விடுதலைப் புலிகளினால் போர்க் கைதியாக 1994ம் ஆண்டு சிறைப் பிடிக்கப்பட்டு 2002ம் ஆண்டு விடுதலையாகும் வரையான எட்டு வருட காலங்களின் சிறை அனுபவத்தினை முன்னாள் இலங்கைக் கடற்படை அதிகாரியான கொமாண்டர் அஜித் போயகொட ‘நீண்ட காத்திருப்பு’ எனும் நூலுருவில் வெளியிட்டுள்ளார். இவர் சொல்ல அரங்கியலாளர் சுனிலா கலப்பதி எழுதியதை தமிழில் தேவா மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் உருவாகுவதற்கு அவரது சிறை அனுபவங்கள் தூண்டியதைவிட விடுதலையின் பின் அவர் எதிர்நோக்கிய அவமானங்களும் கசப்புணர்வுகளுமே முக்கிய காரணமாக அமைந்துள்ளதென நூலைப்படித்து முடிக்கின்றபோது துல்லியமாக உணரமுடிகின்றது.
சிங்கள இனவாத அரசின் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் படைத்துறையின் ஒரு அதிகாரி. புலிகளால் கைதுசெய்யப்படும்போது இருபது வருட சேவையை நிறைவு செய்யும் ஒரு மூத்த அதிகாரி, புலிகளின் சிறை அனுபவத்தை எவ்வாறு விபரிப்பார்? 2016ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த நூல் 2020ம் ஆண்டு தமிழில் வெளிவருவதன் நோக்கம் என்ன? நெருக்கமாக பார்த்திராத, அறிந்திராத பல்வேறு தகவல்கள் பொதிந்து காணப்படுமா போன்ற பல விடையங்கள் ஆவலைத்தூண்ட இரு இரவுகளில் நூலை வாசித்து முடிக்க முடிந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கரான ஜான் பெர்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்ற நூல் ஞாபகத்திற்கு வந்தது. இவரும் ஓய்வுபெற்றபின் தனது மனச்சாட்சியின் உறுத்துதலின் வெளிப்பாடாக கொட்டித்தீர்க்க முனைகின்றாரா என யோசித்தபோதும் பக்கங்கள் கரைய அவ்வாறும் இல்லையெனத் தெரிகின்றது.
ஈழ விடுதலைப் போர் ஆரம்பிக்காத காலங்களில் தனது இருபது வயதில் இலங்கைக் கடற்படையில் இணைந்தபோது தனது பணியை நேசித்த இவரால் தமிழர் மீது யுத்தம் முனைப்புப்பெறும் போது மனதளவில் அதனை ஏற்றுக்கொண்டும் பயணித்துள்ளார் என்பதனை மறுப்பதற்கில்லை ஆயினும் எட்டு வருட சிறை வாழ்க்கையில் புலிகளுடனும் தமிழர் தாயகத்தில் பல்வேறு சிறைகளில் வாழ்ந்ததாலும் தமிழரின் அரசியல் விருப்பினை ஓரளவேனும் புரிந்துகொண்டவராகவும் அதற்கு தனது நிலைப்பாடாக சமஸ்டி தீர்வினை குறிப்பிடும் இவர் எல்லா சிங்கள பேரினவாத சமூகமும் நினைப்பது போன்று ஆயுதப் போராட்டம் தவறென்றே குறிப்பிடுகின்றார். ஒரு கைதியாக இருந்தும் புலிகளின் உயர் நிலைப் பொறுப்பாளர்களுடன் சினேகபூர்வ உறவினை வைத்துள்ளமையும் அரசியல் பற்றி பேசுவதனையும் பதிவு செய்துள்ளார்.
