேலைக்குச் செல்லும் மதிமொழிக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? வேறு ஊரில் பிறந்தவர்களுக்கு சிங்கப்பூரரைப் போல பொறுப்பாகச் சிரமப்படுவதற்கு இது ஒரு உதாரணம். இவர்களைப் பாட்டி இகழ்வது சரிதான் என்று அகிலன் தீவிரமாக எண்ணலானான்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து வந்த நாட்களில் வீட்டில் நிம்மதி குலைந்தது. சிங்கப்பூரின் வழக்கப்படி, விரைவில் ஒரு மாதத்திற்குள்ளாகவே, மதிமொழியின் வழக்கிற்குத் தீர்ப்பு வந்தது. தீர்ப்பில் மதிமொழிக்கு ஆயிரம் வெள்ளி தண்டனை என்ற அறிவிப்புச் செய்தியைக் கூறும்போது வீட்டில் பாட்டி மேலும் தீவிரமாகப் புலம்பினாள். ”நல்லவேளை! சிறைத்தண்டனை இல்லை’ என்று மட்டும் அகிலன் நினைத்துக்கொண்டான்.

செய்தி வெளியானவுடன், அவனுடைய கைபேசி தொடர்ந்து அலறியது. விசயம் அறிந்த நண்பர்கள் தன்னை அழைக்கலாம். அதனால், அகிலன் கைபேசியில் சத்தம் ஏற்படாத வண்ணம் அமைத்து, அதை அந்தப் பக்காமாக தூக்கி விசிறினான். யாரிடம் என்ன விளக்கத்தைக் கொடுப்பது? எவ்வளவு பெரிய அவமானத்தை மதிமொழி சம்பாதித்துக் கொடுத்துவிட்டாள்? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வீட்டினுள் நுழைந்த மதிமொழியைக் கண்ட அகிலனுக்கு ஆத்திரம் மூண்டது.

’வெளியே போ’ என்று கத்திக்கொண்டே, அவளை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட, வேகமாக கால்களை எட்டி வைத்தவன் தடுமாறி கீழே விழப் போகையில், கையைத் தாறுமாறாக தரையில் ஊன்றியதால், படக்கென முறிந்த மணிக்கட்டு வலித்தது.

***

”அம்மா” என்ற அவனுடைய அலறலைக் கேட்டு வேகமாக அறைக்குள் ஓடி வந்த மதிமொழி, ”தம்பி, என்ன ஆச்சு? மெத்தையில் இருந்து கீழே விழுந்துட்டியா? ஏதாவது கெட்ட கனவு கண்டியா?” என்று பேசியபடியே, அவனைச் சாய்வாகத் தூக்கி மீண்டும் மெத்தையில் அமர வைத்தாள். தான் ஓய்வு நேரத்தில் கற்றுக்கொண்ட முதலுதவி பட்டயப்படிப்பு அவளுக்குக் கைகொடுத்தது. கண நேரமும் தாமதிக்காமல், உடனடியாக அவனுடைய மணிக்கட்டு எலும்புகள் அசையா வண்ணம் கட்டு போட்டுக் கட்டிவிட்டாள்.

மதிமொழி உயரமாக இல்லாமல், தன்னுடைய உயரத்திலேயே இருப்பதைக் கண்டு அகிலன் குழம்பினான். அவள் விமானப் பணிப்பெண் சீருடையில் கைதானது, சாப்பிடாமல் குழப்பத்தில் தூங்கியதால், தான் கண்ட கனவு என்று அவனுக்குப் புரிந்தது.

சத்தம் கேட்டு ஓடி வந்த ரேவதி, தனக்குப் பின்னால் வந்த பாட்டிக்கு சைகை காட்டி அமைதியாக இருக்கும்படிச் சொன்னாள். அன்புடன் பேசிக்கொண்டே, தேர்ந்த நேர்த்தியுடன் மதிமொழி அகிலனுக்குக் கட்டுப்போடும் லாகவத்தை இருவரும் அமைதியாகப் பார்த்தபடி இருந்தனர்.

”அக்கா, நீ போகாதே!” என்று திடீரென தன்னைக் கட்டிக்கொண்ட அகிலனின் செயலைப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினாள் மதிமொழி.

– சிங்கப்பூர் – சண்டே முரசு – 2018-2019 

நன்றி : கிருத்திகா | சிறுகதைகள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More