ஒரு குழந்தையாக
இந்தப் பிரபஞ்சத்துக்குள்
நுழையும் போது
நமக்காய் காலம்
பரிசளித்த மலர்க்கொத்தில்
மகிழ்ச்சி மட்டுமே
மணம் வீசிக்கொண்டிருந்தது..
காலம் நமக்கு சிறகு தந்து
பட்டாம்பூச்சிகளாக
பறக்க விட்டிருந்தது..
குழந்தை ஒரு
பிரஜையாக உருமாறும் போது
தேவைகள் தேடல்கள் என
விரிகையில்
பிரபஞ்சம் நமக்குள்
நுழைந்துவிடுகிறது..
பத்திரமாய் சேர்த்து வைத்த
பட்டாம்பூச்சி நினைவுகளை
காலக்கோப்பைக்குள்
மெதுவாய் மெதுமெதுவாய்
நிரப்பிக் கொள்ள
தளும்பி ஓரங்களிலிருந்து
விழுந்துவிடுகிறது
குழந்தை மனசு
காலத்தின் பாதையில்..
காலத்தின் காலடியில் கிடந்தபடி
வாழ்க்கையின் யாசகியாக
வார்த்தைகளை வரிக்குள்
சிறைப்பிடித்து
ஒரு கவிதையை
எழுதி வைத்துவிடுகிறேன்..
காலம் தன் கோரமுகத்தைதான்
காட்டி பல்லிளிக்கிறது..
எப்படியாவது அதன் தோள்மீது ஏறி
காலத்தின் அகோர முகத்தைப்
பார்த்திட வேண்டும்
இந்தப் பிரபஞ்சத்தில்
விழுந்த விதை
அழிந்திடும் முன்பு..
சங்கரி சிவகணேசன்