பெலாருசில் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்தப்படும் அபாயம் !
உக்ரேனிய வலிந்த எதிர் தாக்குதல்கள்முறியடிப்பு:
——————————————————-
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(கடந்த வாரம் உக்ரேனிய போர் நிலவரத்தில், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரசில்அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போவதாக ரஷ்ய அதிபர் புட்டின்தெரிவித்துள்ளார். அதேவேளை மேற்குலக படைபல ஆதரவுடன் உக்ரேனிய வலிந்த எதிர் தாக்குதல்கள் ரஷ்யாவால் முறியடிக்கப்பட்டுள்ளதை மேற்குலக ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன)
இவ் வாரம் உக்ரேனின் வலிந்த எதிர்த்தாக்குதல் முயற்சியின் போது ரஷ்ய படைகளின் முறியடிப்புத் தாக்குதல்களால் பல உக்ரேனிய தாங்கிகள் அழிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோப் பதிவுகள் மேற்கத்திய ஊடகங்களிலும் வெளியாகி உள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சக வீடியோவை முழுமையாக ஆதாரப்படுத்தி ஏற்காவிட்டாலும், உக்ரேனின் 186 டாங்கிகள், 418 கவச வாகனங்கள் இழந்ததை கீவ் தலைநகரம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
உக்ரைனுக்கு பேரிழப்பு – புட்டின் தகவல்:
ரஷ்யா எல்லையில் உக்ரைன் கடந்த சில நாட்களாக உக்ரைன் வலிந்த எதிர் தாக்குதலை (Counter offensive) நடத்தியது. அதில் ரஷ்யா கைப்பற்றிய சில கிராமங்களை மீட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியிட்டனர்.
ஆயினும் ரஷ்யாவின் எதிர் தாக்குதலால் இப்போரில் உக்ரைனுக்கு இழப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இருநாட்டு எல்லையில் தங்களது பாதுகாப்பை அதிகரித்து, உக்ரைன் பகுதிகளை இன்னும் அதிக அளவில் கைப்பற்ற ரஷ்யப்படைகள் முயற்சி மேற்கொள்வார்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபரான புட்டின் கூறுகையில், “உக்ரைன் 160 ராணுவ டாங்கிகள், 360-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களை கடுமையான சண்டையில் தற்போது இழந்துள்ளது. அதேவேளையில் இத்தாக்குதலில் ரஷ்யா 54 டாங்கிகளை மட்டுமே இழந்துள்ளது. இதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது. உக்ரைன் ஊடுருவல், ரஷ்யாவின் பெல்கோரோட் எல்லை பிராந்தியத்தில் நிகழ்கிறது. உக்ரைன் தாக்குதல், ஊடுறுவலை ரஷிய தடுத்து நிறுத்தும்.
ரஷ்யாவை பாதுகாக்கும் வகையில் உக்ரைனில் ஒரு பாதுகாப்பான பகுதியை (Buffer Zone) உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்வோம். தற்போதைக்கு ராணுவ வீரர்களை அதிக அளவில் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தால், ரஷ்யாவின் இலக்கு என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இன்றைய அளவில் அது தேவையில்லை” என்றும் புட்டின் உறுதியாக கூறியுள்ளார்.
33 நாடுகளில் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி:
கடந்த வருடம் பிப்ரவரி 24, 2022 அன்று, ரஷ்யா உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மக்கள் குடியரசுகள் உக்ரேனிய படைகளின் கோரமான தாக்குதல்களின் கீழ் வாழ்ந்து வந்த டான்பாஸ் பிராந்தியத்தை விடுவிக்கும் நோக்கில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை ஆரம்பமாகியது.
நீண்ட காலமாக இழுபடும் இப்போரில், ரஷ்யாவின் இராணுவம் சீர்குலைந்த நிலையில் இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட இராணுவ ஜெனரல் மார்க் மில்லி கூறியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் பேசுகையில், மேற்கண்டவாறு கூறிய அவர், சீரற்ற தலைமைத்துவம் மற்றும் மிகக்குறைந்த மன உறுதியுடன் ரஷ்ய துருப்புக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் பேசிய அவர், சர்வதேச முயற்சிகள் மூலம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் உக்ரைனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் களமுனையில் போரில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இப்போது 60,000 இற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் வெவ்வேறு இடங்களில் பயிற்சி பெறுகிறார்கள். இப் போர் பயிற்சிகள் மூன்று கண்டங்களில் உள்ள 33 நாடுகளில் இடம்பெறுகின்றன. இதுவரை 11,000 உக்ரைன் வீரர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துள்ளது” என்றார்.
அத்தோடு, உக்ரைனின் புதிய எதிர்த் தாக்குதலை “மிகக் கடினமான சண்டை” வரவுள்ளதாவும் அவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் களமுனையில் தீவிர மோதல் இடம்பெற்றுவரும் நிலையில், களமுனை நிலவரம் குறித்த படங்கள் சில வெளிவந்திருக்கிறன. அவற்றை ரஷ்யாவிற்கு எதிராகவே மேற்குலக ஊடகங்ஙள் காட்டுகின்றன.
