கட்டுரையாளர் – அ.யேசுராசா
இலங்கைத் தமிழ்த் திரைப்பட வளர்ச்சியை மூன்று காலகட்டப் பிரிவுகளாகப் பார்க்கலாம்
.i) 1962 – 1983
Ii) 1990 – 2009
iii) 2009 இற்குப் பின்.
1. முதலாவது காலகட்டத்தில், 1962 இல், முதலாவது தமிழ்த் திரைப்படமான ‘சமுதாயம்’ உருவாக்கப்பட்டது; பிறகு 28 திரைப்படங்கள் உருவாக்கப்பட்டன. தமிழ்ப் படங்களைத் தயாரித்த பெரும்பாலானவர் சினமா மீதான கவர்ச்சியினாலேயே இதில் ஈடுபட்டனர். இத்துறையினால் வரக்கூடிய விளம்பரமும் புகழும் அவர்களின் உந்துசக்திகளாகும்! திரைக்கலை நுட்பங்கள் பற்றிய அறிவு, கலைநோக்கு, உலகத் திரைப்பட வளர்ச்சிநிலை பற்றிய விழிப்புணர்வு போன்றவை அவர்களிடம் இருக்கவில்லை. தமிழகத் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களே அவர்களுக்குப் பரிச்சயமானதால், அவையே இவர்களின் ஆதர்சங்களாகவும் அமைந்தன. அதனால், வழமையான – சூத்திரப்பாங்கான கட்டமைப்பில் கதை, நடிப்புமுறை, பாடல்கள் என்பவற்றை வைத்து, யதார்த்தமற்ற – மிகைப்பாங்கான – வெளிப்பாட்டுமுறையில் படங்களை உருவாக்கினர். துறைசார் நிபுணத்துவ அறிவின் போதாமை, வரையறைக்குட்பட்ட குறைந்த நிதிப் பங்களிப்பு போன்றவையும் செய்நேர்த்தியில் பாதகமான முறையில் தாக்கம் செலுத்தின. (கலைத்துவரீதியில் குறைபாடுகள் இருந்தாலும்) தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியிருந்த தமிழகத் தமிழ்ப் படங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கைப் படங்கள் பலவீனங்களுடன் இருந்தன. இலங்கைத் தமிழ் வாழ்வும் அடையாளங்களும், தனித்துவத்துடன் உரியமுறையில் வெளிப்படுத்தப்படவுமில்லை. இவ்வாறான காரணங்களால், தமிழகப் படங்களுக்குப் பழக்கமாகியிருந்த பெருந்திரள் பார்வையாளரை ஈர்ப்பதில், இரண்டொன்றைத் தவிர ஏனையவை வெற்றியடையவில்லை.
பொன்மணி, வாடைக்காற்று, குத்துவிளக்கு ஆகிய படங்களில் மாறுதலான அம்சங்கள் இருந்தன. பொன்மணியின் நெறியாளர், சிங்களத் திரைப்படத்துறை மறுமலர்ச்சியில் சாதனை புரிந்த தர்மசேன பத்திராஜ; எனவே, காட்சிப்படுத்தலிலும் ஏனைய அம்சங்களிலும் முன்னேற்றகரமான நிலைமை இருந்தது. வாடைக்காற்று ஒரு ஜனரஞ்சக நாவலை அடிப்படையாகக் கொண்டிருந்தது; திரைத்துறைக்கு அரிதான மீனவர் வாழ்க்கைக் களமும் கவர்ச்சியைக் கொடுத்தது. குத்துவிளக்கு யாழ்ப்பாண விவசாயச் சூழல், சீதனப் பிரச்சினை போன்றவற்றை மண்வாசனையுடன் சித்திரிக்க முனைந்தது. இவற்றால் இம்மூன்றும் கவனிப்புக்குரியவையாகும். இக்காலகட்டப் படங்கள் யாவும் திரைச்சுருளில் (ஃவில்ம்) தயாரிக்கப்பட்டவை.
1983 இல் தமிழர் மீதும், அவர்களது நிறுவனங்கள் – குறிப்பாகத் திரைப்பட ஸ்ரூடியோக்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், தமிழ்த் திரைப்படத்துறை வளர்ச்சியையும் பாதித்தன! அதற்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு தேக்க நிலை அடைந்தது.
