தொலைபேசி இயக்கம் 1990 இற்குரிய-சுகப்படுத்தும் சேவை (சுவ சேரிய ) -அவசர நோயாளர் காவு வண்டிச் சேவையானது, தேசிய அளவிலானது; இலவசமானது. அது இந்திய மக்களின் உதவியோடு சாத்தியமாகியது. இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இது 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2018 ஜூலை மாதம் வடமாகாணத்திற்கும் அதன் சேவை விஸ்தரிக்கப்பட்டது. இது நீண்ட காலமாக உணரப்பட்ட மிகத் தேவையான ஒரு சேவை.இது ஏற்கனவே பல உயிர்களை பாதுகாத்திருக்கிறது. இது மிகவும் முக்கியமானதும் பயன்மிக்கதும் என்பது ஈஸ்டர் குண்டு வெடிப்பின் போதும் பெருந் தொற்று நோயின் போதும் நிருபிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு இந்தச் சேவையானது 3,44 623 தடவைகள் உதவியுள்ளது. அதில் 21,650 சேவைகள் வடமகாணத்தில் வழங்கப்பட்டன.அதில் 26 வீதமானவை விபத்துக்களோடு சம்பந்தப்பட்டவை.
இந்த அவசர மருத்துவ தொழில்நுட்பவியலாளர்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு உரியவர்கள்.இவர்கள் ஹைதராபாத்தில் எட்டு கிழமைகள் பயிற்சி பெறுகிறார்கள்.பொதுவான மருத்துவ அவசர தேவைகளுக்கும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சேவைகளுக்கும் அவர்கள் பயிற்றப்பட்டிருக்கிறார்கள்.
மீளப்புதுப்பித்தலுக்கான பயிற்சியை கிரமமாகப் பெற வேண்டியது இச்சவையினர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று.குறிப்பாக, பெருந்தொற்று நோயின் போதும் பொருளாதார நெருக்கடியின் போதும் அவ்வாறு இச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டியிருந்தது.இப்பொழுது களனி பல்கலைக்கழகத்தில் இச்சேவை வழங்குனர்களுக்கான டிப்ளோமோ கற்கை ஒன்று நடத்தப்படுகின்றது.
இப்போது நடக்கும் பயிற்சிகளை பிரித்தானிய,பேக்கிங்காம்ஷியர் நியூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆறு பரா மெடிக்கல் உறுப்பினர்கள் வழங்குகிறார்கள்.அவர்கள் இங்கு ஒக்டோபர் மாத இறுதியிலிருந்து இரண்டு கிழமைகள் தங்கியிருந்து பயிற்சிகளை வழங்கினார்கள். கொழும்பு.தம்புள்ள,யாழ்ப்பாணம் ஆகிய மூன்று இடங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தக் குழு தொண்டு அடிப்படையில் இங்கு வந்திருக்கின்றது. இக்குழுவுக்கு பேராசிரியர்.வில் ப்ரோட்டன் தலைமை தாங்குகிறார்.அவர் யாழ்ப்பாணத்திற்கு இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் வந்துள்ளார். வடமாகாண சபையின் நோயாளர் காவு வண்டிச் சேவையில் ஈடுபடும் குழுவினருக்கு அவர் பயிற்சி வழங்கியிருக்கிறார்.இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் பயிற்சியை வழங்குவதற்கு தேவையான குழுவினரை அவர் மிக மகிழ்ச்சியோடு ஒழுங்குபடுத்தினார்.
இந்த பயிற்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் நடந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 65 நோயாளர் காவு வண்டி அலுவலர்கள் இப் பயிற்சியை பெற்றுக் கொண்டார்கள்.இப்பயிற்சிகள் மிகவும் பிரயோசனமானவை அவர்கள் என்று கூறினார்கள். வருங்காலத்தில் அவசர மருத்துவ கவனிப்புக்கு தேவையான தொழில் சார் அறிவை அது மேலும் விருத்தி செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
இவர்களுடைய ஆர்வம் மற்றும் ஈடுபாட்டைக் குறித்து பிரித்தானியாவிலிருந்து வந்த பயிற்றுவிப்பாளர்களும் திருப்தி தெரிவித்தார்கள்.இக்குழுவினர் ஆண்டுதோறும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா எயார் லைன் நிறுவனம் இப்பயிற்றுனர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கியதன்மூலம் இப்பயிற்சி திட்டத்தைச் சாத்தியமாக்கியது.மேலும், விமான டிக்கெட்டுகளுக்குரிய வரிப்பணத்தை,இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட பன்னாட்டு மருத்துவ சுகாதார அமைப்புச்(IMHO) செலுத்தியது.இப்பயிற்சித் திட்டம் வலம்புரி ஹோட்டலில் இடம் பெற்றது. பயிற்சி வழங்கிய குழுவுக்கு ஹோட்டல் நிர்வாகம் குறைந்த கட்டணத்துக்குச் சேவைகளை வழங்கியது.
