பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுமியை இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வுக்கு இரண்டு தமிழ் பொலிஸார் உட்படுத்தியுள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளியை எடுத்து அதனை வைத்து மிரட்டி தொடர்ச்சியாக அவர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்து 17 வயதான சிறுமியை இரண்டு தமிழ்ப் பொலிஸார் அழைத்துச் சென்று, யாரும் இல்லாத வீட்டில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைக் காணொளிப் பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைக் காண்பித்து அச்சுறுத்தி தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமி (தற்போது 19 வயது) திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும், அவர் இரண்டு வருடங்களாகப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேகநபரான தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர், சம்பவம் நடைபெறும்போது வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலும் பின்பு தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும், தற்போது முருங்கன் பொலிஸ் நிலையத்திலும் பணியாற்றி வருகின்றார் எனத் தெரியவருகின்றது.
சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய காணொளியை பாடசாலை மாணவர்களுக்கும் சந்தேகநபர்களான பொலிஸார் அனுப்பியுள்ளனர் எனவும், பாடசாலை மாணவர்களும் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” – என்றார்.