செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இலண்டனில் அகணி சுரேஸ் இன் பல நூல்கள் அறிமுகம் [படங்கள்]

இலண்டனில் அகணி சுரேஸ் இன் பல நூல்கள் அறிமுகம் [படங்கள்]

10 minutes read

 

நவம்பர் 5, 2022 சனிக்கிழமை  மாலை ஐக்கிய இராச்சியத்தில் வெம்பிளியில் அமைந்துள்ள “பார்ஹாம் பிறமறி ஸ்கூல்” மண்டபத்தில் அகணி சுரேஸ்  அவர்களின் நூல்கள், பாடல்கள் அறிமுகவிழா இனிதே நடைபெற்றது. இவற்றைத் தாண்டி இந்நிகழ்வானது மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன், மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. 

அமைதி வணக்கத்தை அடுத்து அகணி சுரேஸ் அவர்களின் வரிகளிலும், கே.வி.செல்வன் தயாரிப்பிலும், C.சுதர்சன்  அவர்களின் இசையமைப்பிலும், கோகுலன் அவர்களின் குரலிலும்  உருவான ஐங்கரத்தில் ஐம்பூதம் பாடல் ஒலிபரப்பப்பட்டது. 

புகழ்பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர்  திரு ராஜ் குலராஜ் அவர்கள் இந்நிகழ்வினில் சிறப்பாக நெறியாளுகை செய்தார். நிகழ்வில் வரவேற்புரையை  செல்வி துவாரகா புண்ணியலிங்கம் அவர்கள் வழங்கினார்.  

அகணி சுரேஸ் அவர்களின் வரிகளிலும்,  தயாரிப்பிலும், C.சுதர்சன்  அவர்களின் இசையமைப்பிலும், மதுசா குகதாசன், மதுசிகன் குரலிலும் உருவான தமிழ் அழகே பாடலுக்கு நல்லகுமரன் நர்த்தனாலயம் நடனப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீமதி சிவனந்தலா கேதீஸ்வரன் அவர்களின் மாணவர்கள் பரதம் வழங்கிச் சிறப்பித்தார்கள். நிகழ்வின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த விழா ஒழுங்கமைப்பாளர்களில் ஒருவரான கவிஞர், பேச்சாளர் திருமதி  சுகுணா சுதாகரன் அவர்கள் அறிமுகவுரை நிகழ்த்தினார். இவருடன் இணைந்து விழா ஒழுங்கமைப்பில் கவிஞர், பேச்சாளர் திருமதி திருமகள் பத்மநாதன், சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம், மற்றும் தமிழ்த்துறைச் செயற்பாட்டாளர் திரு சத்தியமூர்த்தி அவர்களும் சிறப்பாகப் பங்காற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து மூன்று நூல்களுக்கான கருத்துரைகள் திருமதி மாதவி சிவசீலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. “கட்டுரைச் சாரல்” நூலுக்கான கருத்துரையை திருமதி திருமகள் ஸ்ரீபத்மநாதன் அவர்களும், “இன்னும் இருக்கிறது இனிய வாழ்வு” நூலுக்கான கருத்துரையை திருமதி கீர்த்தி சதீஸ் அவர்களும், “கதைச்சாரல்” நூலிற்கான கருத்துரையை திருமதி அகல்யா நித்தியலிங்கம் அவர்களும் நேர்த்தியாக வழங்கினார்கள். சுடர்கலைப் பள்ளி ஆசிரியை  ஸ்ரீமதி சுசிதா ரகுரஞ்சன் அவர்களின் மாணவிகள் அகணி சுரேஸ் அவர்களின் வரிகளில் உருவான பக்திப் பாடல் ஒன்றினை அரங்கில் சிறப்பாகப் பாடினார்கள். அகணி சுரேஸ் அவர்களின் தயாரிப்பிலும் வரிகளிலும்  உருவான டும் டும் டும் பாடலுக்கான நடனநிகழ்ச்சியையும் சுடர்கலைப் பள்ளி ஆசிரியை  ஸ்ரீமதி சுசிதா ரகுரஞ்சன் அவர்களின் மாணவிகள்  வழங்கிச் சிறப்பித்தார்கள். 

இசையாசிரியை ஸ்ரீமதி சுசிதா ரகுரஞ்சன் அவர்கள் அகணி சுரேஸ் அவர்களின் வரிகளில் உருவான இசைப்பாடல்கள் பற்றிய கருத்துரையை வழங்கினார். அவர் தனது கருத்துரையில் பாடல்களுக்கான கரோக்கி வடிவத்தை தங்களுக்கு வழங்கும்பொழுது இளையோர்களால் அவற்றை அரங்குகளில் பாடமுடியும் என்று குறிப்பிட்டு அதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக மிலரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக தலைமையாசிரியரும், பிரித்தானிய தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை உபகுழு உறுப்பினரும் ஆகிய திரு சேனாதிராஜா முத்தையா அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிச் சமூகம் சார்ந்து திரு ச.சங்கரசீலன் , திரு வெ.அசோகன், திரு பாலகிருஷ்ணன், திரு. சத்தியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.