உக்ரைனின் தாக்குதல் முறியடிப்பு:
எல்லைப் பிராந்தியமான டொனெட்ஸ்கில் உக்ரைனின் பெரும் தாக்குதலை அதன் படைகள் முறியடித்ததாகவும், 250 உக்ரைன் துருப்புக்களைக் கொன்றதாகவும், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அழித்ததாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
இந்த முறியடிப்புத் தாக்குதலில் ரஷ்யா தனது படைகள் 250 உக்ரைன் வீரர்களை கொன்றதுடன் 16 டாங்கிகள், மூன்று காலாட்படை சண்டை வாகனங்கள் மற்றும் 21 கவச போர் வாகனங்கள் ஆகியவற்றை அழித்ததாக கூறியது.
ஜூன் 4 காலை, உக்ரேனிய படைகள் தெற்கு டொனெட்ஸ்க் திசையில் ஐந்து பிரிவுகளில் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கினர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை அதிகாலை அதன் டெலிகிராம் சேனலில் கூறியது. நேற்று மட்டும் 23 தாக்குதல்களை உக்ரைன் படையினர் நடத்தியதாகவும் அவை அனைத்தும் ரஷ்யப் படைகளால் முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறுகிறது.
ஆறு இயந்திரமயமாக்கப்பட்ட மற்றும் இரண்டு டேங்க் பட்டாலியன்களைப் பயன்படுத்தி உக்ரைன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரேனியர்களின் குறிக்கோள் எங்களின் முன்னணி பாதுகாப்பு எல்லையை உடைப்பதாகும். அவர்களால் அந்த இலக்கை அடையவும் முடியவில்லை வெற்றிபெறவும் முடியவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து உக்ரைன் தரப்பில் எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
ரஷ்யாவுடன் இணைந்த நான்கு பிரதேசங்கள்:
கடந்த செப்டம்பரில் லுஹான்ஸ்க், சபோரிஷியா மற்றும் கெர்சன் ஆகியவற்றுடன் ரஷ்யா இணைத்த நான்கு உக்ரேனிய பிரதேசங்களில் டொனெட்ஸ்க் ஒன்றாகும். உக்ரைனிய படைகள் கடந்த பிப்ரவரி 2022 இல் உக்ரைன் மீதான படையெடுப்பையும், 2014 இல் கைப்பற்றிய கிரிமியன் தீபகற்பத்தையும் ரஷ்யாவால் ஆக்கிரமித்துள்ள பகுதியை திரும்பப் பெறுவதற்கான எதிர் தாக்குதலை தொடங்கியத.
தொடரும் களமுனை நிலவரப்படி, ரஷ்யா இந்தப் போரில் முழுமையாக வெற்றி பெற்றதாகவும் சொல்ல முடியாது. உக்ரைன் முழுமையாக தோல்வியடைந்ததாகவும் கூற முடியாது. ஆனால், ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதிகள் பெருமளவில் சேதமடைந்தன. பல இடங்களை ரஷ்யா பிடித்துள்ளது.
போர் தொடங்கிய நாட்களில் இருந்து நாட்கள் செல்ல செல்ல உக்ரைன் மெதுவாக எதிர்தாக்குதலை தொடங்கியது. இதன் காரணமாக ரஷ்யப் படைகள் சில இடங்களில் பின்வாங்கும் நிலையும் ஏற்பட்டது.
உக்ரேனின் கடுமையான இழப்புகள்:
ஜேரமனி வழங்கிய சிறுத்தை கனரக டாங்கிகள் மற்றும் அமெரிக்காவின் பிராட்லி சண்டை வாகனங்கள் உட்பட நேட்டோ ஆயுதங்களை சேமித்து வைத்த பின்னர் உக்ரேனியப் படைகள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட எதிர் தாக்குதலை இந்த மாத தொடக்கத்தில் தொடங்கின.
நன்கு தயாரிக்கப்பட்ட ரஷ்ய தற்காப்பு எல்லைகளுக்குள் வந்த பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டது. உக்ரேனிய மேற்கத்திய ஆதரவாளர்கள் கூட உக்ரேனின் கடுமையான இழப்புகள் குறித்து தகவல்களை வெளிப்படுத்தினர்.
உக்ரைன் தனது தொடர்ச்சியான எதிர் தாக்குதலுக்கு மத்தியில் எந்த மூலோபாய நோக்கங்களையும் அடையத் தவறிவிட்டது. இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்றுவரை 186 டாங்கிகள் மற்றும் 418 கவச வாகனங்களை இழந்துள்ளது.
சில இடங்களில் உக்ரேனியப் படைகள் பாதுகாப்புக்கான முதல் வரிசையை அடைய முடிந்தது, சில இடங்களில் இல்லை.
கடந்த வெள்ளிக்கிழமை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் அமர்வின் போது செய்தியாளர்களிடம் புடின் கூறுகையில், பல கூறுகளைக் கொண்ட அவர்களின் மூலோபாய இழப்புக்கள் என்று கூறினார்.
