* இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம்
* “Meet & Greet the Maestro, Isaignani Ilayaraja” இம்முறை இல்லை
* பாடகர் எஸ்.பி.பி சரண் கலந்துகொள்வது தொடர்பில் 90 வீதம் சந்தேகம்
கடந்த ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடக்கவிருந்த இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான் ” இசை நிகழ்ச்சி அவரது புதல்வி பவதாரணியின் திடீர் மறைவு காரணமாக பிற்போடப்பட்டது.
இந்நிலையில், பிற்போடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சியானது கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் முதல் முறையாக பிரம்மாண்டமான முறையில் இசைஞானி இளையராஜாவின் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (18) மாலை 04.00 மணிக்கு கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான் ” இசை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மெகா மியூசிக் இவெண்ஸின் (MEGA MUSIC EVENTS) உரிமையாளர் பணிப்பாளர் ரட்ணம் பாஸ்கர் நேரடியாக கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அத்தோடு, இந்தியாவிலிருந்து சூம் (zoom) செயலியூடாக பாடகர் மனோ, மது பால கிருஷ்ணன் மற்றும் பாடகி சுவேதா மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
ஆரம்பத்தில் பேசிய மெகா மியூசிக் இவெண்ஸின் (MEGA MUSIC EVENTS) உரிமையாளர் பணிப்பாளர் ரட்ணம் பாஸ்கர்,
நான் மெகா மியூசிக் இவெண்ஸின் ஊடாக 14 வருடங்களாக உலக முழுவதும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் நிகழ்ச்சிகளை ஒழுங்குப்படுத்தி வருகிறேன்.
இந்நிலையில், இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்திற்கு ஒரு நிகழ்சியை செய்ய எத்தணித்தோம். அத்தோடு இலங்கைக்கு இசைஞானி இளையராஜா வருகை தருவதில் மிகுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கொழும்பில் நடக்கவிருந்த இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான் ” இசை நிகழ்ச்சி, அவரது புதல்வி பாவதாரணியின் திடீர் மறைவு காரணமாக பிற்போடப்பட்டது.
இந்நிலையில், பிற்போடப்பட்ட இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜா தான்” இசைநிகழ்ச்சி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்களை இன்னும் நாங்கள் ஆரம்பிக்கவில்லை. அடுத்தவாரம் ஆரம்பிக்கவுள்ளோம்.
இசை நிகழ்ச்சிக்கான 60 வீதமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை புக் மை சோ, தேவி ஜுவல்லரி, வெள்ளவத்தையில் உள்ள மகாராஜா புட் மற்றும் டிக்கெட்டுகள் தொடர்பாக அறிந்து கொள்ள தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும்.
ஆரம்பத்தில் இருந்த கலைஞர்கேளே குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றுகிறார்கள். அதில் எஸ்.பி.பி சரண் தொடர்பில் 90 வீதம் சந்தேகம் உள்ளது. அவருக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்கின்ற காரணத்தினால் பேச்சு வார்த்தை இடம் பெற்று வருகிறது. அவர் இல்லாத பட்சத்தில் வேறுவொருவர் நிகழ்ச்சியில் இணைவார்.
அத்துடன், விடுதலை படத்தில் 3 பாடல்களை பாடிய அனன்யா என்ற புதிய பாடகி முதன் முறையாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
முன்னதாக ஆயத்தம் செய்த “Meet & Greet the Maestro, Isaignani Ilayaraja ” இம்முறை வைப்பதற்குரிய சந்தர்ப்பம் இல்லை என்றார்.
பாடகர் மனோ பேசுகையில்,
நீண்ட இடைவெளியின் பின் ராஜா சேரோடு (இளையராஜா) இணைந்து இசை நிகழ்ச்சியில் பங்குகொள்வதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை ரசிகர் பெருமக்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோசம்.
ஒரு கலைஞனுக்கான முதல் அழைப்பு இலங்கை தமிழர்கள் தான் கொடுப்பாங்க. உதாரணத்துக்கு என்னை எடுத்துக்கொண்டால் முதல் பாடலான “சொல்ல துடிக்குது மனசு…” என்ற பாடலை 1986 ஆம் ஆண்டு பாடினேன். பாடி 4 மாதத்தில் இலங்கை மக்கள் என்னை அழைத்து நிகழ்ச்சி தந்து மரியாதை செய்யதார்கள். அது மட்டுமல்லாது இலங்கை மக்கள்பெரிய மனசுகாரங்க. எனது இசை பயணம் 40 வருட காலம் தொடர்வதற்கு இலங்கை ரசிகர் பெருமக்களின் பங்கு உண்டு.
எஸ்.பி.பி சேரோட பாடலை பாடி மகிழ்விப்பேன். அனைவரையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்த பாஸ்கரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றார்.
பாடகர் மது பாாலகிருஷ்ணன் பேசுகையில்,
இந்தியாவிலுள்ள பிரபல பாடகர்களுடன் இளையராஜா சேரோட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
என்ன பாடல் பாட போகிறோம் என்பதை சொல்ல முடியாது. ஏனென்றால் நாங்கள் என்ன பாடல்கள் பாடவேண்டும் என ராஜா சேர் தான் சொல்லுவார். அதை ஒத்திகை பார்க்கும் போது தருவார் என்றார்.
பாடகி சுவேதா மோகன் பேசுகையில்,
இளைய ராஜா சேரோட நிகழ்ச்சிகள் பண்றது வாழ்க்கையில் முக்கியமான தருணங்களாக நினைக்கிறேன். இலங்கையில் நடக்கும் இசை நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாக இருக்கும். இலங்கை தமிழ் மக்கள் தமிழ் இசைத்துறையை அதிகம் நேசிப்பவர்கள்.
இளைய ராஜா சேரோட இசை நிகழ்ச்சியில் நானும் ஒரு ரசிகை. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எப்போதும் சிறப்பாக பாட எண்ணுவேன். ஜனாகி அம்மா, சித்ரா அக்கா பாடல்களை தான் அதிகமாக பாடுவேன். மேடையில் பாடல்களை பாடி முடித்து விட்டு மற்றைய பாடகர்கள் பாடும் பாடலை ரசித்துக் கொண்டு இருப்பேன். இசையை ஒவ்வொரு நொடியாக ரசிப்பேன்.
இளைய ராஜா சேர் மேடையில் சொல்லும் விடயங்களை ரசிப்பேன். அது ஒவ்வொரு மேடையிலும் புதிதாக இருக்கும். சேர் பாடல்களை கலந்து தான் தருவார். அவர் தெரிவு செய்து தரும் பாடலை தான் நாங்கள் பாடுவோம். இரண்டு நிகழ்ச்சிகளும் வித்தியாசமாக இருக்கும். வேறு வேறு பாடல்கள் இடம்பெறும் என்றார்.