கவிஞர் கெங்காதேவி அன்டன் லிப்வின் அவர்களும் அகணி சுரேஸ் அவர்களின் படைப்புகள் பற்றி விபரித்துப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிச் சமூகம், ஐக்கிய இராச்சியம் சார்பில் சாவகச்சேரி இந்துக்கல்லூரிப் பழைய மாணவர்கள் அரங்கில் நிற்க தற்காலத்தலைவர் திரு.ச.சங்கரசீலன் அவர்கள் “தென்மறத் தமிழ்த் தென்றல்” என்ற உயரிய விருதினை அகணி சுரேஸ் அவர்களுக்கு வழங்கிப் பொன்னாடை போர்த்து , சந்தண மாலை சூடிச் சிறப்புச் செய்தார். 

அகணி சுரேஸ் அவர்களின் பாடசாலை நண்பர் தர்மராஜா அவர்கள் பொன்னாடை போர்த்துச் சிறப்புச் செய்து ஜேர்மனி நாட்டிலும் விரைவில் நூல் அறிமுகவிழா செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஜேர்மனி பற்றிய நூலினையும் பரிசாக அகணி சுரேஸ் அவர்களுக்கு வழங்கி  மகிழ்ந்தார். 

அகணி சுரேஸ் அவர்களின் சொந்த இடமான கொடிகாமம் பிரதேச மக்கள் சார்பில் திரு செல்வத்துரை தில்லைநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துரையும் வழங்கினார். 

தமிழ்நாட்டைச் சேரர்ந்த பேராசிரியர் சே பானுரேகா, அகணி சுரேஸ்  “133 திருக்குறள் அதிகாரங்கள் 133 மரபுக்கவிதைகள் 133 மரபுக்கவிஞர்கள் ” உலகச்சாதனை நிகழ்வில் பங்கேற்ற கவிஞர்கள் திருமகள் ஸ்ரீ பத்மநாதன், சுகுணா சுதாகரன், ஒளவை சுவர்ணா கெளரிபாலா, இராசையா கெளரிபாலா ஆகியோருக்கான சான்றிதழ்களை அகணி சுரேஸ் அவர்கள் வழங்கினார்.  திருமதி சுகுணா சுதாகரன் அவர்களின் குடும்பத்தினர், உறவினர், வட்டக்கச்சி மக்கள் ,  திருமகள் ஸ்ரீ பத்மநாதன் தம்பதிகள் எனப் பலரும் பல பொன்னாடைகளால் அகணி சுரேஸ் அவர்களுக்குச் சிறப்பு செய்து பாராட்டி மகிழ்ந்தனர். 

கவிஞர் பிரியங்கா சிறிமோகன் அவர்களின் வாழ்த்துக்கவியை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராஜ் குலராஜ் அவர்கள் படித்தார். 

அடுத்து அகணி சுரேஸ் அவர்கள் ஏற்புரை வழங்கினார். அவர் தனது உரையில் அனைவருக்கும்  நன்றி தெரிவித்ததோடு கருத்துரைகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில்களை வழங்கினார். மேலும் தனது உரையில் எளிமையான தமிழில் பயனுள்ள கருத்துக்களை எடுத்துச் செல்வதை முக்கிய நோக்காகக் கொண்டு தனது படைப்புகளை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார். 

  தமிழ்மொழி நிலைபெறவும், எதிர்காலச் சந்ததியினர் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதை மேம்படுத்தவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் என்ற வகையில் சில முன்னெடுப்புகளை எடுக்கவிருப்பதாகவும் கூறினார். அவரைத் தொடர்ந்து திருமதி கமலினி சேகர் அவர்கள் அகணி சுரேஸ் சார்பிலும் ஒழுங்கமைப்பாளர்கள் சார்பிலும் சிறப்பாக நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழ்வில்  பொறியியலாளர் திரு ஞானசேகரம் ஜெயகுமாரன் ( Baba Luxy) அவர்கள்  அழகான வண்ணப்படங்களை எடுக்கும் பணியினைச் செவ்வனே செய்தார். திரு மகாலிங்கம் தேவரவீந்திரன் அவர்கள் முழு நிகழ்வின் காணொளிப் பதிவினைச் செய்யும் பணியினைச் செம்மையுறச் செய்தார்.

நிகழ்வின் இறுதியில் பலரும் அகணி சுரேஸ் அவர்களிடமிருந்து சிறப்புப் பிரதிகள் பெற்று மகிழ்ந்தனர். 

அறிமுகவிழா இனிதே நிறைவேறியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More