இந்தியாவில் அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி வீதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு கோவைக்கு வந்தார்.
பின்னர் அவர் காரில் அங்கிருந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற ஹோட்டலுக்கு சென்று அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.