தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இன்று (22) காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அவர்களில், ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலக குழுக்களுக்கு இடையில் நிலவிய நீண்டகால பகையே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் பாதாள உலகக் குற்றவாளியான கொஸ்கொட சுஜீயின் கும்பலே இந்தத் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.