செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆன்மிகம் மஹா சிவராத்திரி விரதம்

மஹா சிவராத்திரி விரதம்

5 minutes read

எந்த துன்பம் வந்தாலும் சிவனை நினைத்தால் வந்த துன்பம் வழிமாறிப் போகும். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியான எல்லாம் வல்ல அந்த சிவனுக்கென்ற மகத்துவமான ராத்திரியை கொண்ட நாள்தான் இந்த சிவராத்திரி.

கலியுகத்தில் இயந்திரத்தை விட வேகமாக மனிதன் சுழன்றுகொண்டிருப்பதனால் இறைவனை நினைக்க அவனுக்கு நேரம் குறைவு என்றாகிவிட்டது.

இந்நிலையில் மலத்தில் சிக்குண்டு அல்லற்படும் ஆன்மாக்களாகிய நாம் இறையருளை பெறக்கூடிய பிறப்பில்லா இறப்பில்லா பெருவாழ்வை பெறக்கூடிய அற்புதமான ஒரு நாள்தான் இந்த சிவராத்திரி.

இந்துக்களின் முழுமுதற்கடவுளான சிவனை நினைத்து சிவனுக்காக அனுஷ்டிக்கின்ற இந்த சிவராத்திரி நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாதந்தோறும் சிவராத்திரி விரதம் வந்தாலும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் வருகின்ற சிவராத்திரி மிகவும் விஷேடமான மகா சிவராத்திரி எனப்படுகிறது.

சிவராத்திரி விரத உருவாக்கம் தொடர்பில் பல கதைகள் உள்ளன. அருவ, உருவ, அருவுருவ திருமேனி கொண்ட சிவம் சோதிப் பிழம்பாக தோன்றிய நன்னாளும் இதுவே. அதாவது பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களில் யார் பெரியவர் என விவாதம் நடத்தி, போட்டியும் போட்டனர். இடையில் சிவபெருமான் அசரீரியாக உங்களில் யார் எனது அடியையும் முடியையும் கண்டறிகிறீர்களோ, அவரே பெரியவரென உரைத்தார்.

பன்றியாக விஷ்ணுவும், அன்னப்பறவையாக பிரம்மாவும் மாறி அடியையும் முடியையும் தேடினர். ஆயினும், சிவபெருமானின் அடியையும் காண முடியாமல், முடியையும் தொட முடியாமல் தவித்துப் பிரமித்தார்கள்.

ஆனால், பிரம்மா தாழம்பூவை சாட்சி சொல்ல வைத்து சிவபெருமானிடம் தான் தங்களது முடியை கண்டதாக சொன்னார்.

பிரம்மா உரைத்தது பொய் என்று அறிந்த சிவபெருமான், உனக்கு பூமியில் கோயில்களும் பூஜைகளும் கிடையாது என்று பிரம்மாவை சபித்தார்.

அப்போது நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக விஸ்வரூபமெடுத்து தரிசனம் தந்தார். அதுவே மகா சிவராத்திரி என்று கூறப்படுகிறது.

அதேபோல ஊழிக்காலத்தில் பிரளயத்தின்போது உயிர்களை காப்பதற்காக உமையவள் விரதம் இருந்தார். சிவபெருமானின் இட பாகத்தையும் பெற்றாள். அந்த நன்னாளும் மகா சிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுவதாகவும் கூறப்பகிறது.

மேலும், பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினத்திலேயே ஆகும்.

மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் மகா சிவராத்திரி. பகீரதன் ஒற்றை காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.

கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகா சிவராத்திரி நாளில்தான்.

பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் லிங்க ரூபமாக சிவபெருமான் அருள் வழங்கிய நாள்.

சிவராத்திரி பல சிறப்புகளை கொண்டது என்பதனால் அன்றைய தினம் விரதம் இருந்து கண் விழித்து ஈசனை வழிபட்டால் பல நன்மைகளை பெறலாம் மகா சிவராத்திரியன்று விரதம் இருந்தால், மூன்று பிறவியில் செய்த பாவங்கள் முழுவதுமாக நீங்கும் என்பது ஐதீகம். மனக் கவலைகள், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள், வறுமை நிலை ஆகியவை நீங்கி, வாழ்வில் எல்லா நிலைகளிலும் மேன்மை பெறுவதற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்தால் போதும்.

இந்த நாளில் ஈசனை யாகம் செய்து வேதம் ஓதிதான் வழிபட வேண்டும் என்ற நியதி இல்லை. அவனை ஒரு நொடி நினைத்தாலே போதும். அத்தனை மகத்துவத்தை கொண்டது இந்த நாள். இதன் சிறப்பை உணர்த்தும் சில கதைகளை இங்கு பகிர்கின்றேன்.

