ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான டுவைன் பிரிட்டோரியர்ஸ் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ரி20 போட்டியின்போது, இடதுகை பெருவிரலில் உபாதை ஏற்பட்டதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டுவைன் பிரிட்டோரியர்ஸின் பெருவிரலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதுடன், இதனால் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டுவைன் பிரிட்டோரியர்ஸிற்கு பதிலாக மார்க்கோ யான்சன் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைக்கப்பட்டுள்ளார். எனினும், பிரிட்டோரியர்ஸிற்கு பதிலாக ரி20 உலகக் கிண்ண குழாத்தில் எந்த வீரர் இணைக்கப்படுவார் என தென்னாபிரிக்க அணி இதுவரையில் அறிவிக்கவில்லை.
எனினும் மார்கோ யான்சன், எண்டிலே பெஹ்லுக்வாயோ மற்றும் பிஜியோன் போர்டியூன் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தின் மேலதிக வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். எனவே, இவர்களில் ஒருவர் ரி20 உலகக் கிண்ண அணியில் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.