தொலைபேசி இலக்கம் 1990 இலவச நோயாளர் காவு வண்டிச் சேவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருந்த போதிலும், அது இலவசமாகக் கிடைக்கும் சேவை என்பதில் உள்ள முக்கியத்துவத்தைக் குறித்துப் போதிய புரிந்துணர்வு மக்கள் மத்தியில் இல்லை.இந்த நோயாளர் காவு வண்டிக் குழுவினர் பொதுவான மருத்துவ அவசர நிலைமைகளின் போதும்,விபத்துகளில் கடுமையாகக் காயப்பட்டவர்களுக்கும்,உதவக்கூடிய பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார்கள்.இதன் பொருள் என்னவென்றால்,மருத்துவ சிகிச்சையானது விபத்து நடந்த இடத்திலேயே தொடங்குகிறது என்பதுதான். ஆனால் நோயாளிகளை தனியார் வாகனங்களில் காவும்பொழுது அது கிடையாது.ஆஸ்பத்திரிக்கு போகும்வரை அவர்கள் சிகிச்சைக்காகக் காத்திருக்க வேண்டும்.அது மேலும் அவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இந்த இலவச நோயாளர் காவு வண்டிச் சேவைக்கு ஒரு கைபேசிச் செயலி உண்டு.அதனை ஸ்மார்ட் கைபேசிகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.அந்த இலக்கத்துக்கு அழைத்தால் GPS தொழில்நுட்பத்தின் மூலம் அழைப்பு வந்த இடத்தை விரைந்து கண்டுபிடிப்பார்கள். பொதுமக்கள் அந்தச் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.அதை உண்மையான, அவசர மருத்துவ நிலைமைகளின் போதுதான் பயன்படுத்தப்படலாம் என்பதனை பொதுமக்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது முக்கியமானது. இச்சேவையைத் துஸ்பிரயோகம் செய்வது உண்மையாகப் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இச் சேவையை உடனடியாகப் பெறுவதைப் பாதிக்கும். இப்பொழுது வட மாகாணத்தில் அழைப்புக் கிடைத்த 12 நிமிடங்களில் சேவை கிடைக்கின்றது. அதற்கு தெருக்களில் ஏனைய வாகன சாரதிகள் மேலும் பொறுப்புணர்வோடு நடந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது.
பச்சை, சிவப்பு மற்றும் வெள்ளை நிற நோயாளர் காவு வண்டிகள் எமது தெருக்களிலும் ஆஸ்பத்திரிகளின் அவசர சேவைப் பிரிவின் முன்னாலும் வழமையாகப் பார்க்க கிடைக்கின்றன.அவசர,மருத்துவ சேவைகளை நாடுவோர் இதனால் மேலும் பயனடைவர் என்று நம்பலாம். நிச்சயமாக இச் சேவை மேலும் விருத்தி செய்யப்பட வேண்டும். அரசாங்கம், சுகாதாரத் துறை சார்ந்தவர்கள்,மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் முழுமையான ஆதரவின் மூலமே அது சாத்தியமாகும். இப்பொழுது நடந்து முடிந்திருக்கும் பயிற்சித் திட்டமானது,தரமான கவனிப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும்.
1990 சேவை உயிர்களைப் பாதுகாப்பதற்கும் அதைத் தொடர்ந்து செய்வதற்கும் உதவியிருக்கின்றது.
Dr.தயாளன் அம்பலவாணர்-
சத்திர சிகிச்சை நிபுணர்.