குரங்கொன்று வில்வ மரத்தின் மீதமர்ந்து இரவு முழுவதும் இலைகளை பிய்த்து கீழே போட்டுக்கொண்டே இருந்தது. இலைகள் விழுந்த இடத்தில் இறைவனின் லிங்கத் திருமேனி எழுந்தருளிய அன்றைய இரவே மகா சிவராத்திரி என்றும் விடியும் வேளையில் அறியாமல் செய்த வில்வார்ச்சனைக்கு இறைவன் குரங்கை மறுபிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்க அருள் செய்தார். அவ்வாறு சக்கரவர்த்தியாய் பிறந்தவரே முசுகுந்த சக்கரவர்த்தி.

தனக்கு வாய்த்த வரத்தை அறிந்ததும் முசுகுந்தர் வேண்டிக்கொண்டது என்ன தெரியுமா…?

“அறியாமல் சிவ பூஜை செய்த குரங்குக்கே இறைவன் இவ்வளவு பெரிய பதவியை அருளியிருக்கிறார் என்றால், அறிந்தே சிவபூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் எவ்வளவு இருக்கும் என்று இந்த உலகம் அறிந்துகொள்ள சக்கரவர்த்தியாய் பிறந்தாலும், தன் குரங்கு முகம் மாறக்கூடாது” என்று வேண்டிக்கொண்டார்.

அதனால்தான் நன்மைகளை அறியாமல் செய்தால் கூட நன்மையே உண்டாகும் என்கின்றனர் பெரியோர்கள்.

இதேபோல இன்னொரு கதை… சித்ரபானு மன்னன் அரசவையில் ஒரு சிவராத்திரியன்று அங்கு வந்த முனிவர்களினால் கூறப்பட்ட கதை.

வேடன் ஒருவன் வேட்டையாடச் சென்றான். இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு புலியைக் கண்டான். அவனை பார்த்ததும் புலி துரத்தியது. புலிக்கு பயந்த வேடன் கிடுகிடுவென்று ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான்.

கீழே புலி காத்துக்கொண்டிருந்தது. வேடனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது. கிளையில் படுத்து தூங்கலாம் என்றால் தூக்கத்தில் கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடுவோமோ என்ற பயம் அவனுக்கு.

எனவே, தூக்கம் வராதிருக்க மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தான்.

அந்த மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மேல் விழுந்துகொண்டிருந்தன.

அன்று சிவராத்திரி. வேடன் அந்த ராத்திரி முழுவதும் தூங்காமல், உணவு எதுவும் சாப்பிடாமல் வில்வ இலைகளை பறித்து சிவலிங்கத்தின் மீது போட்ட ஒரு செயல் சிவனுக்கு அர்ச்சனையாக சிவனை போய் சேர்ந்தது.

தன்னை அறியாமல் சிவராத்திரி விரதம் இருந்த வேடனின் முன்னால் புலியின் உருவம் மாறி சிவபெருமான் காட்சியளித்தார். வேடனின் செயலை பாராட்டி மோட்சப் பதவி அருளினார். இந்தக் கதையை ரிஷிகள் சொல்லக் கேட்ட மன்னன் புன்னகை செய்தான்.

“முன் பிறவியில் நான்தான் அந்த வேடன். சிவராத்திரி புண்ணியம் காரணமாக இப்பிறவியில் சக்கரவர்த்தியாக பிறந்திருக்கிறேன்” என்று சித்ரபானு மன்னன் அஷ்ட வக்ர ரிஷியிடம் சொன்னானாம்.

மஹா சிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். நாள் முழுவதும் அலைந்தும் கூட ஒரு விலங்கும் வேட்டைக்கு அகப்படவில்லை.

அதனால் பசியில் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி வருந்தினான்.

வேடன் வழியிலிருந்த நீர்நிலையில் நீர் அருந்தினான். ஏதாவது விலங்கு அந்த நீர்நிலைக்கு வரும். அதை கொன்று எடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் சிறிது நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரத்திலேறி உட்கார்ந்துகொண்டான்.

அது வில்வ மரம் என்பதும், அதன் கீழ் ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது.

வேடன் உறங்காமல் விலங்குக்காக காத்திருந்தான்.

அப்போது ஒரு பெண்மான் நீர்நிலைக்கு வந்தது. முதல் சாமம் முடிவடையும் அந்த நேரத்தில் மானைக் கண்ட வேடன் அம்பை எடுத்து வில்லில் பூட்டினான். அவனது அசைவினால் ஒரு வில்வ இலையும் சிறிது தண்ணீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

வேடன் தன்னை குறி பார்ப்பதை அறிந்த மான் “வேடனே, என் இளம்குட்டிகள் என்னை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும். எனக்கு கொஞ்சம் அவகாசம் தா” என்றது.

மானின் வேண்டுகோளுக்கு வேடன் இசைந்தான். மான் தன் இருப்பிடம் நோக்கி ஓடியது.

