உக்ரைன் நாட்டவர்களுக்கான குடும்ப விசா வழங்கும் திட்டம், கடந்த 19ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக இங்கிலாந்து அரசின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதற்கு எதிர்க்கட்சியினரும் புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உறவினர்களைக் கொண்ட உக்ரைனியர்களுக்கு குடும்ப விசா வழங்கி வந்தது இங்கிலாந்து.
அதாவது, உக்ரைன் நாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது இங்கிலாந்தில் வாழ்ந்தால், அவர்கள் இங்கிலாந்தில் இருக்கும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்ளும் நோக்கில் இந்த விசா வழங்கப்பட்டது.
இந்த விசா திட்டமே, கடந்த 19ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளமையால் அது எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.
ஆனால், அதற்கு பதில் அளித்துள்ள இங்கிலாந்து அரசு, உக்ரைனியர்களுக்கான குடும்ப விசா திட்டம்தான் முடிவுக்கு வந்துள்ளதாகவும் இங்கிலாந்தில் வசிக்கும் உக்ரைனியர்களை வெளியேற கூறவில்லை என்றும் அவர்களுக்காக, “உக்ரைனியர்களுக்காக வீடுகள்” என்னும் திட்டம் இன்னமும் நடைமுறையில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.