செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு வணக்கம் இலண்டனில் வெளிவந்த தொடர் நாவலுக்கு தாயகத்தில் உயரிய விருதுகள்

வணக்கம் இலண்டனில் வெளிவந்த தொடர் நாவலுக்கு தாயகத்தில் உயரிய விருதுகள்

3 minutes read

மகாலிங்கம் பத்மநாபன் எழுதிய “அது ஒரு அழகிய நிலாக்காலம்” நாவலுக்கு 2023ம் ஆண்டுக்கான வட மாகாணத்தின் சிறந்த நாவலுக்கான விருதினைப்பெற்றுள்ளது. வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு இலக்கிய விருதுகள் வழங்கி வருவது அறிந்ததே.

வணக்கம் இலண்டன் இணையத்தளத்தில் ஓய்வுநிலை அதிபரான மகாலிங்கம் பத்மநாபன் அவர்கள் தனது பிறந்த கிராமமான பெரிய பரந்தன் மற்றும் அதன் இணைக்கிராமங்களான செருக்கன், குஞ்சுப்பரந்தன் ஆகிய பிரதேசங்களின் தோற்றங்களும் அவற்றின் வளர்ச்சியும் எழுச்சியும் பற்றி சிறு புனைவுடன் உண்மை வரலாற்றை தொடர் நாவலாக எழுதியிருந்தார். வாரம்தோறும் இணையத்தளத்தில் வெளிவந்த இந்த நாவல் உலகமெல்லாம் வாழும் தாயக மண்ணை நேசிக்கும் அனைவராலும் ஆர்வமுடன் வாசிக்கப்பட்டது.

வட மாகாணத்தின் சிறந்த நாவலுக்கான விருதினை கிளிநொச்சியில் நடைபெற்ற பண்பாட்டு விழாவில் பெற்றுக்கொண்டபோது…

பெரிய பரந்தன், செருக்கன், குஞ்சுப்பரந்தன் ஆகிய  மூன்று கிராமங்களும் கிளிநொச்சியின் மேற்கு பக்கமாக பூநகரி செல்லும் பாதையில் A9 வீதியில் இருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் உள்ளன. சுமார் 120 வருடங்கள் வரலாற்றைக்கொண்ட இந்த கிராமங்களை நாவலாசிரியரின் மூதாதையரும் அவரது நண்பர்களும் எவ்வாறு உருவாக்கினார்கள் என்பதுபற்றி நாவல் அழகான எழுத்து நடையுடன் விபரிக்கின்றது. வன்னிப்பிரதேசத்தில் காடுகளை எப்படி களணிகளாக்கி செழிப்பான வாழ்வினை மக்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவினை இந்த நாவல் தன்னகத்தே கொண்டுள்ளது.

சுமார் 52 வாரங்கள் தொடர்ந்து வெளிவந்து பின்னர் நூலுருப்பெற்றபோது, நாவலாசிரியர் தற்போது வசித்துவரும் கிளிநொச்சி, பரந்தன் குமரபுரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபத்தில் 2022ம் ஆண்டு மிகவும் சிறப்பாக வெளியீடு செய்யப்பட்டிருந்தது. தொல்லியல்துறைப் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், எழுத்தாளர் வெற்றிச்செல்வி, கவிஞர் கருணாகரன், ஆசிரியர் ப தயாளன் ஆகியோர் நூல்பற்றி ஆழக்கமாகப் பேசியிருந்தார்கள். வெளியீட்டு விழாவில் இன்றும் வாழ்ந்துவருகின்ற நாவலின் கதைமாந்தர்களை அழைத்து சிறப்புப் பிரதிகள் வழங்கிவைத்தமை இன்னுமொரு வரலாற்றுப்பதிவு. கதையின் களமான அந்த மூன்று கிராமங்களின் மக்கள் ஒன்றிணைந்து அந்த விழாவைக் கொண்டாடினார்கள். இதனையிட்டு வணக்கம் இலண்டனும் பெருமையும் நிறைவும் கொள்கின்றது.

2022ல் கிளிநொச்சி, பரந்தன் குமரபுரத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில்

அத்துடன் 2023ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் அதிஉயர் விருதான அரச இலக்கிய விருதுக்காக சுயநாவல் துறைக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதித் தேர்வில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இலங்கை அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட போது…

கடந்த வாரம் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் நடாத்திய புத்தகக்கண்காட்சியில் “அது ஒரு அழகிய நிலாக்காலம்” நூல் அறிமுகம் நடைபெற்றதுடன்  வேல்நயன் நயனீசன் அறிமுக உரை வழங்கியிருந்தார். தேசிய கலை இலக்கியப் பேரவையைச் சேர்ந்த சோ தேவராஜா, ந இரவீந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தேசிய கலை இலக்கியப் பேரவையினால் கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில் நடாத்திய புத்தகக்கண்காட்சி

எழுத்தாளர் மகாலிங்கம் பத்மநாபன் அவர்களுக்கு வணக்கம் இலண்டன் ஆசிரியர் குழு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர் நாவல் ஆரம்பிக்கும்போது வணக்கம் இலண்டனால் வெளியிடப்பட்ட விளம்பரம்.

ஆசிரியர் குழு – வணக்கம் இலண்டன்

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More