அந்த மானை எதிர்பார்த்து தூங்காமல் காத்துக்கொண்டிருந்தபோது மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது. அதைக் கொல்ல அம்பை எடுத்தபோது வில்வ இலையும் தண்ணீரும் லிங்கத்தின் மீது விழுந்தன. அது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம்.

ஓசையைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மான் வேடன் தன் மீது குறி வைப்பதைக் கண்டு திகைத்து “வேடனே, என்னை கொல்லாதீர்கள். என் மூத்தாளைத் தேடி இங்கு வந்தேன். அவள் குட்டிகள் என் பொறுப்பில் இருக்கின்றன. அவற்றை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு நீங்கள் என்னைக் கொல்லலாம்” என்றது. வேடன் அதற்கும் அனுமதி தந்தான்.

மூன்றாம் சாமம் முடியும் வேளையில் ஓர் ஆண் மான் நீர் பருக வந்தது. அதை கண்ட வேடன் வில்லை எடுத்தபோது, வில்வ இலையும் சிறிது நீரும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

வேடன் தன்னை கொல்லப்போவதை அறிந்த ஆண்மான், “ஐயா, என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு என்னை கொல்லுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டது. அதற்கும் அனுமதியளித்த வேடன், அந்த மான்கள் ஒன்றின் மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தபடி, மான்களை எதிர்பார்த்து உறங்காமல் மரத்தில் அமர்ந்திருந்தான்.

இப்படி மூன்று மான்களுமே விவாதித்தன. இறுதியில் மூவருமே வேடனிடம் செல்வதென்று தீர்மானித்தன.

பெற்றோர்கள் பலியாக செல்லும்போது தாங்களும் உயிர் வாழ விரும்பவில்லை என கூறி, குட்டி மான்களும் அவற்றை பின்தொடர்ந்து சென்றன.

நான்காவது சாமம் முடிவடையும் நேரம். மான்கள் கூட்டமாக வருவதைக் கண்ட வேடன் மகிழ்ந்து வில்லையும் அம்பையும் எடுத்தபோது, சிவலிங்கத்தின் மீது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தன.

நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்கிறோம் என்றோ பூஜையின் மகிமை பற்றியோ அறியாமல் வேடன் பூஜை செய்திருக்கிறான்.

நித்திரையின்றி செய்த இந்த பூஜையின் காரணமாக சிவனருள் கிட்டி, அவனுக்கு ஞானம் பிறந்தது.

அப்போது சிவபெருமான் அங்கு காட்சியளித்து, “வேடனே, உன்னையறியாமல் செய்திருந்தாலும், சிவராத்திரி விரதம் இருந்த பலன் உன்னை சேரும். அதன் காரணமாக உனக்கு தரிசனம் தந்தேன். நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம்” என்றார். ஈசனைப் பணிந்த வேடன் “ஐயனே, என் பாவங்களை போக்கியருள வேண்டும்” என்றான்.

அவ்வாறே அருளிய சிவபெருமான் பல செல்வங்களையும் அவனுக்கு வழங்கி, “வேடனே, இனி உன் பெயர் குகன். ஸ்ரீமந் நாராயணன் சிறிது காலத்தில் இப்பூவுலகில் பிறந்து, இங்கு வருவார். அவர் உன்னை சகோதரராக ஏற்றுக்கொள்வார்” என்று ஸ்ரீராமர் அவதாரத்தை குறிப்பிட்டுக் கூறி, சிவராத்திரி விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார்.

சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் விலங்கு உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று, சிவபதவி அடைந்தன. வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக வரலாறு.

இவையெல்லாம் நமக்குத் தெரிவிக்கும் செய்திகள் இரண்டே இரண்டு தான். ஒன்று, இரவெல்லாம் விழித்திருப்பது… இரண்டாவது, இறைவனை வழிபடுவது…

ஒவ்வொரு காலத்துக்கும் வழிபட வேண்டிய மூர்த்தங்கள், பூஜைப் பொருள்கள், நைவேத்தியங்கள் ஆகியவற்றை ஆகமங்களில் வகுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலத்துக்கான பூஜை தரிசனத்துக்கும் ஒவ்வொரு விசேட பலன் உண்டு.

நாம் ஆகம வேத முறைகளை கடைபிடிக்காவிடினும் ‘சிவனே’ என்று எம் பெருமான் நாமத்தை உச்சரித்தாலே போதும். ‘சிவ’ என்னும் வார்த்தையை சொல்ல சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

எளிதில் அனைவராலும் சொல்ல முடிகிற மந்திரம் சிவ மந்திரம். சிவ மந்திரத்தை தவறாமல் உச்சரித்து, சகல செல்வங்களையும் இந்த சிவராத்திரி விரத நன்னாளில் நாமும் பெறுவோம்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More