நிம்மதியான வாழ்க்கைக்கு வழி கூறும் ஜென் கதை இது
ஒரு ஊரில் செல்வச் சீமான் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான செல்வம் சுகபோக வசதிகள் இருந்தும் மனதில் மட்டும் நிம்மதியே இல்லை.
அவரும் மன நிம்மதிக்காக என்னென்னவோ செய்து பார்த்தார். ஆனால் நிம்மதி மட்டும் கிட்டிய பாடில்லை.
இதனால் வெறுத்துப் போன அவர் தன் செல்வங்களை எல்லாம் விற்றாவது நிம்மதியை அடைந்தே தீருவது என்று முடிவெடுத்தார். அதனால் தன்னுடைய செல்வங்களையெல்லாம் விற்று தங்கமாக மாற்றிக் அதை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு தேசாந்திரம் புறப்பட்டார்.
அவர் பல கோவில் குளங்கள் புண்ணிய தீர்த்தங்கள் என்று பல நாட்கள் அலைந்து திரிந்தார். ஆனால் அவர் நோக்கம் மட்டும் நிறைவேறவில்லை.
ஒருநாள் அவரை வழியில் சந்தித்த வழிப்போக்கர் ஒருவர் ஒரு உபாயம் சொன்னார். அதாவது பக்கத்து ஊரில் ஒரு ஜென் மகான் இருப்பதாகவும் அவர் செல்வந்தரின் மனக்குறையை நிச்சயம் போக்குவார் என்றும் வாக்களித்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த செல்வந்தர் உடனடியாக அந்த ஜென் துறவியை சென்று சந்தித்தார். ஜென் துறவியோ கண்ணைமூடி தியானத்தில் இருந்தார்.
செல்வந்தர் ஜென் துறவியை வணங்கிவிட்டு தன்னுடைய பிரச்சினையை சுருக்கமாக எடுத்துக் கூறி என்னுடைய பிரச்சினையை தீர்த்து வைத்தீர்கள் என்றால் இந்த தங்க கட்டிகளை நான் உங்களுக்கு சமர்ப்பித்து விடுவேன் என்று வேண்டி நின்றார்.
ஜென் துறவி மெதுவாக கண்ணை திறந்தார்.
செல்வந்தரை ஏறிட்டு கூட பார்க்காமல் அந்த தங்க கட்டிகள் அடங்கிய அந்த மூட்டையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நேரம் தான் சென்றதே தவிர துறவி ஒரு வார்த்தை கூட வாயை திறந்து பேசவில்லை.
செல்வந்தரும் அவர் ஏதாவது வழி சொல்லுவார் என்று அவரையே பார்த்துக் கொண்டு ஆவலாக நின்றிருந்தார். ஆனாலும் துறவி மௌனமாக மூட்டையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
பின்பு எழுந்து நின்று அந்த மூட்டையை தூக்கினார்.
பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென்று மூட்டையுடன் ஓட ஆரம்பித்துவிட்டார்.
அதைப்பார்த்ததும் திகைத்துப்போன செல்வந்தர் “அடக்கடவுளே போயும் போயும் ஒரு போலி சாமியார் இடமா என் செல்வத்தையெல்லாம் பறிகொடுத்தேன்” என்று புலம்பிக்கொண்டே துறவியை துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தார்.
ஆனால் துறவியைப் பிடிக்கவே முடியவில்லை.
மேடு பள்ளம் கல் முள் என்று பாராமல் வேகமாக துறவி ஓடிக் கொண்டிருந்தார். செல்வந்தரும் தன்னுடைய மூட்டையை கைப்பற்ற முடியவில்லையே என்று ஆத்திரத்தோடு துரத்தினார்.
ஒரு கட்டத்தில் துறவி சுற்றி சுற்றி ஓடி கடைசியில் தான் எந்த மரத்தடியில் அமர்ந்து இருந்தாரோ அதே மரத்தடிக்கு வந்து சேர்ந்தார்.
அவரை துரத்திக்கொண்டு வந்த செல்வந்தரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க துறவியின் எதிரில் வந்து நின்றார்.
துறவி அந்த தங்க கட்டிகள் அடங்கிய மூட்டையை அந்த செல்வந்தரின் முன் தூக்கிப் போட்டார். செல்வந்தரும் தாவி அந்த மூட்டையை எடுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். இப்பொழுதுதான் அவருக்கு போன உயிர் திரும்பி வந்து இருந்தது.
துறவி மென்மையாக பேசத் தொடங்கினார்.
இதற்கு முன்பும் மூட்டை உன்னிடமே தான் இருந்தது. நிம்மதி இல்லை என்றாய். இப்பொழுதும் மூட்டை உன்னிடம்தான் இருக்கிறது. ஆனால் நிம்மதியாக இருக்கிறாய்.
“நீ போகலாம் ” என்று கூறிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
மனக் கவலையின் வெளிப்பாடே நிம்மதியின்மை.
ஏன் மனக்கவலை வருகிறது?
வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ள பயப்படுவதால்.
வாழ்க்கை சவால்கள் இரண்டே வகைதான். தீர்க்க முடிபவை. தீர்க்க முடியாதவை.
ஒரு சவாலை வெற்றிகரமாக உங்கட எதிர்கொள்ள முடியும் என்றால் நீங்கள் எதற்காகக் கவலைப்பட வேண்டும். நிம்மதியாக இருங்கள்.
ஒரு சவாலை நீங்கள் வெற்றி கொள்ள முடியாது அது உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது என்றால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு பிரச்சினையை உங்கள் ஆற்றலால் தீர்க்க முடியாத போது கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் மட்டும் தீர்க்க முடியுமா?
ஆகவே கவலையை விடுங்கள்.!
ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு நிம்மதியாக இருங்கள்.