2. இரண்டாவது காலகட்டம், வடக்குக் கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக்கொண் டிருந்த காலகட்டமாகும். அரசாங்கத்தினால், மின்சாரத்தடை மற்றும் பொருளாதாரத் தடைகள் இப்பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலங்களாகும். விடுதலைப் புலிகள் அமைப்பினர், பல பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து செயல்பட்டனர். பல்வேறு நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த அவர்கள், கலை பண்பாட்டுக் கழகம், நிதர்சனம் தொலைக்காட்சி போன்றவற்றையும் நடத்தினர். இவ்வமைப்பு கள்மூலம் இலக்கிய முயற்சிகளையும் நாடகங்களையும் ஊக்குவித்தனர். நிதர்சனத்திற்கூடாக நூற்றுக்கணக்கான குறும்படங்கள், முழுநீளக் கதைப் படங்கள், விவரணப் படங்கள் ஆகியவற்றைத் தயாரித்து, தமது பகுதிகளி லுள்ள மக்களுக்குக் காட்டினர்; புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் அவற்றைப் பரப்பினர். இப்படைப்புகள் யாவும் விடியோவில் தயாரிக்கப் பட்டவை. யுத்த நெருக்கடிக்குள்ளான மக்களின் வாழ்வியல் அல்லல்கள், படை நடவடிக்கைகளின் பாதிப்புகள், போராட்ட வாழ்வு போன்றனவற்றை அவை வெளிப்படுத்தின. யுத்தகால நடவடிக்கைகளின்போது சண்டைக் களங்களில் எடுக்கப்பட்ட, உண்மைக் காட்சிகளைக்கொண்ட ஆவணப் படங்களையும் தயாரித்தனர். பிரக்ஞை பூர்வமாகச் சொந்த மண்ணையும் மக்களையும் திரைப்படங்களில் பதிவுசெய்தமை முக்கியமானது. உரிய பயிற்சிகள் இல்லையென்றாலும், எழுத்தாளர் ஞானரதன் போன்று, திரைப்படக் கலை பற்றிய புரிதல்கொண்டவர்களின் ஒத்துழைப்புடன், மெல்ல மெல்ல படைப்பாக்க முயற்சிகள் நடந்தன; அனுபவங்களூடான கற்கை, வளர்ச்சிக்கு உதவியது. சில சிங்களக் கலைஞர்களின் பயிலரங்குகளும் உதவியதாகத் தெரிகிறது. ஞானரதனின் ‘முகங்கள்’, ‘காற்றுவெளி’ ஆகிய முழுநீளக் கதைப்படங்களும்; ‘நேற்று’ என்னும் குறும்படமும் விதந்து போற்றத் தக்கவை! ; தமிழகப் படைப்புகள் உள்ளிட்ட மொத்தத் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் அவை முக்கியமானவை!
தமது பிரதேசங்களில் காட்டப்படும் தமிழகத் திரைப்படங்களின் எண்ணிக்கையைப் புலிகள் கட்டுப்படுத்தினர்; பண்பாட்டுச் சீரழிவுக்குரிய காட்சிகளைத் தணிக்கையும் செய்தனர். பொதுமக்கள் இரசனையில், இவை எல்லாம் ஓரளவு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தின!
3. தற்போதைய மூன்றாம் காலகட்டம் ‘டிஜிற்றல்’ காலகட்டமாகும். இலகுவாகக் கிடைக்கும் நவீன ஒளிப்பதிவுக் கருவிகள், கணினியில் படத்தொகுப்புச் செய்யக்கூடிய இலகு வசதிகள் போன்றவற்றினால், அதிகமானோர் அவ்வப்போது குறும்பட முயற்சிகளிலும்; ஒருசிலர் முழுநீளத் திரைப்பட முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். முதலாம் காலகட்டம் போலவே இவர்களில் பெரும்பாலார் சினமாக் கவர்ச்சியினாலும், புகழ்பெறும் ஆசையாலும்தான் இம்முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். பிறமொழிகளிலுள்ள முக்கிய திரைப்படங்களை இவர்கள் பார்ப்பதில்லை; அவற்றைப்பற்றி அறிவதில் ஆர்வமுமில்லை. அதைப்போலவே இலக்கியப் படைப்புகள், திரைச்சுவடிகள் போன்றவற்றை வாசிக்கும் ஈடுபாடுமில்லை! ஆனால், ‘சுயம்புலிங்கங்கள்’ போன்று தோன்றுகிறார்கள்! இவைகாரணமாகப் பலவீனங் கள் கொண்டவையாக – குறிப்பாகத் திரைச்சுவடியில் – பெரும்பாலான ஆக்கங்கள் உள்ளன. கணிப்புக்குரிய முயற்சிகளைச் செய்வோரின் எண்ணிக்கை மிகக்குறைவே!
**
எமது திரைப்பட முயற்சிகளில் தீவிர செல்வாக்குச் செலுத்திப் பாதிப்பை உருவாக்குவதில் முதன்மையானவை, தமிழகத் திரைப்படங்கள்தான். திரையரங்குகள், தொலைக்காட்சி அலைவரிசைகள், டி. வி. டி.கள் மூலமாக இவை, எமது மக்களை இலகுவாகவும் தொடர்ச்சியாகவும் வந்தடைகின்றன. யதார்த்தமற்றரீதியில் – வெறும் பொழுதுபோக்குக்குரியனவாக உள்ளவைதான் திரைப்படங்கள் என்ற தவறான கருத்தை மக்களின் மனங்களில் இவை, ஆழமாகப் பதித்துள்ளன. வானொலி, செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் முதலிய தொடர்பு ஊடகங்களும் இவற்றையே செய்கின்றன. இவற்றால் கட்டமைக்கப்படும் இரசனை கொண்டவர்கள்தான் இரசிகர்களாகவும், படத்தை உருவாக்கும் படைப்பாளிகளாகவும் அமைகின்றபோது, நல்ல திரைப்படங்கள் உருவாகுவது அரிதாகின்றது; அரிதாக வரக்கூடிய நல்ல படைப்புகளை ஆதரிப்பவர்களும் எண்ணிக்கையில் குறைந்து போகின்றனர்.
நல்ல திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் அதிகளவில் ஊடகங்களில் வெளிவரவேண்டும். நல்ல திரைப்படங்களைப் பொதுமக்கள் பார்க்கவும், அவைபற்றிக் கலந்துரையாடவும், ஊர்மட்டங்களில் – சனசமூக நிலையங்களில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் இம்முயற்சியை முதலில் ஆரம்பிப்பதும் பொருத்தமானது!
இவ்விதத்தில் திரைப்படக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுச் செயற்படலாம். சிங்கள சினமாத்துறை கலைத்துவ ரீதியில் வளர்ச்சியடைந்திருக்கிறது; 1956 முதல் அதற்குச் சிறப்பான தொடர்ச்சியும் உள்ளது. எனவே, தமிழ்த் திரைத்துறைப் பக்கம் திரைப்படக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தவேண்டும். தமிழகத் தமிழ்த் திரைப்படங்களின் இறக்குமதியால், இக்கூட்டுத்தாபனம் பெரும் பண வருவாயையும் பெற்றுக்கொள்கிறது! ஆகையால், தார்மிகப் பொறுப்பும் அதற்கு உள்ளதெனலாம்.
வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் திரைப்பட இரசனைப் பயிலரங்குகளை அது ஒழுங்குசெய்யவேண்டும். தமிழரிடையேயுள்ள தகுதிவாய்ந்த வளவாளர்களுடன், சிங்களக் கலைஞர்களையும் சேர்த்து – மொழிபெயர்ப்பு வசதியுடன் – இப்பயிலரங்குகள் ஒழுங்குசெய்யப்படவேண்டும். இவற்றினால் சரியான திரைப்பட இரசனைக் கண்ணோட்டமுள்ளவர்களின் எண்ணிக்கை பரவலடையும். இதைப்போலவே ஆர்வமும் திறமையும் கொண்டவர்களைத் தேர்வுசெய்து, திரைப்பட உருவாக்கம் பற்றியும் – அதன் சகல கூறுகளையும் உள்ளடக்கி – பயிலரங்குகள் அவ்வப்போது நடைபெறவேண்டும்.
சிங்களத் திரைப்படத்துறைக்குப் போட்டியில்லை; இலங்கையில் மட்டும்தான் அவை தயாரிக்கப்படுகின்றன; தமது மொழிப் படங்களை ஆதரிப்பதற்குச் சிங்கள மக்கள் தயாராகவுமுள்ளனர். ஆனால், தமிழகத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் தமிழ்ப் படங்கள் – எண்பத்தாறு ஆண்டுகளாக – தயாரிக்கப்பட்டு வருவதுடன், அவை இலங்கைத் தமிழர் இரசனைமீது பாதகமான தாக்கத்தையும் செலுத்திவருகின்றன. இவற்றுக்குப் போட்டியாகத் திரைப்படங்களில் முதலீடுசெய்து இலங்கையில் செயற்படுவது, பொருளாதார நட்டத்தைத் தருமென்ற அச்சமும் இருக்கிறது; இந்நிலைமை புதிய முயற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. எனவே, கலை அக்கறையுடன்கூடிய நல்ல திரைச்சுவடிகள் திரைப்படமாக உருவாக்கப்படுவதற்கு, வேண்டிய பண உதவியையும் செய்யத் திரைப்படக் கூட்டுத்தாபனம் முன்வரவேண்டும். இந்திய மத்திய அரசின், ‘தேசிய திரைப்பட வளர்ச்சிக் கூட்டுத்தாபனம்’ (N. F. D. C. ) என்ற அமைப்பை, முன்னுதாரணமாக இங்கு எடுத்துக்கொள்ளவேண்டும்!
தெளிவான நோக்குநிலைகளுடனான தொடர் செயற்பாடுகள், காலநகர்வில் -இலங்கைத் தமிழ்த் திரைத்துறையில், நல்ல விளைவுகளைத் தருமென நம்புவோம்!
– 21. 11. 2017
(அனுஷா சிவலிங்கத்தின், ‘தெமள சினமாவே லாங்கேய பிரயத்னய’
என்னும் சிங்களப் புத்தகத்தில் இடம்பெற்ற கட்டுரை)