தொடர் தாக்குதல்களால், ரஷ்ய எல்லை பாதுகாப்பு உடைக்கப்படுகிறது, இரண்டாவது படைகளைப் பயன்படுத்தி பிரதேசத்தின் மீது காலூன்றுகிறது. முன்னணியின் ஒரு பகுதியிலும் அவர்கள் தங்கள் இலக்குகளை அடையவில்லை. இதுவே முக்கியமானது,” என்று அவர் கூறினார்.
ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பிடும்போது உக்ரேனியர்களின் இழப்புகள் உண்மையில் மிகப் பெரியவை. பத்துக்கும் ஒன்றுக்கும் அதிகமானவை. இது ஒரு உண்மை. உபகரணங்களைப் பொறுத்தவரை, தினசரி இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய நிலவரப்படி, இதில் 186 டாங்கிகள் இழந்தன மற்றும் 418 பல்வேறு கவச வாகனங்கள் அடங்கும் என புட்டின் கூறினார்.
24 மணி நேர ஆயுத தயாரிப்பு:
ரஷ்யாவின் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்க 24 மணி நேரமும் உழைத்து வருகின்றன.”நாங்கள் இராணுவ உற்பத்தியின் உற்பத்தியை 2.7 மடங்கு அதிகரித்துள்ளோம், மேலும் மிகவும் தேவையான உபகரணங்களுக்கு வரும்போது – 10 மடங்கு.
உக்ரேனியப் படைகளைப் பொறுத்தவரை, “விரைவில் அவர்கள் அதன் சொந்த உபகரணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்” என்று புட்டின் கணித்துள்ளார். ஏனெனில் அது முறையாக அழிக்கப்படுகிறது. அவர்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வருகிறது. இப்படி நீண்ட காலம் போராட முடியாது,” என்று அவர் கூறினார்.
மின்ஸ்க் சமாதான ஒப்பந்தம்:
தென்கிழக்கு உக்ரைனில் போர் 2014 இல் உக்ரேன் அவர்களின் மேற்கத்திய ஆதரவாளர்களின் ஆதரவுடன் தொடங்கப்பட்டது. ஆனால் மேற்கில் உள்ள அனைவரும் இதைப் பற்றி பேசாமல் இருக்க முயற்சிக்கின்றனர். டான்பாஸுக்கு எதிராக போர் விமானம், டாங்கிகள், பீரங்கிகள் ஏராளமாக பயன்படுத்தப்பட்டன. இதுவே தற்போதைய போர் நெருக்கடியின் மூல காரணங்களாகும்.
கீவ் அரசு அமைதியான வழிகளைப் பயன்படுத்தி டான்பாஸ் (Don Bass) நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க மறுத்தது. இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஷ்ய ஆயுதப் படைகளைப் பயன்படுத்துமாறு எங்களை கட்டாயப்படுத்தினர்.
டான்பாஸுக்கான மின்ஸ்க் (Minsk) சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 2015 மற்றும் 2022 க்கு இடையில் தனது மேற்கத்திய கூட்டாளர்களை போருக்கே உக்ரேன் வழிநடத்தியது.
உக்ரேனிய, ஜேர்மன் மற்றும் பிரெஞ்சுத் தலைவர்களால், மீண்டும் ஆயுதம் ஏந்துவதற்கும், ரஷ்யாவுடன் போருக்குத் தயார் செய்வதற்கும் மட்டுமே மின்ஸ்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் போல தென்பட்டது.
பெலாரஸில் அணு ஆயுதங்கள்:
பெலாரஸில் (Belarus) அணு ஆயுதங்களை நிலைநிறுத்தும் ரஷ்யா அதிபர் புட்டின் முடிவால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவியாக ஆயுதங்கள் வழங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட உதவி புரிந்து வருகின்றன.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இவ்வேளை
ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரசில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப் போவதாக ரஷ்ய அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார்
ரஷ்யா உக்ரைன் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்தப் போர் ஓராண்டைக் கடந்து நீடித்து வருகிறது என்பதே உண்மை.
தோற்கடிக்க முடியாத ஆயுதம்:
பெலாரசில் அணு ஆயுதங்களை நிறுவியதும், அதன் கட்டுப்பாடு அனைத்தும் ரஷ்யாவிடமே இருக்கும் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.மேலும் இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன் பேசும்போது அவர் ஒப்புக் கொண்டதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை மீறாது என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புட்டின், இதை அமெரிக்கா தனது ஆயுதங்களை ஐரோப்பாவில் நிலைநிறுத்துவதுடன் ஒப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே அணு ஆயுதங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் சரிவின்போது உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ரஷ்யா அணு ஆயுதங்களை வைத்திருந்தது. சோவியத் யூனியன் சரிவை தொடர்ந்து உக்ரைன், பெலாரஸ், கஜகஸ்தான் தனி நாடுகளாகப் பிரிந்ததால் அங்கிருந்து 1996ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து அணு ஆயுதத்தையும் ரஷ்யா திரும்பப் பெற்றுக்கொண்டது.
கடந்த ஆண்டு பெலாரசில் இருந்து ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பெலாரசில் ரஷியா அணு ஆயுதத்தை நிலைநிறுத்த இருப்பதால் ஐரோப்பிய நாடுகள் கலக்கம் அடைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா