மகளிர் ஆசியக் கிண்ண T20 தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது கடைசி குழுநிலை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.
சில்ஹெட்டில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு அணித் தலைவி சாமரி அத்தபத்து 26 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றார். எனினும் மத்திய வரிசை வீராங்கனைகள் தடுமாற்றம் கண்டனர்.
இதனால் இலங்கை அணி 18.5 ஓவர்களில் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அபாரமாக பந்து வீசிய சுழற்பந்து வீராங்கனை ஒமைமா சொஹைல் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
தொடர்ந்து பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வரிசை விக்கெட்டுகளை இலங்கை பந்துவீச்சாளர்கள் முன்கூட்டியே வீழ்த்தியபோதும் மத்திய வரிசை வீராங்கனைகள் விக்கெட்டை காத்துக் கொண்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார்கள்.
இதன்படி பாக். அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இலங்கை பெண்கள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளனர். தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை (13) நடைபெறவுள்ளன.