மிகவும் கவனமாக தனது எழுத்துக்களை நகர்த்தியுள்ளார். சொல்லப்படும் விடையங்கள் யுத்தக் குற்றங்களுக்கான ஆதாரங்களாக அமைந்துவிடக் கூடாதென்பதிலும் சிங்களவர்கள் மத்தியில் தேசத்துரோகி எனும் பெயர் உருவாகுவதை தவிர்ப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார். கிளாலி படுகொலைகள் நடைபெறுகின்ற காலங்களில் புலிகளின் கைதியாக இருந்தபோது முழுத்தகவல்கள் தெரிந்தும் நடைபெற்ற படுகொலைகள் பற்றி பேசப்படவில்லை. காரைநகர் கடற்படைத் தளத்தின் இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெற்ற பொருள்சேதம் பற்றி பேசப்படும் இந்நூல் அந்த நடவடிக்கைகளால் படுகொலை செய்யப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் பற்றி பேசப்படவில்லை. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் காரைநகர் நிலப்பரப்பை கடற்படையும் இராணுவமும் கைப்பற்றிய பின்னர் அந்த நடவடிக்கையில் பங்குபற்றிய ஒரு அதிகாரியாக இவ்வாறு குறிப்பிடுகின்றார் “ இராணுவத்தின் மனோநிலை என்ன என்பதை நான் பார்த்தேன். கண்ணில் பட்டதையெல்லாம் நிர்மூலமாக்கி இருக்கின்றார்கள். அலுமாரிகள் திறக்கப்பட்டு உடைகள் இழுத்தெறியப்படிருந்தன குடும்ப படங்கள் தரையில் வீசி உடைக்கப்பட்டிருந்தன. தங்க நகைகள், துவிச்சக்கர வண்டிகள் என பெறுமதியான பொருட்கள் அனைத்தும் களவெடுக்கப்பட்டன. குடும்ப படங்களை யுத்த வெற்றிச் சின்னங்களாக படையினர் தம்முடன் எடுத்துச் சென்றனர்” எனவும் எழுதியுள்ளார். பல விடையங்களை குறிப்பிடும் இவர் யுத்த நடவடிக்கைகளைப் பற்றியோ கடற்படையின் மனிதாபிமானமற்ற செயல்கள் பற்றியோ பெரிதாக ஒன்றும் எழுதப்படவில்லை என்பது ஏமாற்றம்தான் ஆனாலும் தனது உள்ளக்கிடக்கையில் உழன்று தவித்த உணர்வுகளைக் கொட்டித்தீர்த்துள்ளார்.
இலங்கை அரசும் கடற்படையும் தனது விடுதலைக்கு ஆர்வம் காட்டவில்லையென்பதை வேதனையுடன் பதிவிடுகின்றார். புலிகளால் சிறைப்பிடிக்கப்படும் படையினரை விடுவிக்கும் விருப்பு அரசுக்கு இருப்பதில்லை என்ற செய்தியை தனது நூலில் தெளிவாக சொல்லியுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது. தனது விடுதலைக்கு ஆதரவாக விடுதைப்புலிகளே இருந்திருக்கின்றார்கள் என்று விரிவாகச் சொல்லும் கொமாண்டர் அஜித் போயகொட 2002ம் ஆண்டு விடுதலையின் பின்னர் 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அழிவின்போது நிவாரணப்பணிக்காக வன்னி சென்றபோது சிறைக்காலங்களில் தான் பழகிய புலிகளைச் சந்திப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார். சசிகுமார் மாஸ்டர், நியூட்டன், தயா மாஸ்டர், ஜோர்ச் அங்கிள், சுதா மாஸ்டர் மற்றும் பலரை மகிழ்வுடன் சந்தித்தமையை பதிவுசெய்துள்ளார். 2009ம் ஆண்டில் இவர்களுக்கு என்ன நடந்திருக்குமென்பதில் கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நூலை வாசித்து முடித்த போது பெரும்பான்மை இனத்தின் யதார்த்த நிலையை ஒரு கேள்வியிலும் ஒரு பதிலிலும் புரியவைத்துள்ளமை தெரிந்தது. சிறையிலிருந்து மீண்டதும் எல்லோரும் அவரிடம் கேட்கப்பட்ட ஒரேயொரு கேள்வி – புலிகள் உங்களை எப்படி நடத்தினார்கள்? அவரது ஒரே பதில் – மிகவும் நன்றாக நடத்தினார்கள். ஆனால் அவர்களால் அந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை….
நூலை வாசிக்கும்போது அது எமக்கும் புரியும், வாசித்துப் பாருங்கள்…
சுப்ரம் சுரேஷ்
நன்றி – ஜீவநதி