தயாரிப்பு : எம் எஸ் வி புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, மோஹித், சிமேகா, பாரதி, திவ்யா ஸ்ரீதர் மற்றும் பலர்.
இயக்கம் : மணிபாரதி .எஸ்
மதிப்பீடு : 2/5
பால்ய பிராயத்திலிருந்தே இப்படத்தின் நாயகனும், நாயகியும் ஒன்றாக பழகி வருகிறார்கள். நாயகி பூப்பெய்திய பிறகு அவர்களுக்குள் காதல் உருவாகிறது.
இந்த காதல் நாயகியின் பெற்றோர்களுக்கு வழக்கம் போல் பிடிக்கவில்லை. இதனால் நாயகியை காண அதிகாலை நேரத்தில் அவரின் வீட்டிற்குள் வரும் நாயகனை.. நாயகியின் தாய், ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, ‘திருடன்’ என கத்தி ஊரைக் கூட்டி .. அவன் மீது திருட்டுப் பழியை சுமத்தி ஊரை விட்டு துரத்துகிறார்.
இந்நிலையில் உறவினர் வீட்டில் திருமண நிகழ்வில் பங்குபற்ற சென்றிருந்த நாயகி திரும்ப வந்த பிறகு நடந்த விடயங்களை கேட்டு பெற்றோர்கள் மீது தீரா கோபம் கொள்கிறாள்.
காதலனையும், அவர் மீதான காதலையும் மறக்க இயலாமல் தவிக்கிறார். திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் வற்புறுத்தினாலும் அதனை உறுதியாக ஏற்க மறுத்து, ஒரு பெண் பிள்ளையை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்குகிறார்.
காலம் வேகமாக சுழல்கிறது. நாயகியுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த தோழி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரை சந்திக்க கிராமத்துக்கு வருகிறார்.
அப்போது திருமணமாகியும் தான் மகிழ்ச்சியாக வாழவில்லை என்பதை பகிர்ந்து கொள்ள நினைக்கும் முன்.. அவளுக்கு ஒரு விடயம் பிடிபடுகிறது. அது என்ன? என்பதும், அதன் பிறகு அந்த தோழிகளின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதும் தான் ‘பரிவர்த்தனை’ படத்தின் கதை.
திருமணத்திற்கு பிறகும் தன் காதலை மறக்காத நாயகன்- இதனால் தன் மனைவியை ஏற்க மறுக்கிறார். இதற்கு மனைவியானவள் தீர்வு காண்கிறார். கதை புதிதல்ல… காட்சிகளும், திரைக்கதையும் புதிதல்ல.. நடிகர்கள் மட்டும் புதிது. இதனால் புதிய தலைமுறை ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் ஒரு சின்ன ஆறுதலை தரலாம்.
நடிகர் சுர்ஜித் – நடிகை சுவாதி நடிப்பு மட்டுமே மனதில் இடம் பிடிக்கிறது.
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம், பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் பரவாயில்லை ரகம்.
பரிவர்த்தனை – பழைய கள் பழைய மொந்தை.