மலேசியாவில் நடைபெற்றுவரும் 8ஆவது உலக கெரம் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளது.
இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முன்னாள் உலக கெரம் சம்பியன் நிஷான்த பெர்னாண்டோவும் ஷஹீட் ஹில்மியும் இணைந்து வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 2–1 ப்ரேம்கள் கணக்கில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தைப் பிடித்தது.
இதனிடையே, கடந்த புதன்கிழமை (05) நடைபெற்ற சுவிஸ் லீக் போட்டியில் பங்குகொண்ட ஷஹீட் ஹில்மி வெண்கலப் பதக்கம் வென்றார். 8 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் 7 சுற்றுக்களிலும் வெற்றியீட்டி முதலிடத்தைப் பிடித்த அவர், கடைசி சுற்றில் இந்திய வீரர் மொஹமட் குர்பானிடம் தோல்வியைத் தழுவினார்.
கொழும்பு றோயால் கல்லூரியின் பழைய மாணவரான ஷஹீட் ஹில்மி, இலங்கையின் நடப்பு தேசிய கெரம் சம்பியனாக உள்ளார்.